இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்


சென்னை:பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் வெளியான, "விஸ்வரூபம்' படத்தை, இணையதளம் மற்றும், திருட்டு வி.சி.டி.,யிலும் வெளிவந்துள்ளதாக புகாரை அடுத்து, போலீசார் பல இடங்களில் சோதனை நடத்தினர்.தனியார் நிறுவனம் மூலமும், தடுப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் கமல் நடித்து, இயக்கி வெளிவந்துள்ள படம், "விஸ்வரூபம்'. இந்த படத்தில், இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில், காட்சிகள் உள்ளதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகள், படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசும், ஐகோர்ட்டும் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.இந்நிலையில் இந்தப்படம், வெளிநாடுகளிலும், தமிழகம், புதுச்சேரி தவிர, வெளிமாநிலங்களிலும் வெளியாகி உள்ளது. அங்கிருந்து திருட்டுத்தனமாக இந்தப் படத்தை, திருட்டு வி.சி.டி.,யாக தயாரித்து, மர்மக் கும்பல், இணையதளம் வாயிலாகவும், வி.சி.டி.,யாகவும் புழக்கத்தில் விட முயற்சித்தது.

இணையதளங்களில், படத்தின் துவக்கம் முதல், 40 நிமிட காட்சிகள் வெளியானது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென, "சைபர்' கிரைமில், ராஜ்கமல் நிறுவனம் புகார் செய்துள்ளது. "சைபர் கிரைம்' போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.வீடியோ தடுப்பு பிரிவினர், சென்னை பர்மா பஜார், புதுப்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள வீடியோ கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். திருட்டு வி.சி.டி., ஏதும் சிக்கவில்லை என்றும், வேட்டை தொடரும் என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுதவிர, திருட்டு வி.சி.டி.,யைக் கட்டுப்படுத்த, காபிரைட் மீடியா நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. "85 இணையதளங்கள் மூலம், படத்தை வெளியிடும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்துள்ளோம்,' என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோர்ட்டில் இன்று தீர்ப்பு:


"விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், 28ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.இதற்கிடையில், நேற்று முன்தினம், வடபழனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில், "விஸ்வரூபம்' திரைப்படம் நீதிபதி வெங்கட்ராமனுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வரும் நிலையில், படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் வாசன், ""விஸ்வரூபம் திரைப்படம் சம்பந்தப்பட்ட பிரச்னை குறித்து, இஸ்லாமிய அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்க வேண்டும்'' என தெரிவித்து உள்ளார்

No comments: