ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை நல்லா கவனிங்களேன்!

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை நல்லா கவனிங்களேன்!

ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒரு குறைபாடுதான் பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். 

தற்போது உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் மிக முக்கியமானது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது.. இந்தியாவில் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். உலகளவில் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. 

சிறந்த பயிற்சியும் கவனமும் 
எந்தக் காரணத்தினால் இந்த ஆட்டிசக் குறைபாடு ஏற்படுகிறது என்பதே கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல குறைகளுடன் இருந்தாலும் ஏதோ ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அந்தத் திறனை வெளிக் கொணர்வது சிறந்த பயிற்சியின் மூலமும் பெற்றோர்களின் கவனத்திலுமே உள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

திறமைகளை கண்டறியலாம் 
பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடின்றி காணப்படுவர். அனைவரிடமும் சகஜமாக பழகாமல் ஓரிடத்தில் அமராமல் சத்தமிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த செயல்பாடுகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பயிற்சிகளை கொடுக்கும்போது அவர்களிடம் பெரும் மாற்றங்களை காண முடிகிறது என்கின்றனர் இவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள். அப்படி பயிற்சியளித்தால் அவர்களிடம் ஒளிந்திருக்கும் அதீத திறன்களைக் கண்டறிய முடிகிறது என்கின்றனர் பயிற்சியாளர்கள். 

பெற்றோர்களின் பங்கு 
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலமே அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனைக் கண்டுகொள்ள முடியும் என்கின்றனர் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறனுடன் காணப்படுகிறார்கள். பேசும் பயிற்சி, பழகும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் மூலம் இவர்களின் குறைகளை ஓரளவு களைய முடியும். 

என்ன அறிகுறிகள்? 
பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும் தாயின் முகம் பார்த்து சிரிப்பது, பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்கவேண்டும். இதையும் மீறி சில குழந்தைகள் பேசத் தெரியாமல் இருப்பார்கள். தவிர 

ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல் இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். 

விளையாடுவதில் சிக்கல் 
18 - 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல், கைகளை உதறிக் கொண்டே இருத்தல், ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு, கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல் போன்றவையும் அறிகுறிகளாகும். 
குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம் உண்டா, இல்லையா என்பதை அறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அவர்களுக்கான பயிற்சியை எளிதில் தொடங்கிவிடலாம். 2 வயதுக்குள் அடையாளம் கண்டுகொண்டால் குணப்படுத்துவது எளிது என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள். 
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து, சரி செய்ய முடியும். அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து, சுயதொழில் கற்றுத்தரலாம். ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு வகை மனநிலை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்,'' என்கின்றனர் நிபுணர்கள். 
இந்தியாவில் 33 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு, இக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக்குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். இது மூளை வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர், சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

1 comment:

Anonymous said...

I have two sons.my younger son is affected by autism.he was diagonised by a doctor and she said that he is in mild stage.he draws well.how can i improve him.in studies he is very weak.please give me some suggestions.i am in sirkali nagai district.