கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன்

ஒரு ஊரு இருந்துச்சு அந்த ஊருல எல்லோரும் உழவர்கள்தான் அது வாணம் பாத்த பூமி அதாங்க மழைபெஞ்சாத்தான் பயிர்செய்யமுடியும் அந்த வருஷம் எல்லோரும் வயல்ல ஏர் ஓட்டி பயிர்செய்ய தயார்செஞ்சு வைச்சுருந்தாங்க ஆனா பாருங்க மழையே வரலை அதனால யாரும் பயிர்செய்ய முடியல அடுத்த வருஷமும் அதேபோல ஏர்ஓட்டி தயாரா இருந்தும் மழைவரல இப்படியே 16 வருஷம் ஆச்சுங்க மழைமட்டும் பெய்யவே இல்லை அதனால இனிமே எங்க மழைவரபோகுதுன்னு யாரும் ஏர்ஓட்டறது இல்லைங்க கடும் பஞ்சம் வேற வந்துருச்சு ஆனாலும் ஒருத்தருமட்டும் வருஷா வருஷம் தவறாம ஏர்ஓட்டுவாரு இந்த 16வது வருஷமும் இவரு ஏர் ஓட்றத பார்த்த இன்னொருத்தர் எந்த நம்பிக்கைல ஏர் ஓட்டறிங்கன்னு கேட்டாராம்

அதுக்கு அவரு சொன்னாறாம் மழைவருமோ வராதோ எனக்கு தெரியாது ஆனா திடீர்னு வந்துச்சுன்னா 16 வருஷமா ஏர்ஓட்றத நிறுத்தின எனக்கு ஏர் ஓட்றது எப்படின்னே மறந்திடும் அப்போ எப்படி என்னால ஏர் ஓட்ட முடியும்னு கேட்டாறாம்

இது மழைக்கடவுளான வருனபகவான் காதுல விழுந்துச்சாம்

ஏன்னா ஒருவேலைய தொடர்ந்து செய்யாம இருந்தா அது மறந்துரும்னு அந்த உழவன் சொன்னது. இவரோட வேலை மழைபெய்ய வைக்கறதுதனே அதுக்குதான் மக்கள் எல்லோரும் நம்மளை கும்பிடுறாங்க இல்லையின்னா நம்மள மதிக்கவே மாட்டாங்களேன்னு பயந்துபோய் அப்ப மழைய பெய்ய வச்சாறாம் அதனால அந்த ஊரு பஞ்சம் நீங்கி செழிப்பா ஆயிருச்சாம்.

இந்த நிகழ்ச்சிக்கப்புறம் தான் உழவன் சொல்லால் ஒழிந்தது வழக்குன்னு ஒரு பழமொழியும் வந்துச்சாம்

நாம உழவர்களப்பத்தி அவங்க சேத்துல கால்வைக்கலன்ன நாம சோத்துல கைவைக்கமுடியாதுன்னு நல்லா பெருமையா பேசுவோம் ஆனா அவங்களுக்கு எதுவுமே செய்யமாட்டோம் உழவர் திருநாள் அன்றைக்காவது அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்

நான் பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும்போது எனக்கு படிக்கறதெல்லாம் மறந்துடுது சார் அப்படின்னு சொல்ற பசங்களுக்கு இந்த கதையத்தான் சொல்லி ஞாபகமறதிங்கறது எல்லோருக்கும் உண்டு நாமதான் படிச்சதெல்லாம் திரும்பவும் அப்பப்போ படிக்கணும் இல்லன்னா கடவுளேயானாலும் மறந்துறுவாங்க நீ போய் நல்லா படி மறக்காதுன்னு சொல்லிருவேன் நீங்களும் உங்க வீட்ல இருக்குற சுட்டிகளுக்கு இந்த கதைய சொல்லி படிக்க சொல்லுங்க நண்பர்களே.

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.

ஒரு நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமாக முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது தப்பிக்க முயல்கையில் உடம்பெல்லாம் காயம், கீறல்,   முள்செடியைப் பார்த்து, “என்ன செடி நீ! பார், உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா ?” என்று திட்டியது.

முள்செடி அதற்கு, “ நண்பா! நான் முள்செடி., எனக்கு குத்துவதைத் தவிர எதற்கும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை” என்றது.

நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.

நல்ல நண்பன்

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,

இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,

நீதி: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

நன்றி: தமிழர்களின் எண்ணகளம்

முன்யோசனை

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்
நரி ஒன்று தாகத்தால் தவித்தது.

எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது…?

தண்ணீரைத் தேடி அலைந்தது.

தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.

‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’

நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.

அங்கு நரி இருப்பதைக் கண்டது.

“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது.

“நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி

ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்…………….!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் …………………..

ஆட்டுக்குட்டியின் தந்திரம்!

மந்தையிலிருந்து  பிரிந்து போன ஒரு ஆட்டுக் குட்டியை
ஓநாய் துரத்தியது.

தப்பிக்க முடியாது என்று தீர்மானமாகத்
தெரிந்ததும், ஆட்டுக்குட்டி, ஓநாயைப் பார்த்து, “”நான்
இனித் தப்ப முடியாது என்பது எனக்குத் தெரியும்.
நான் இன்னும் சிறிது நேரம்தான் வாழப் போகிறேன்.
இறப்பதற்கு முன் என்னை மகிழ்ச்சியாகச் சிறிது நேரம் இருக்க
அனுமதிப்பாயா? சிறிது நேரம் பாட்டுப் பாடேன் நான்
ஆடுகிறேன்,” என்று கேட்டது.



ஓநாயும் அதற்குச் சம்மதித்து, தனது குழலை எடுத்து சத்தமாக
வாசித்தது; ஆட்டுக் குட்டியும் நடனமாட ஆரம்பித்தது.
ஆனால், சில நிமிடங்களுக்குள்ளேயே குழல் இசை கேட்டு,
ஆட்டு மந்தையை மேய்ப்பவர்கள் ஓடி வந்து ஓநாயை விரட்டி
அடித்தனர். ஓடிக் கொண்டே ஓநாயும், “எனக்கு இது தேவைதான்.
வேட்டையாடுவதுதானே என்னுடைய தொழில். அதை விடுத்து
குழல் ஊதியது தவறுதான்!’ என்று சொல்லி வருந்தியது.

—-
நீதி! அவரவர் செய்ய வேண்டிய தொழிலை விட்டுவிட்டு
அடுத்தவர் தொழிலை செய்வது ஆபத்து.நன்றி;சிறுவர் மலர்

கெடுவார், கேடு நினைப்பார்!

ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.

ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.

நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது

ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது

சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது

தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து

ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.

ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .

தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்

தனக்கு தானே ஆப்பு என்பது இதுதானோ ?



ஒரு தச்சன் மரத்தை அறுத்துக் கொண்டிருந்தான்.சாப்பாட்டு நேரம் வந்ததும் அறுத்த பிளவில் சக்கையைத் திணித்து விட்டுச் சாப்பிடப் போனான்.மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு குரங்கு: தச்சன் போனதும் கிழே இறங்கி வந்து சக்கையை ஆட்டி அசைத்துப் பிடுங்கியது.சக்கை வெளியே வந்ததும் பிளவாய் இருந்த மரம் படீரென்று ஒன்று சேர்ந்தது.அந்தப் பிளவில் அகப்பட்டிருந்த குரங்கின் காலும்,வாலும் நசுங்கிப் போயின.

விஷமம் செய்வது சுலபம்,அதனால் ஏற்படும் கெடுதலில் இருந்து தப்புவது கடினம்

மரமும் மனிதனும்

ஒரு மனிதன் காட்டுக்குள் சென்று மரங்களைப் பார்த்து, மரங்களே என் கோடாலிக்கு ஒரு கைப்பிடி கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்டான்.

மனிதன் மீது இரக்கங்கொண்ட ஒரு மரம், தான் கொடுப்பதாகச் சொல்லிற்று. அந்த மரத்திலிருந்து ஒரு கைப்பிடியைத் தன் கோடாலிக்குப் போட்டதும் அங்குள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தான்.

வெகு சீக்கிரம் பல மரங்கள் கீழே விழுந்தன.அதைப் பார்த்த ஒரு கிழட்டு மரம், நம்மவன் ஒருவன் அந்த மனிதனுக்குக் கைபிடி கொடுக்காவிட்டால், இத்தனை மரங்களை அவன் வெட்டிருக்க முடியுமா? என்று பிரலாபித்தது.

சமுகத்திற்கு விரோதமாகக் கோடாலிக்காம்பாக நடத்து கொள்ள வேண்டாம்

கரடியும் நரியும்


கரடி ஒரு நாள் பெருமையாகச் சொல்லியதாவது: மனிதர் சவத்தின்மீது எனக்கு மரியாதை உண்டு,என்னவானாலும் சரி, சவத்தைத் தொட்டு அவமரியாதை செய்வது மட்டும் என்னிடம் கிடையாது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த நரி அடடா,என்ன மரியாதை! சவத்திடம் உள்ள அதே மரியாதையை மனிதர் உயிரோடு இருக்கும்போது நீ காட்டுவாயானால்,நீ சொல்லுவதற்கு அர்த்தமுண்டு என்று இடித்துக் கூறியது.

வீண்பெருமை கொள்ளக் கூடாது

சிறுமியின் பொறுமையும் நற்பண்பும்



ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.

நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.

இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்.”


மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார்.”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும்.கூடவும் கூடாது.குறையவும் கூடாது” என்று கட்டளையிட்டார்.

வேலைக்காரனும் அப்ப்டியே ஆகட்டும் ஐயா என்று கூறினான்.
வேலைக்காரன் அனைவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்து மாளிகை வாசலில் குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் வேலைக்காரனை சூழ்ந்து கொண்டு பெரிய ரொட்டியை எடுப்பதில் குழந்தைகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.எல்லோரும் எடுத்து சென்றது போக மிஞ்சி இருந்த ஒரு சிறிய துண்டை எடுத்தாள்.அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.

இப்படியே நான்கு நாட்கள் நிகழ்ந்தது.எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.ஐந்தாம் நாளும் அப்படியே நிகழ்ந்தது.எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

தன் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி.அந்த ரொட்டியை தன் தாய்க்கு கொடுத்தாள்.ரொட்டியை பிய்த்தாள் தாய் அதில் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்த தங்கக்காசை எடுத்துக்கொண்டு சிறுமி பெரியவரின் வீட்டிற்கு ஓடி வந்தாள்.”ஐயா இது உங்கள் தங்கக்காசு ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாள் அந்த சிறுமி.

‘சிறுமியே உன் பொறுமைக்கும் நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்த தங்கக்காசு,மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்!’ என்றார் பெரியவர்.

துள்ளிக்குதித்தபடி ஓடிவந்த அவள் நடந்ததை அப்படியே தன் தாயிடம் சொல்லி குதூகலித்தாள்!!!

முள்ளம் பன்றியும் ஓநாய்யும்



தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்

ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

நீதி: "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".

யோசிக்காத விவசாயி

விவசாயத்திற்க்கு நரி மேல் கோபம். அவன் கோழிகளை அடிக்கடி பிடித்து எலும்பைக்கூட விட்டு வைக்காமல் தின்றுவிடுகிறது என்று கோபம். இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று ஒருமுறை அதற்காக இரவில் பதுங்கிக் காத்திருந்தான். நரி வந்தபோது அதன்மேல் சாக்கு போர்த்தி லபக்கென்று பிடித்துவிட்டான். பிடித்து என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்தான். அதன் வாலில் மண்ணெண்ணையில் நனைத்த துணியைச் சுற்றிப் பற்ற வைத்துவிட்டான்.

“என் கோழிகளைத் தினறாய் அல்லவா? ஒழிந்து போ!” என்று அதைத் துரத்திவிட்டான்.

நரி தன்னையறியாமல் விவசாயிகளின் வயலுக்குள்ளேயே நுழைந்தது. பயிர் முதிர்ந்து ஒரு பக்கம் நெற்குவியல், மறு பக்கம் வைக்கோல் போட்டு முதிர்ந்த கதிர்கலைக் களையறுக்க காத்திருந்த நேரம் அது. நரியின் வரவால் ஏக்கர் முழுக்க தீ பரவி தானியமெல்லாம் கருகிச் சாம்பலானது.

விவசாயிக்கு நரியைப் பழிவாங்கியதில் நஷ்டம்தான் பன்மடங்கு.

நீதி : பிறரைப் பழிவாங்கும்போது முதலில் தனக்குத் துன்பம் வராமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.

உயிர் காக்கும் தந்திரம்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம்

பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”
அப்பா ஒருகணம் யோசித்தார்.

“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.
மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.
“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’
“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.
“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”
போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”
போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.
“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.
“டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!”
மகன் அப்பாவிடம் சொன்னான்.

“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...
... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”.

செல்போனால் விபரீதம்...உஷார்..

செல்போனால் விபரீதம்...உஷார்..

 எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.
வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.

அதனால் உலகில் 600 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 97 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 2.6 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 92 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.

நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.
செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர்.

வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள். செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.

கோபுரங்களால் கோடி தொல்லை
செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும், தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவிகள்தான். கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.

செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு
செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும். ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.

கழிவறைகளில்…
யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது. தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர். இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர்.

ரயில் கழிவறைகள்என்றில்லை, பேருந்து நிலையம்,மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.

காவல்துறை சொல்வதென்ன?
செல்போனில் வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. முழு சுகம் வேண்டுமா? தொடர்பு கொள்ளவும் என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர், உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் விற்பதற்கில்லை என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.

வெறும் 2 நிமிடங்கள்தான்

சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், ‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை.

அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான். யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்Õ’ என்றார்.

எச்சரிக்கை அவசியம்
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும்.  காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்’ என்றார்.

செல்போனில் ‘நீலம்’
செல்போன் வந்து விட்டபிறகு ஸ்டில் கேமரா, வீடியோ கேமரா எல்லாம் கைக்குள் வந்து விட்டன. சிலர் தங்கள் உறவு காட்சிகளை கூட படம் பிடித்துக் கொள்கிறார்கள். த்ரில் லுக்காக எடுக்கும் தம்பதிகளை விட திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கள்ளக் காதலர்கள் அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கப்படும் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் செய்கின்றனர்.

அங்கிருந்து பல நூறு பேர்களுக்கு பரவி, இன்டர்நெட் மூலம் மாநிலம், தேசம் கடந்து விடுகிறது. ஒரு சிலர் இதனை இணையதளங்களுக்கு விற்று காசாக்கி விடுகின்றனர். இந்த விஷயம் வீட்டில் தெரியும் போது பிரச்னையாகி விடுகிறது. இப்படி குடும்பங்கள் சீர்குலைவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமல்ல நீலப்படம் பார்க்க ஊருக்கு ஒதுக்குபுறமான திரையரங்குகளை தேடிச் செல்வார்கள். செல்போனில் பரவும் செக்ஸ் வீடியோக்களால் இந்த பிட் திரையரங்குகள் நலிந்து விட்டன.

ஆண்மைக்கும் ஆபத்தா…
பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.டி.காமராஜ், ‘செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது.

செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைகிறது. செல்போன்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை’’ என்றார்.

செல்போன் போதை
வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம் கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்

இள நரையை / முடி உதிர்வதை தடுக்க என்ன வழி ?

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்­ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா?

ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.
கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.