ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் Akilandeswari Sholavandan

சோழவந்தான் திருமூலநாத சுவாமி

வரலாறு : நூற்றாண்டுகளுக்கு முன்பு, மக்கள் இறை பக்தியில் நாட்டம் இல்லாது இருந்தபோது, அவர்களை இறை பக்தியில் ஈடுபடுத்திட வேண்டுமென ஈசனும் உமையாளும் முடிவெடுத்தனர். அதன்படி மக்களிடம் இறை உணர்வினை ஏற்படுத்திட யாரை அனுப்புவது என நந்திகேஸ்வரரிடம் கேட்டபோது சுந்தரரை அனுப்பும் படி அவர் கூறினார். அதன் படி சுந்தரர் பூமிக்கு வர ஒரிடத்தில் மாடு மேய்ப்பவன் ஒருவன் இறந்து கிடக்க அவனைக் சுற்றி மாடுகள் அழுது கொண்டிருந்த காட்சியைக் கண்டு மனம் இறங்கி அவனது உடலில் புகுந்து மாற்று உரு பெற்றார். அவனது உருவிலேயே வீட்டிற்கு சென்ற அவர் வந்த காரியம் நிறைவேற்றாது இருந்தார். இ‌தனைக் கண்ட ஈசன் சுந்தரரின் வேலையினை உணர்த்த முனிவர் வேடத்தில் சென்று அவரிடம் யாசகம் கேட்டார்.

சுந்தரர் உணவு ‌கொண்டு வர, அங்கு முனிவர் வேடத்தில் இருந்த ஈசனைக் காணாததைக் கண்டு கலங்கினார். அப்‌போது அங்கே தரையில் கால் தடம் இருந்ததைக் கண்டு அதனைப் பின் த‌ொடர்ந்தார். அத்தடம் நேரே சிதம்பரம் சென்றடைய, அங்கே சிவனே முனிவர் வடிவில் வந்ததை உணர்த்தி இன்று தலம் வீற்றிருக்கும் தென்கரை பகுதியில் திருமூலநாதர் அசரீரி ஒலித்தது.

அதன் பின் இப்பகுதியில் திருமூலநாதர் எனும் பெயரிலேயே சிவாலயம் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.


திருவிழா : இங்கு மாத பூஜைகளுடன், புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆடி பூரம், ஆவணி மூலம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பா‌க ‌கொண்டாடப்படுகின்றன.
சிறப்பு : முகப்பில் அதிகார நந்தி நின்ற கோலத்தில் துணைவியாருடன் காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் அதிகாலையிலேயும் நடை திறக்கப்படுகிறது.
பொது தகவல் : இத்தலத்தில் விநாயகர் கோட்டை விநாயகர் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் சதுர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

பிரார்த்தனை : இத்தலத்தில் உள்ள திருமூலநாதர் அகிலாண்டேஸ்வரி அம்பாளை வணங்கிட, குழந்தைப் பேறு கிட்டும், தீராத நோய்களும், குஷ்ட நோய்களும் தீரும். கல்யாண முருகனை வேண்டி வர திருமணத்தடை நீங்கும், துர்க்கையை அபிஷேகம் செய்து துதித்திட நோய்கள் விலகும், சுரதேவரை அபிஷேகம் செய்து வணங்க தீராத காய்ச்சல் தீரும் என்பதும்,பைரவரை வணங்கி வர கண் திருஷ்டி நீங்கும், ‌கோட்டை விநாயகரை வணங்கிட எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. நேர்த்திக்கடன் : எண்ணிய காரியங்கள் நிறைவேறினால், திருமூலநாதர் அகிலாண்டேஸ்வரிக்கு அபிஷேகங்கள் செய்து, தொட்டில் கட்டி, வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணமும், சுரதேவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து மிளகு பத்து இட்டு, மிளகு, சீரகத்தை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. தல சிறப்பு : சிவ பெருமான், மூலநாதராக வீற்றுள்ள இத்தலத்தில் தனியாக உள்ள அகிலாண்டேஸ்வரி சந்நிதியின் எதிரே சுவர்ண புஷ்பகரிணி எனும் தீர்த்த குளம் உள்ளது. இதன் கரையில் அம்பாள் அகி‌லாண்டேஸ்வரி தவம் புரிந்து சிவன‌ை மணம் புரிந்ததாக வரலாறு கூறகிறது. 
குஷ்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மன்னன் வீரபாண்டியன் இக்குளத்தில் நீராடி தன் நோயினைத் தீர்த்துக் கொண்டதாகவும், அதன் பின் கோயிலை அவன் சீரமைத்ததாகவும் கூறப்படுகிறது. இக்குளத்தி்ல் நீராடினால் தீராத நோய்கள் தீர்வதாகவும், இந்த நீரினை தொடர்ந்து 48 நாட்கள் விரதமிருந்து ஒரிடத்தில் ஊற்றி வர அவ்விடத்தில் வில்வ மரம் முளைக்கும் எனவும், நி‌னைத்த காரியங்கள் நிறைவேறும் எனவும் இன்று வரையிலும் நம்பப்படுகிறது. சிவன் முதன் முதலாக காட்சி தந்த தலமென்பதால், ஆதி சிதம்பரம் என்ற பெயரினைப் பெற்ற தலம் என தல புராணம் கூறுகிறது. அகத்தியர் பொதிகை மலை சென்ற போது மூலநாதரால் உபதேசம் பெற்ற தலம். இத்தலத்தில் புலி சாபம் பெற்ற கந்தர்வன், சாப விமோசனம் பெற்றான்.காசிக்கு சென்றால் முக்தி என்பது போல இத்தலத்திற்கு சென்றாலும் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் மூலவராக சிவன், ஜலதாரையின் மேல் பிரம்மா, கன்னி மூலையில் விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளனர். ஜனகாதி முனிவர்கள் முக்தி பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. 


முகவரி : ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத திருமூலநாத சுவாமி திருக்கோயில், சோழவந்தான் - மதுரை மாவட்டம்.

No comments: