இயற்கை முறையில் இனிப்பான லாபம்... கலக்குது கற்பூரவல்லி.

வலுத்தவனுக்கு வாழை... இளைச்சவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது, 'வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய முடியும். ஆனால், எள்ளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்’ என்பதுதான் இதன் பொருள். ஆனால், இக்கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, ''இளைத்தவனுக்கும் ஏற்றதாக இருக்கிறது... கற்பூரவல்லி வாழை!’' என்று குஷியோடு சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.

உள்ளே வருபவர்களை தலை வணங்கி வரவேற்பு கொடுப்பதுபோல் வாழைத்தார்கள் தொங்கிக் கொண்டிருக்க... பசுமையான அந்த வாழைத் தோட்டத்தில் சுப்ரமணியனைச் சந்தித்தோம்.
கை விட்ட விவசாயம்!
''எங்க குடும்பத்தொழில் விவசாயம்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை நான். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுமே, அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 35 வருஷமா விவசாயம் செஞ்சுட்டிருக்கேன். நெல், கேழ்வரகு, கத்திரி, வெண்டை, கரும்பு, வாழைனு பலவிதமான பயிர்களை சாகுபடி செய்வேன். சமயங்கள்ல விவசாயத்துல செலவு கட்டுபடியாகாமப் போய்... நகை, நட்டையெல்லாம் அடகு வைக்க வேண்டியதாயிடும். இப்படி கஷ்டப்பட்டு செய்தாலும், வர்ற வருமானம், அடகுல இருக்கற நகையை மீட்கறதுக்குகூட உதவாதுங்கறதுதான் நெஜம். அடுத்தடுத்து இப்படியே இருந்ததால... நிரந்தர வருமானத்துக்காக 'பால் உற்பத்தி பண்ணலாம்'கற யோசனையோட... வீட்டுல இருந்த நாட்டு மாடுகளை எல்லாம் வித்துட்டு, கலப்பின மாடுகளை வாங்கினேன். ஆனா... பால்ல கிடைச்ச வருமானம்... மாடுகளுக்கு தீவனம் வாங்கறதுக்கே போதல.
வழிகாட்டிய பசுமை விகடன்!
பிறகு, விவசாயத்துல நல்ல லாபம் தர்ற பயிர்களா தேட ஆரம்பிச்சேன். இதுக்காக நிறைய புத்தகங்கள வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த தகவலை வெச்சு, நம்மாழ்வார் நடத்தின இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அதுக்கப்பறம், பக்கத்து வீட்டுக்காரர் மூலமா 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களை சோதனை செஞ்சு பார்த்தப்போ... நல்ல பலன் கிடைச்சுது. அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்துல சின்ன நம்பிக்கை வந்துச்சு'' என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.
நம்பிக்கை கொடுத்த ஜீரோ பட்ஜெட்!
''பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன். பாலேக்கர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தான் எனக்கு விவசாயத்து மேல இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துச்சு. உடனே, ரசாயன உரங்களை நிறுத்திட்டு, முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். முதல் போகத்துல ஒரு ஏக்கர்ல பொன்னி நெல் சாகுபடி செஞ்சேன். 12 மூட்டைதான் (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. தரமில்லாத விதைநெல்லை ஏமாந்து வாங்கிட்டதால, அறுவடை செஞ்ச நெல்லோட நிறம் மங்கலா இருந்துச்சு. அதனால, மார்க்கெட் கமிட்டியில நெல்லை கொள்முதல் செய்யமாட்டேணுட்டாங்க. அப்படியே அரிசியாக்கி விலைக்குக் கொடுத்துட்டேன். நல்ல சுவையாவும், மணமாவும் இருந்ததால... சீக்கிரமே வித்துப்போச்சு.
அப்பறம், தரமான விதைகளை தேடினப்போ... மாப்பிள்ளை சம்பா, பூங்கார் மாதிரியான பாரம்பரிய ரக விதைநெல் கிடைச்சுது. பல தானிய விதைப்பு செய்து, ஜீவாமிர்தம், பழக்கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி... இந்த ரகங்களை சாகுபடி செஞ்சப்போ, ஏக்கருக்கு 25 மூட்டைக்குக் குறையாம கிடைச்சுது.
புயலுக்குப் பிறகும் மகசூல்!
கிட்டத்தட்ட இதேசமயத்துல... ஜீரோ பட்ஜெட் முறையில ஒரு ஏக்கர்ல கற்பூரவல்லி வாழை போட்டேன். அதுல போட்ட ஊடுபயிர் மூலமா கிடைச்ச வருமானத் துலேயே சாகுபடி செலவை முடிச்சுட்டேன். ஜீரோ பட்ஜெட்ங்கறதால... செலவும் குறைவுதான். வாழை நட்டு நாலு வருஷமாச்சு... மறுதழைவு மூலமாவே பலன் எடுத்துட்டு இருக்கேன். மரங்கள் நல்ல திடமாவே வர்றதால... முட்டு கொடுக்குறதுக்குக்கூட மரம் வெக்கிறதில்லை. 'தானே புயல்’ல எல்லா மரமும் பாதியில முறிஞ்சு போச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். வழக்கமா வாழைத் தோப்புல ஒரே சமயத்துலதான் தார் கிடைக்கும். ஆனா, மரங்களை வெட்டிவிட்டதால... ஒரே மாதிரி இல்லாம வேற வேற சமயங்கள்ல தார் விடுது. அதனால, 15 நாளைக்கு ஒரு முறை பத்து, பதினைஞ்சு தார், அளவுக்குக் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. இதன் மூலமா... வருஷம் முழுக்க வருமானம் கிடைக்குது.
என்கிட்ட மொத்தம் நாலு ஏக்கர் நிலமிருக்கு. ஒரு ஏக்கர் வாழை போக...
70 சென்ட்ல மாப்பிள்ளை சம்பா, 70 சென்ட்ல இலுப்பைப் பூ சம்பா, 70 சென்ட்ல சீரகச் சம்பா, 20 சென்ட்ல பசுந்தீவனம்னு இருக்கு. 70 சென்ட்ல சிறுதானியம் விதைக்கலாம்னு இருக்கேன்'' என்ற சுப்ரமணியன், கற்பூரவல்லி வாழை சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
அது அப்படியே பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 வாழை!
'கற்பூரவல்லி வாழையின் ஆயுள் காலம் 12 மாதங்கள். நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடவு செய்யலாம். ஏக்கருக்கு 8 மாட்டு வண்டி என்ற கணக்கில், எருவைக் கொட்டி களைத்து, மண் பொலபொலப்பாக மாறும் வரை நன்கு உழுது நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு ஏர் மூலமாக, இரண்டு அடி இடைவெளியில் பார் ஓட்டவேண்டும். 8 அடி இடைவெளியில், செடிக்குச் செடி 5 அடி இடைவெளி என்ற அளவில் பார்களில் அரையடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும் (இடையில் உள்ள பார்களில் ஊடுபயிர் செய்யலாம்). குழியை நான்கு நாட்கள் ஆறப்போட்டு, ஒரு மாத வயதுடைய வாழைக் கன்றை பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நட வேண்டும். ஏக்கருக்கு சுமார் 1,000 வாழைக் கன்றுகள் வரை நடவு செய்யலாம். வாழைக்கு இடையில் உளுந்து, கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு பாரிலும் ஒவ்வொரு வகை ஊடுபயிரை நடவு செய்வது நல்லது.
பூச்சி, நோய் தாக்காது!
தாராளமாக தண்ணீர் விட்டு நடவு செய்ய வேண்டும். அடுத்து, நடவு செய்த 3-ம் நாளில் உயிர்தண்ணீர்விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். ஊடுபயிர்கள் வளர்ந்த பிறகு, களை எடுக்க வேண்டியிருக்காது. அறுவடை வரை 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை, பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். இதேபோல... நடவு செய்த 25-ம் நாளில் இருந்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என்று மாற்றி மாற்றி தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு,
100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஜீவாமிர்தம்; 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா என்று கலந்து தெளிக்க வேண்டும்). 3, 6 மற்றும் 9-ம் மாதங்களில் ஒவ்வொரு மரத்துக்கும் அரை கிலோ அளவுக்கு மண்புழு உரம் வைத்து, மண்ணை அணைத்துவிட வேண்டும். இயற்கை முறையில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவுதான். அப்படியே இருந்தாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பக்கக் கன்றுகள் ஜாக்கிரதை!
2-ம் மாதத்தில் இருந்து 3-ம் மாதத்துக்குள் ஊடுபயிர்களை அறுவடை செய்து விடலாம். அறுவடை முடிந்த செடிகளை அப்படியே, உழவு ஓட்டி மடித்து விட்டால், அவை உரமாகி விடும். 6-ம் மாதத்தில் வாழையில் பக்கக் கன்றுகள் தோன்றும். அவற்றில் வாளிப்பான ஒரு கன்றை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றைத் தோண்டி எடுத்து, நிலத்தில் ஆங்காங்கே மூடாக்காகப் போட்டுவிட வேண்டும். ஒன்பதாம் மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை... தேவையில்லாத பக்கக்கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவற்றை மூடாக்காகப் போட்டுவர வேண்டும்.
குலை தள்ளிய மூன்று மாதத்தில்... அதாவது, 12-ம் மாதத்துக்குப் பிறகு தார்கள், அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிகபட்சம் ஒரு மாதத்தில் அறுவடை செய்து விடலாம். தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு, பக்கக்கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து, இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம்.
ஏக்கருக்கு 90 ஆயிரம்!
சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ''ஒரு தார்ல ஏழுல இருந்து பதிமூணு சீப்பு வரை இருக்குது. ஒரு சீப்புல பதினஞ்சுல இருந்து இருபத்திரண்டு காய் வரை இருக்குது. ஒரு ஏக்கர்ல 1,000 வாழை மரம் நட்டா... சேதாரம் போக, குறைஞ்சது 900 தார் வரை கிடைக்கும். ஒரு கற்பூரவல்லி தார், குறைந்தபட்சமா 80 ரூபாய்க்கும், அதிகபட்சமா
150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே...
900 வாழை தாருக்கும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் செலவு போக, 70 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சி பொங்க செலவு-வரவு கணக்கைச் சொன்னார்!

நிரந்தர லாபம் தரும் காளான் வளர்ப்பு

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். 

நாம் முன்னேற வேண்டு மானால் உலகில் பல வழிகள் இருக்கிறது. பல தொழில்கள் இரு க்கிறது. அதிலும் சுயமாக முன் னேற நினைப்பவர்களுக்கு உதவுப வை சிறுதொழில்கள். அதிக முத லீடு இல்லாமல், விரைவில் தொ ழில் தொடங்க இத்தகைய சிறு தொழில்களே மிகவும் சிறந்தவை யாக இருக்கிறது. பாருங்கள்! சிறு தொழில் செய்து இப்போது நாட்டி ல் பலரும் பெரிய தொழிலதிபர்க ளாக வலம் வந்து கொண்டிருக் கிறார்கள்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளா ன் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர் காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிப ராக மாறிக்கூடிய வாய்ப்பு கள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக் காளான் வளர்ப்ப தன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக் களானின் மருத்துவ பலன்க ளும் அதன் வளர்ப்பு முறைகளும் உங் களுக் காக..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். கார ணம் அசைவ சுவைக்கு நிக ரான சுவை யைத் இது தருவதால்தான். மேலு ம் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ் பேட், பொட்டாசியம் மற்றும் காப்ப ர் போன்ற தாதுச்சத்து க்களும் நிறைந்திருக்கின்ற ன.
உடலுக்குத் தேவையான சத்துக் கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கி யமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.
சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலே யே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.
காளானின் ரகங்கள்:
நம் நாட்டின் காலநிலைக்கு உகந்த து இந்த ரகங்கள் : வெள்ளைச் சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே .-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக் காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை
காளான் குடில் எப்படி அமைப்பது?
ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரை வேய்ந்த சாதாரண வீடே போது ம். 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருந் தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளா ன் வளர்க்கவும் தேவைப் படும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வித்து பரப்பும் அறையின் வெப்ப நிலை: 25-300 செல் சியசும் வெப் பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண் டும். அத்தோடு இந்த இரு அறைகளி லும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண் டும்.
குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர் மா மீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shop களில் கிடைக்கும்.
காளான் வித்து உருவாக்குவது எப்படி?
காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோ துமை, சோளம் ஆகியவை முக் கிய பொருள்களாக பயன்படுகி றது.
சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?
மேற்குறிப்பிட்ட தானியங்க ளை அரை வேக்காடு வேக வை த்து காற்றில் உலர்த்த வேண் டும். அதனுடன் 2% சுண்ணாம்பு ம் கலந்து- காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில் களில் நிரப்ப வேண் டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.
அடுத்து அதிலுள்ள நுண்கிருமி களை அழிக்க குக்கரில் அடு க்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியா க வைக்க வேண்டும்.
பிறகு 15-18 நாட்கள் வயது டைய காளான் வித்தை காளான் தயாரிப் புக்கு பயன் படுத்த வேண்டும்.
குறிப்பு: இத்தனை சிரமத்திற் கு இப்போது காளான் வித்து க்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக் கலாம்.
காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?
காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்: கரும்புச் சக்கை, உமி நீக்கிய மக்கா ச்சோளக் கருது, வைக்கோல்
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீ ரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைக ளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப் பதம் இருக்கும்படி பார்த்துக் கொ ள்ள வேண்டும்.
காளான் பைகள் – படுக்கைகள் எப்படி தயார் செய்வது?
காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திற ந்த பாலீத்தின் பைகளை பயன் படுத்த வேண்டும். இரு பக்க மும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதி யை கிழித்துவிடலாம்.
அந்த பாலித்தீன் பையை ஒரு புறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.
வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்ய வேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பை யை நன்றாக இறுக்கி கட்டி விட வேண்டும். இதற்கு ரப்பர் பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடி லினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விட வேண்டும்.
விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழு வதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காண லாம். பிறகு சுத்தமான கத்தியை க் கொண்டு பாலித்தீன் பையை க் கிழிக்க வேண்டும்.
தினமும் கைத்தெளிப்பான் கொ ண்டு காளான்படுக்கையில் தண்  ணீர் தெளிப்பது அவசியம்.
இப்படி வளர்த்த காளானை எவ் வாறு அடைவடை செய்வது?
பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்ப டும்.
இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண் ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறு வடை செய்துவிட வேண்டு ம். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்கள் விருப்பம் எது வோ அப்படி அறுவடை செய்து கொள்ளல லாம்.
முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போ ன்ற பொருள் கொண்டு காளான் படுகை யை இலேசாக சுரண்டுவிடுவதால், அல்ல து பாலிதீன் பைகளின் நான்கைந்து துளை களை கூடுதலாக இட வேண்டும். ஒவ் வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன் பெறலாம். ஒவ்வொரு பையிலிருந்தும் 600  கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.
எப்படி விற்பனை செய்வது?
(Marketing)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்க ளுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க் கும் விற்கலாம். அருகில் உள் ள ஹோட்டல்களுக்கு கொடு க்கலாம். காளானைக் கொ ண்டு பல வித உணவுப் பொரு ட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக் கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக் கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இர ண்டு நாட்கள் வரைக்கும் வை க்கலாம். இரண்டிற்கு மேற்ப ட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.
செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழி லாக இருக்கிறது. வீட்டிலிருந் தபடியே நமது வருமா னத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகி றது.

முயல் வளர்த்தால் முன்னேற்றம்

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
முயல் குட்டி ஒரு மாசம் வரை தாயுடன் இருக்கணும்.
அதுவரை தாய்ப்பால் குடிக்கணும். முதல்ல... 20 நாளில் குட்டியை பிரிச்சுட்டேன். 40 குட்டிகள் இறந்திடுச்சு. கோவை கால்நடை பல்கலை.யில் முயல் வளர்ப்பு பயிற்சி கத்து கொடுத்தாங்க. அவங்க சொன்னபடி முயல் வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு குட்டியைக் கூட நான் இழக்கல.
முயலையோ, முயல் கறியையோ முதலில் யாரும் வாங்கல. சமைக்கத் தெரியாது; ருசி பழக்கமில்லைனு சொன்னாங்க. நானே அதை சமைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவங்களுக்குக் கொடுத்தேன். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்போ நல்ல கிராக்கி. ஒரு கிலோ ரூ.200க்கு விக்கறேன்.
முயல் இறைச்சி கடைக்காரர்கள் முயலை எடைபோட்டு உயிரோடு வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் இறைச்சியை கிலோ ரூ.250க்கு மேல் விலை வைத்து விற்கிறார்கள்.
4 முயல் குட்டி மூலம் ஒரு ஆண்டில் 300 குட்டிகள் கிடைத்தது. இதன் மூலம் மாதம் சராசரியாக ரூ.4 ஆயிரம் வரை வருவாய். குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க வருவாயும் அதிகரிக்கும்.
இவ்வாறு செல்வம் கூறினார்.
ரூ.25 ஆயிரம் போதும்
ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும்.
கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.
உற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.
வகைகள்
இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும்.
ரோமம் விற்றால் காசு
சிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம்.
முயல் இறைச்சியை பிரியாணி, சில்லி, ரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம். சந்தை வாய்ப்பு ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள், விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.
கறியில் மருத்துவ குணம்
முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.
தினமும் 2 மணி நேரம் போதும்
முயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம்.
கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம்.
முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும்.
கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம்.
பெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும்.
வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?
முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும்.
முயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம்.
பல்கலை.யில் பயிற்சி
கோவை சரவணம்பட்டி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் சிவக்குமார் கூறியதாவது:
குறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது. கிராமத்தில் குறைந்தபட்சம் 10 பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி தேவைப்பட்டால் நேரிலேயே வந்து பயிற்சி அளிக்கிறோம். தகவல் அறிய விரும்புபவர்கள் அருகிலுள்ள கால்நடை பல்கலை பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
முயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும். வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும்.
முயலுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

காடை வளர்ப்பு

Tamil 100 சுயதொழில்கள்'s photo.
காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்ிச, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.
இறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்
மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.
ஜப்பானியக் காடை விற்பனை
ஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.
காடை இனங்கள்
நியூசிலாந்து காடை
பாப் வெள்ளைக் காடை
சைனாக் காடை
மடகாஸ்கர் காடை
கலிபோர்னியா காடை
நியூகினியா காடை
ஜப்பானிய காடை
ஜப்பானிய காடை
ஜப்பானியக் காடை வளர்ப்பு முறை
காடை இனங்களில் ஜப்பானியக் காடை மட்டுமே நம் நாட்டில் இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கலாம். காடைகளைத் தரையில் அதாவது ஆழ்கூள முறை அல்லது கூண்டு முறையில் வளர்க்கலாம்.
ஆழ்கூள முறை
ஒரு சதுர அடியில் ஐந்து காடைக்ள வரை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேற்பட்டு, காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச் செலவு ஏற்படுத்தும். எனவே காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.
கூண்டு முறை வளர்ப்பு
இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும் பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம் இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் வளர்க்கவேண்டும். கூண்டு ஒன்றுக்கு 100 காடைக் குஞ்சுகள் வரை வளர்த்துப் பின் அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம் இரண்டரை அடி அகலம் 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில், கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.
குஞ்சுப்பருவக் கூண்டுகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் இருத்தல் வேண்டும். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5க்கு 1.5 செ.மீ உள்ளதாக இருக்கவேண்டும். கம்பிவலைக்கடியில் தகடுகள் பொருத்தவேண்டும். அப்போது தான் மேல் அடுக்கில் உள்ள காடைகளின் கழிவு கீழ் அடுக்கில் உள்ள காடைகளின் மீது விழாது. இந்தத் தகடுகளில் விழும் கழிவுகளை தினந்தோறும் அகற்றும் படியான வடிவமைப்பு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கூண்டும் 4 அல்லது 5 அடுக்குகள் கொண்டவையாக அமைத்துக் கொள்ளலாம்.
கூண்டு முறை வளர்ப்பு
குஞ்சு பருவக் கூண்டுகளை 90 செ.மீக்கு 60 செ.மீ (3க்கு 2 அடி) என்ற அளவில் உள்ள பிரிவுகளாக அமைக்கலாம். இந்தக் கூண்டில் 100 காடைகளை இரண்டு வாரம் வரை வளர்க்கலாம். இரண்டு வாரத்திற்கு பிறகு விற்பனை ஆகும் வரை (ஆறு வாரம் வரையில்) 125-150 ச.செ.மீ இடவசதி ஒவ்வொரு காடைக்கும் அளிக்கப்படவேண்டும். 14க்கு இரண்டரை அடி அளவுள்ள கூண்டில் 50 காடைகள் வரை வளர்க்கலாம்.
காடைத்தீவனம்
காடைகளுக்கும் கோழித் தீனியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. காடைக்குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26-28 சதவிகிதம் புரதமும், 2700 கி கலோரி / கிலோ எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும். இவ்வகைத் தீவனத்தை 0-6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீவனங்களை மாற்றி பயன்படுத்த திட்டமிடும் பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதம் புரதமும் 2800 கிலோ கிலோரி / கிலோ எரிசக்தி உள்ள தீவனத்தையும் உபயோகிக்லாம். காடைகளுக்கென சில நிறுவுனங்கள் தீவனம் தயாரித்து விற்கின்றன. காடைத்தீவனம் கடையில் வாங்க இயலாத போது காடை வளர்ப்போர் இறைச்சிக் கோழிக்கான ஆரம்பகால தீவனத்தை (Broiler Starter Mash) வாங்கி 75 கிலோ தீவனத்துடன் 5 கிலோ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். இத்தீவனத்தில் தானியங்கள் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவைக் குறைத்து உபயோகிக்கலாம்.
Quail feeding
காடைத்தீவனம்
100 கிலோ காடைத் தீவனம் தயாரிக்க தேவைப்படும் தீவனப்பொருட்கள்
தீவனப்பொருட்கள்
குஞ்சுப்பருவம் வளரும் காடைத் தீவனம் (கிலோ)
மக்காச்சோளம் 27 31
வெள்ளைச் சோளம் (அ) கம்பு 15 14
எண்ணெய் நீக்கிய அரிசி தவிடு 8 8
கடலைப் பிண்ணாக்கு 17 17
சூரிய காந்தி பிண்ணாக்கு 12.5 12.5
சோயா மொச்சை தூள் 8 -
மீன்தூள் (உப்பு இல்லாதது) 10 10
தாது உப்புக்கள் 2.5 2.5
கிளிஞ்சல் தூள் - 5.0
100 100
வைட்டமின் தேவையான அளவு கலக்கப்படவேண்டும.
இனப்பெருக்கம்
காடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
Quail Egg
காடை முட்டைகள்
கோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.
குஞ்சு பராமரிப்பு
காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான் இருக்கும். இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப் புரூடர் வெப்பம் அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்ிகன் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.
ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நோய்கள்
காடைக்குஞ்சுகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் அதிகம் இருக்கக்கூடும். குஞ்சு பொரிப்பகங்களில் முட்டையிடும் காடைகளுக்குப் போதுமான அளவில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அளிக்கப்படாததால் இவ்வாறு நேரலாம்.
நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள்
தொப்புள் அழற்சி
ஈகோலி நோய்
காடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள்
நுரையீரல் அழற்சி
பூசண நச்சு.
மேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம். இருப்பினும் கோழிகளை விடக் காடைகள் இந்நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டவையாக இருப்பதனால், இவ்வகை நோய்களுக்கு எதிராகத்தடுப்பு முறைகள் ஏதும் எடுக்கவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.
எனவே குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர் காற்று வீசாமல் இளம் பருவத்தில் பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம் எப்பொழுதும் தூய்மையான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றைக வகையாகக் கையாண்டால் காடைகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைத்து நோயின்றி அவைகளைப் பாதுகாக்கலாம்.
காடை வளர்ப்பு - இலாபம் நிரந்தரம்
காடை எங்கு வளர்க்கலாம்?
எங்கும் வளர்க்கலாம். பட்டிதொட்டி முதல், பட்டிணம் வரை அனைத்து இடங்களிலும் வளர்க்க ஏற்ற வகை இது. இறைச்சிக் காடை என்று சொல்லக்கூடிய ஜப்பான் காடை வளர்ப்பதன் மூலம் மிகக் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற முடியும்.
ஜப்பான் காடை:
ஜப்பான் காடை என்று கூறப்படும் இக்காடை வகைகளை வளர்க்க மிகக்குறைந்த இடவசதி உள்ளவர்கள் கூட வளர்க்க முடியும். மிக்க் குறைந்த மூலதனத்துடன் தொடங்க முடியும்.
kadai vararppu lapam nirantharam
ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் வரை தீவனத்தை உட்கொள்ளும் சராசரியாக ஆண்காடை 180-190 கிராமும் பெண் காடை 190-210 கிராம் உடல் எடையும் அடைந்திருக்கும். இதுவே விற்பனைக்கு தயாரான நிலை. பெண்காடை ஆண்காடையை விட எடை அதிகமாக இருக்கும். கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற இறகுகளில் கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். ஆண்காடைகளின் கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப்பகுதி இறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

ஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம்… ரெட்லேடி பப்பாளி


கரும்பு, மஞ்சள், வாழை… என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல், அவதிப்படுவதை விடுத்து… சத்தான சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது, தொடர்கிறது. அந்த வகையில், பப்பாளி சாகுபடியில் இறங்கி, லட்சங்களில் வருமனாத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், கோயம்புத்தூர், ‘சின்னக்குயிலி’ கிரமத்தைச் சோந்த முன்னோடி விவசாயி, பாலதண்டாயுதபாணி.
தினமும் வருமானம்!
எனக்கு 15 ஏக்கர் நிலமிருக்கு. ஆயிரம் அடிக்கு பேர்வெல் போட்டு தண்ணீர் எடுத்துத்தான் பாசனம் செய்கிறேன். விவசாயம் கட்டுபடியாகுறதில்லை என்பது உண்மைதான். ஆனால், கொஞ்சம் மாற்றி யோசித்து செய்தால், கண்டிப்பாக நல்ல லாபம் பார்க்க முடியும். இந்தப் பக்கம் எல்லாரும் ராகி, சோளம் ,கம்பு என்று விளைவிக்கும் போது.. நான் பருத்தியை விதைத்தேன். அதன் பிறகு, எல்லாரும் பருத்திக்கு மாறினாங்க. அது கொஞ்சம் சுணங்கிய நேரத்தில் திராட்சை சாகுபடியில் இறங்கினேன். அதன்பிறகு அதே பந்தலில், பாகல், புடலை, பீர்கன் என்று சாகுபடி செய்தேன். அடுத்து வாழை விவசாயத்திற்கு மாறினேன். ஒப்பந்த அடிப்படையில் பால் பப்பாளி சாகுபடி செய்தேன்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இப்போது மூன்று வருடமாக பழத்துக்காக பப்பாளி சாகுபடி செய்கிறேன். இதில் தினமும் வருமானம் கிடைக்கிறதே என்றார்.
ஏழு அடி இடைவெளி!
ரெட் லேடி ரகத்தின் வயது 22 மாதங்கள். ஆடி, ஆவணி மாதங்கள் நடவுக்கு உகந்தவை. இது, நல்ல சிவப்பு நிறமும், சுவையும் கொண்ட ரகம். ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும். சாகுபடிக்காகத் தேர்வு செய்த நிலத்தை இரு முறை கோடை உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 10 டன் தொழுவுரம் என்ற கணக்கில் கொட்டி இறைத்து, நிலத்தை சமன் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 900 நாற்றுக்கள் தேவைப்படும். தரமான நாற்றுகளை நர்சரிகளில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு நாற்று 13 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழியெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழியிலும், ஒரு கிலோ நுண்ணுயிர் உரக்கலவையை இட்டு நிரப்பி, நாற்றுகளை நட்டு மண் அணைத்து தேவையான அளவு வட்டப்பாத்திகள் அமைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நேரடிப் பாசனத்தைவிட, சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.
எட்டாம் மாதம் அறுவடை!
நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை (ஒரு ஏக்கருக்கு ) கொடுக்க வேண்டும். 7-ம் மாதம் வரை பெரிதாக பராமரிப்புத் தேவையில்லை. 8-ம் மாதம் காய் அறுவடைக்கு வந்துவிடும். தொடர்ந்து 14 மாதங்கள் மகசூல் கொடுக்கும்.
இந்தக் காலத்தில் மாதம் தோறும் ஏக்கருக்கு 150 கிலோ அளவுக்கு பயோ மற்றும் ஆர்கானிக் கலப்பு உரங்களைக் கொடுக்க வேண்டும். வளா்ந்த செடிகளில் இருந்து பழுத்த இலைகள் விழுந்து கொண்டே இருக்கும். மரங்களின் அடியில் விழும் இலைகள் மட்கி, அந்த மரத்துக்கே உரமாகி விடும்.
பூச்சிகள்.. கவனம்!
பப்பாளியை அதிகம் தாக்கி சேதப்படுத்துவது மாவுப்பூச்சிகள்தான். ஒட்டுண்ணிகளை விடுவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
இலைச்சுருட்டுப் புழு, வெள்ளை ஈக்கள் ஆகியவற்றின் தாக்குதலும் பழ அழுகல் நோயும் அதிகமாக வரும். இவற்றைக் கட்டுப்படுத்த, 15 மில்லி பயோ – ஆன்டி வைரஸ் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். நோய் தாக்கும் போது, மட்டும் தெளித்தால் போதுமானது. தலா 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை, செடிக்குச் செடி தூரில் வைத்தால், வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது.
மழைநீர் தேங்கி நிற்காதபடி, வடிகால் வசதி செய்து கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை ஒரு செடிக்கு 100 லிட்டர் நீர் கிடைக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். மரத்தில் உள்ள காய்களின் முகம் பழுக்கும் தருணத்தில், பறிக்கத் தொடங்க வேண்டும்.
விற்பனைக்கு பிரச்னை இல்லை!
திருப்பூர், கோயம்புத்தூர் பக்கம் இருந்து வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து, பறித்து வைத்திருக்கும் பழங்களை எடை போட்டு வாங்கி கொண்டு போய்விடுவார்கள்.
இன்றைக்குத் தேதிக்கு கிலோ 7 ரூபாய் விலைக்கு போகிறது. சராசரியாக வருடத்திற்கு மூன்றரை லட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைத்துவிடும். மகசூல் முடிந்ததும், மரங்களை வெட்டி. ரோட்டா வேட்டர் வைத்து உழுது, நிலத்திற்கே உரமாக்கலாம். ரெட் லேடி பப்பாளிப் பழத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனைக்குப் பிரச்னையே இல்லை.
பப்பாளிப் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை சரி செய்வதற்கும், பெண்களுடைய மாதவிடாய் பிரச்னைக்கும், இது நல்ல பலன் கொடுக்கும். நான் பப்பாளி உற்பத்தியாளர் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். பப்பாளிக்கு அரசாங்கம் தனி வாரியம் அமைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள ரகங்களை வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கித் தர வேண்டும் அரசு நாற்றுப் பண்ணைகளில் பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நம் மூலமாக அரசுக்கு வைத்து, விடை கொடுத்தார்.

வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !

 


தேன்… இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக… என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்… கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்… ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?” என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இருக்கிறது. ஆம், அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே… தட்டுப்பாடுதான்!
தேவை இருக்கும் பொருளுக்குத்தானே மரியாதையும் அதிகம். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரி மலையை அடுத்துள்ள மந்திரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் போல. இவருடைய குடும்பம், கடந்த மூன்று தலைமுறையாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது!
பருத்தி விவசாயியின் வெகுமதி!
அந்தப் பகுதியில் போய் திருஞானசம்பந்தத்தின் தோட்டத் துக்கு வழிகேட்டால்… ‘தேன்காரர் தோட்டம்தானே! என்றபடி அனுப்பி வைக்கிறார்கள். தேன் சேகரிக்கும் பணியில் மனைவி ரேவதியுடன் சேர்ந்து, பரபரப்பாக இருந்த திருஞானசம்பந்தம், நம்மைக் கண்டதும் தேனாகப் பேசத்தொடங்கினார்.
”எங்க அப்பாவோட தாத்தா பேரு கந்தசாமி. வெள்ளைக்காரன் காலத்துல இவர், பருத்தி வியாபாரி. ஊர் ஊரா போயி, விவசாயிகள்கிட்ட பருத்தியை கொள்முதல் செய்றப்போ… பல்லடம் பக்கத்துல ஒரு விவசாயி, பருத்திக்காட்டுல பெட்டிகளை வெச்சு, தேன் சேகரிச்சுட்டு இருந்ததைப் பார்த்திருக்காரு. அதுல ஆர்வமாகி, அவர்கிட்ட இருந்து ஒரு பெட்டியை வாங்கிட்டு வந்து, எங்க தோட்டத்துல வெச்சுருக்கார். அதுல நல்லா தேன் கிடைக்கவும், நிறைய பெட்டிகளை வெச்சு, தேனை சேகரிச்சு விக்க ஆரம்பிச்சுருக்காரு. ஒரு கட்டத்துல நல்ல வருமானம் கிடைச்சதால, பருத்தி வியாபாரத்தைக் கைகழுவிட்டு, முழுநேரமா தேனீ வளர்ப்புல இறங்கிட்டாரு.
‘நல்ல வருமானம் கிடைக்குற தேனீ வளர்ப்புத் தொழில் தன்னோட போயிடக்கூடாது’னு மகள் வழி பேரனான என் அப்பா வேலுச்சாமியையும் பழக்கப்படுத்திட்டாரு.
எங்க அப்பா, இன்னிக்கு வரைக்கும் தேனீ வளர்த்து, வருமானம் பாத்துட்டு இருக்காரு. இப்போ நானும், இதுல இறங்கிட்டேன்” என்று முன்கதை சொன்ன திருஞானசம்பந்தம், தொடர்ந்தார்.
வழிகாட்டிய வானொலி!
”ஆரம்பத்துல அப்பாவும், நானும் எங்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு தேனீ வளத்துக்கிட்டிருந்தோம்.
95-ம் வருஷம், ‘ஆல் இன்டியா ரேடியோ’வுல ‘தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பத்தி ‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பூச்சியியல் துறை பேராசிரியர், முத்துராமன் பேசினாரு. நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கிட்டதும், எனக்கு ஆர்வம் அதிகமாகி… அடுத்த நாளே அவரைப் போய் பார்த்தேன். நிறைய சந்தேகங்களைத் தீர்த்து வெச்சு… அடுக்குத் தேனீ வளர்ப்புல வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துறதையும் சொல்லிக் கொடுத்தார். அப்பறம், பல்கலைக்கழகத்துல தேனீ வளர்ப்புப் பயிற்சி வகுப்புல சேர்ந்து… செயற்கை முறையில ராணித்தேனீயை உருவாக்குற சூட்சமத்தைக் கத்துகிட்டேன். எட்டாம் வகுப்புகூட தாண்டாதவன் நான். இப்ப, என் தோட்டத்துல பல்கலைக்கழக மாணவர்கள் வந்து, தேனீ வளர்ப்புப் பயிற்சியை எடுத்துட்டுப் போறாங்க.
தேனீ வளர்ப்புல பல நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, வழக்கமா செஞ்சுட்டு இருந்த அடுக்குத்தேனீ வளர்ப்பை விட்டுட்டு… அதிக மகசூல் கொடுக்குற இத்தாலியத் தேனீக்களை வளக்க ஆரம்பிச்சேன். இப்போ, நானே, ராணித் தேனீக்களை உருவாக்கி,
புது காலனிகளை ஏராளமா உருவாக்கிட்டிருக்கேன். அதேமாதிரி, வழக்கமா புகை போட்டுத்தான் தேன் எடுப்பாங்க. நான் புகை இல்லாம தேன் எடுக்குற மாதிரி, சின்னதா ஒரு கருவியை உருவாக்கியிருக்கேன். அதன் மூலமா, ஈக்களுக்கு பாதிப்பில்லாம, தேனை எடுக்க முடியுது” என்ற திருஞானசம்பந்தம், தேனீ வளர்ப்பு பற்றிய சில தொழில்நுட்பங்களையும் பகிர்ந்தார். அதை பாடமாகத் தொகுத்துள்ளோம்.
பத்தடி இடைவெளி!
‘3 ஆயிரம் தேனீக்களை உள்ளடக்கிய இத்தாலியத் தேனீப் பெட்டி ஒன்றின் விலை 6 ஆயிரத்து 500 ரூபாய். இதை பூக்கள் அதிகம் உள்ள தோட்டங்களில், நிழலான இடங்களில் ஒன்றரை அடி உயரத்தில் வைக்க வேண்டும். இதற்காக பிரத்யேக ‘ஸ்டாண்டு’கள் உண்டு. ஒரு பெட்டிக்கும் அடுத்தப் பெட்டிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பெட்டியில், எறும்பு, பல்லி போன்றவை ஏறாமல் பார்த்து கொள்ள வேண்டும். பெட்டியை வைத்ததில் இருந்து 130 நாட்களில் 3 ஆயிரம் தேனீக்கள் 12 ஆயிரம் தேனீக்களாகப் பெருகிவிடும். இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு தேனை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் இருந்து, 15 நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
ஒவ்வொரு முறை சேகரிக்கும்போதும், 2 கிலோ அளவுக்குக் குறையாமல் தேன் கிடைக்கும். பெட்டியில் தேனீக்கள் பெருகிய பிறகு, அதிலிருந்து நாமே அடுத்த பெட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். தேனீக்கள் இல்லாத காலி பெட்டி 2 ஆயிரத்து 500 ரூபாய் விலையில் கிடைக்கிறது. ஒரு பெட்டியிலிருந்து மாதம் சராசரியாக
4 கிலோ அளவுக்கு தேன் கிடைக்கும். பெட்டியை ஒரே இடத்தில் வைத்திருந்தால், பெரியளவில் லாபம் பார்க்க முடியாது.
பொதுவாக தேனீ வளர்த்தால், ஆண்டு முழுவதும் தேன் கிடைக்காது என்று சொல்வார்கள். காரணம், தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்கு தொடர்ந்து இருக்காது. அதனால்தான் தொடர்ந்து தேன் எடுக்க முடியாமல் போகிறது.
ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களில் பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும்.’
முருங்கைத் தேனுக்கு கூடுதல் விலை!
தொழில்நுட்பங்களைச் சொல்லி முடித்த திருஞானசம்பந்தம், ”நான், எங்க ஊர்ல இருந்து, 150 கிலோ மீட்டர் தூரம் வரை பெட்டிகளைக் கொண்டு போய் வைக்கிறேன். முருங்கை, கொத்தமல்லி, கடுகு, சூரியகாந்தி, பந்தல் பயிர்கள், தென்னை மாதிரியான பயிர்கள்ல அதிக தேன் கிடைக்கும். அந்த தோட்டங்கள்ல பெட்டிகளை வைக்கும்போது, அந்தப் பயிர்களோட மகசூலும் கூடுது. அதனால, விவசாயிகள் அவங்க தோட்டத்துல பெட்டி வைக்கறதுக்கு ஒத்துழைக்கிறாங்க.
அரவக்குறிச்சி, மூலனூர் பகுதிகள்ல நூத்துக்கணக்கான ஏக்கர்ல செடிமுருங்கை விவசாயம் நடக்குது. அந்தப் பகுதிகள்ல எப்பவுமே அதிக அளவுல தேன் கிடைக்கும். அதனால அந்தப் பகுதிகள்ல பெட்டிகளை வெச்சுருக்கேன். முருங்கைத்தேன் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கறதால, அதுக்கு கிராக்கியும் அதிகம். உடுமலைப்பேட்டை, பல்லடம் பகுதிகள்ல, வருஷம் ஒரு போகம் மானாவாரியா நாட்டுக் கொத்தமல்லி விதைப்பாங்க. அது பூவெடுக்கும் சமயத்துல இந்தப் பகுதிகள்ல பெட்டிகளை வெச்சுடுவேன். பொங்கலூர், சுல்தான்பேட்டை பகுதிகள்ல வெங்காய சாகுபடி அதிகம். இந்த பகுதிகள்லயும் பூவெடுக்குற பருவத்துல பெட்டிகளை வெச்சுடுவேன்.
மாத வருமானம் 1 லட்சம்!
ஒரு பெட்டியிலிருந்து மாசம் சராசரியா 5 கிலோ தேன் கிடைக்கும். 130 பெட்டிகள் மூலமா, மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் கிலோ அளவுக்கு தேன் உற்பத்தி செய்றேன். முருங்கைத் தேன் கிலோ 500 ரூபாய்க்கும், மத்த தேன் கிலோ 250 ரூபாய்க்கும் விலை போகுது. 6,500 ரூபாய் முதலீட்டுல ஆரம்பிச்ச இத்தாலியத் தேனீ வளப்பு மூலமா இப்போ, மாசம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன்” என்று பெருமிதப் பார்வையை வீசினார்.
நிறைவாக, ”தேனீக்களைப் போல நாமும் சுறுசுறுப்பாக இருந்தாதான் இந்த தொழில்ல லாபம் பாக்க முடியும். பெட்டியை வாங்கி வெச்சுட்டு ‘தேமே’னு உக்காந்து இருந்தா… பல நேரங்கள்ல முதலுக்கே மோசம் வந்துடும்” என்கிற எச்சரிக்கையையும் சொல்லி முடித்தார்.

 நிலமே தேவையில்லை…
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் இரா. பிலிப்ஸ்ரீதர் தேனீ வளர்ப்புப் பற்றி சொன்ன தகவல்கள்…
”தேனீ வளர்ப்பு லாபகரமான தொழில்களில் ஒன்று. கையளவு நிலம் சொந்தமாக இல்லாதவர்கள்கூட, தேனீ வளர்ப்பு மூலம் சம்பாதிக்க முடியும். தேனீ வளர்ப்பில், ‘விவசாய ரீதியில் தேனீ வளர்ப்பு’, ‘வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பு’ என இரண்டு முறைகள் உள்ளன.
விவசாய ரீதியாக வளர்க்கும்போது, இந்தியத் தேனீக்களை மட்டும்தான் வளர்க்க முடியும். இவை, அயல் மகரந்த சேர்க்கைக்கு உகந்தவை. இந்தத்தேனீப் பெட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தோட்டத்தில் ஆங்காங்கு வைத்துவிட வேண்டும். இவற்றை இடம் மாற்றக்கூடாது. இம்முறையில், கிடைக்கும் தேனின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அயல் மகரந்தச் சேர்க்கை, நன்றாக நடப்பதால், வயலில் உள்ள பயிர்களில் மகசூல் கூடும்.
வியாபார ரீதியில்… அதாவது, தேன் உற்பத்திக்காக வளர்க்க, இத்தாலியத் தேனீக்கள் சிறந்தவை. இவற்றை அடிக்கடி இடம் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். இவை, அதிக அளவில் உண்ணக்கூடியவை. அதனால், பூக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இவை வாழும்.
‘எந்த மாதத்தில், எந்த ஊரில் என்ன பயிர் இருக்கும்?’ என்ற தகவல்களைத் திரட்டி, ஒரு வரைபடம் தயார் செய்துகொண்டு… அதன் அடிப்படையில் அந்தந்தப் பகுதிகளில் பெட்டிகளை வைத்தால், அதிகளவில் தேன் அறுவடை செய்யலாம். இம்முறையில், குறைந்தது 100 பெட்டிகளாவது வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்ட முடியும். கிட்டத்தட்ட கிடை ஆடு மேய்ப்பது போலத்தான் இத்தாலித் தேனீ வளர்ப்பும். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்தான். ஆடுகளை பகலில் இடம் மாற்றுவோம். தேனீக்களை இரவில்தான் இடம் மாற்ற வேண்டும்.
வில்லங்கமில்லாத விற்பனை வாய்ப்பு !
தேனுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது. முறைப்படி ‘அக் மார்க்’ முத்திரை பெற்று, இதை விற்பனை செய்யும்போது நம்பிக்கை கூடுவதால், விற்பனையும் கூடும். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தினர், அதிகளவில் தேனை கொள்முதல் செய்து, பல்வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். தனியாக, சந்தைப்படுத்த முடியாதவர்கள் இச்சங்கத்தில் விற்பனை செய்யலாம்.
முறையான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், ராணித் தேனீயில் இருந்து ‘ராயல் ஜெல்லி’யை சேகரித்து லட்சக்கணக்கில் வருமானம் பார்க்க முடியும்” என்ற பிலிப்ஸ்ரீதர் நிறைவாக,
”நமது நாட்டில் பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகளவில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெட்டிகளை, பல கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செழிப்பான பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லாரிகளில் ‘நடமாடும் தேன் உற்பத்திக் கூடங்கள்’ இயங்குகின்றன. அதுபோல இங்கும் வசதிகள் ஏற்பட்டால், இன்னும் ஏராளமானோர் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவார்கள்.