--------------------------------------------------------------------------------------------------------
ஜெனகைமாரியம்மன்திருக்கோயில்.
வரலாறு : ரேணுகாதேவி ஜமதக்கினி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன சாயையை நீரிலே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார்.
மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக் கொண்டு வரும் படி கூற அவ்வாறே அன்னையின் தலையை பரசுராமர் கொண்டுவந்தார். இருப்பினும் பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன் என்று கூற முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார். தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி கேட்டார். முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளி்க்க உயிர் பெற்றார். அதனால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அதன் ஆக்ரோஷம் அதிகமாகிறது.
அதன் ஆக்ரோஷம் அடங்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதிவடிமாக மாரி எழுந்தருளிஅருள்பாலிக்கிறாள். இன்னமும் கர்ப்பகிரகத்தில் அம்மனுக்கு பின்புறம் சந்தனமாரி எனும் நின்ற நிலையிலான ஆக்ரோஷ ரேணுகாதேவி காட்சி தருகிறாள்.
திருவிழா : வைகாசி பெருந்திருவிழா - 17 நாட்கள் - கொடி ஏற்றம் - சிங்கவாகனத்தில் புறப்பாடு - 8ம் நாள் தீச்சட்டி - 9ம் நாள் பால்குடம் பூப்பல்லக்கு அன்று இரவு புஷ்பபல்லக்கில் அலங்கார வீதியுலா பூக்குழி இறங்குதல் தை மாத பிறப்பு, சித்திரை வருட பிறப்பு, நவராத்திரி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அம்மனுக்கு நடைபெறும். வருடத்தின் விசேச நாட்களான பொங்கல் தீபாவளி பண்டிகைகளின் போதும் கோயிலில் பெரிய அளவில் பக்தர்கள் வருகை இருக்கும். விஜய தசமி அன்று வைகை ஆற்றில் அம்பு போடுதல் திருவிழா மிகவும் விசேசமாக இருக்கும். அந்த விழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மை.
சிறப்பு : இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
பொது தகவல் : அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியின் வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம்.
பிரார்த்தனை : அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம்.
குழந்தை பாக்கியம், திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
விவசாய செழிப்பு, தொழில் விருத்தி, கல்வி மேம்படுதல் போன்ற பிரார்த்தனைகளும் இத்தலத்தில் நிறைவேறுகின்றன.
கை கால் ஊனம், மற்ற உடல் குறைபாடுகள், பிணி பீடை ஆகியன விலகவும் இத்தலத்து அம்மனை வணங்கினால் தீர்வு கிடைக்கிறது.
நேர்த்திக்கடன் : சிலை எடுப்பு : உருவம் செய்து தொட்டில் கட்டி நேர்த்திகடன் செய்வது. குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து கோயிலை சுற்றி வருகின்றனர். விவசாயம் செழிப்படைய வேண்டிக் கொண்டவர்கள் தானியங்களை கொண்டு வந்து கொட்டி அம்மனுக்கு காணிக்கை செய்கின்றனர். தீச்சட்டி, அலகு எடுத்தல் (முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல்) பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்தல், முத்துச் சொரிதல் ( ஆமணக்கு விதைகளை போடுதல்) முடி காணிக்கை, ஆடு மாடு சேவல்களை காணிக்கை செலுத்தல். ஆயிரம் கண் பானை செலுத்தல், சிலை காணிக்கை, பரிவட்டம் சாற்றுதல், மாவிளக்கு காணிக்கை ஆகியனவும் இத்தலத்தின் புகழ் பெற்ற நேர்த்தி கடன்களாகும். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
தல சிறப்பு : அம்மை நோய் தீருதல் : அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத்துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும்.
தல பெருமைகள் : பசுமை மிகுந்த சோழவந்தான் நகரை சுற்றியுள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிக சிறப்பாக தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மாரி வீற்றிருக்கும் சிறப்பு மிகுந்த தலம். எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகோயில் இது.
வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் சதுர்வேதிபுரம், அனந்தசாகரம், ஜனகையம்பதி என்றெல்லாம் போற்றப்படும் கோயில்.
அனைத்து ஜீவ ராசிகளையும் பரிபாலனம் செய்ய உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐங்கீர்த்தியங்களையும் செய்து பிறவிப்பெரும் பயனை அடைய வைக்கும் ஆலயம்.
முகவரி : அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்- 625 214, மதுரை மாவட்டம்.
--------------------------------------------------------------------------------------------------------
சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில்.
திருவிழா : சித்திரை - சித்ரா பவுர்ணமி - 3 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும, - ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தசாவதாரத்தில் 9 அவதாரங்கள் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். புஷ்ப பல்லக்கில் அலங்கரித்து சுவாமி வலம் பங்குனி பிரம்மோற்சவம் - 11 நாட்கள் - ஸ்ரீ ராம நவமி, மற்றும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி பள்ளியறை புறப்பாடு நடக்கும். தைமாதப்பிறப்பு, நவராத்திரி, வைகுண்ட ஏகாதேசி (சொர்க்க வாசல் திறப்பு) நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். நவராத்திரி, ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரத்தில் விசேசமாக இருக்கும்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியில் வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம். அழகிய ஆஞ்சநேயர் தனி சந்நிதியாக வீற்றிருக்கும் தலம். இங்கு ஆண்டாள் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.
பிரார்த்தனை : கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியன இத்தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனைகள் ஆகும்.விவசாய விளைச்சல் செழிக்க இத்தலத்தில் பலர் வேண்டிக் கொள்வர்.
இத்தலத்து பெருமாளை வேண்டிக் கொண்டால் தொழில் வளம், கல்வி விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியன நிறைவேறுகின்றன.
நேர்த்திக்கடன் : கோட்டை நெல் தருதல் இத்தலத்தின் சிறப்பு வாய்ந்த நேர்த்திகடனாகும். இத்தலத்து வரும் ஏராளமான பக்தர்கள் ஜெய வீர ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துகின்றனர். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தல், துளசிமாலை சாத்துதல், நெய் தீபம் ஏற்றுதல், மாலை சாற்றி வழிபடுதல் ஆகியனவும் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு பக்தர்கள் செய்கின்றனர். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
தல சிறப்பு : இத்தலத்தின் மிகவும் விசேசம் இங்கு அருள் பாலிக்கும் ஜெயவீர ஆஞ்சநேயர் ஆவார். அர்த்தமண்டபத்தின் வலதுபக்கம் தனி சந்நிதியாக வீற்றிருக்கும் இவரை வணங்கினால் நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தருவார். என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆஞ்சநேயரின் வால் பின்புறம் சுற்றி நூனியில் மணி கட்டியிருக்கும் அழகு பார்ப்பவரை மயங்க வைக்கும். இந்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு எந்த காரியத்தை தொட்டலும் ஜெயம் ஆகும் என்பதால் இவர் ஜெயவீர ஆஞ்சநேயர் என்ற பெயர் விளங்குகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை பெருமளவிலான பக்தர்கள் வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள்.பெரிய அளவிலான ராமன் சீதை லட்சுமணன் ஆகியோரது வார்ப்பு விக்ரகம் உள்ளது இக்கோயிலில். புராதன காலத்தில் இருந்தே இருக்கும் கோயில். வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் ஜனகையம்பதி என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள அழகிய கோயில். இங்குள்ள ராமனது விக்ரகம் மிக அழகிய வடிவில் மிக நேர்த்தியாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு.
முகவரி : அருள்மிகு ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில் சோழவந்தான் - 625214 மதுரை மாவட்டம்.
--------------------------------------------------------------------------------------------------------
அருள்மிகு பிரளயநாதசுவாமி திருக்கோயில்
வரலாறு : சில நூற்றாண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், காசியிலிருந்து ஒரு லிங்கம் கொண்டுவந்து, வைகை ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
ஒருசமயம் ஆற்றில் உலகம் அழியும் காலத்தில் (பிரளயம்) ஏற்படுவது போல கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயந்த மக்கள் சிவனை பிரார்த்தனை செய்தனர். சிவன் இரக்கம் கொண்டு வெள்ளத்தை நிறுத்தினார். பிரளயத்தில் காத்தருளியவர் என்பதால் இவர், "பிரளயநாதர்' என்று பெயர் பெற்றார்.
திருவிழா : பிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற திருவிழாக்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
சிறப்பு : செவ்வாய் தோஷம்உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சுவாமி, அம்பாளுக்கென தனித்தனி சன்னதிகள் உள்ளன. அவ்விரு சன்னதிகளுக்கு நேரே நந்திகள் உள்ளன. மூலவர் பிரளயநாதராகவும், அம்பாள் பிரளயநாயகியாகவும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தின் வலப்பக்கம் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கி வலம்புரி விநாயகரும், வள்ளி, தெய்வானையுடன் முருகனும், அனுமன், லட்சுமி ஆகியோர் தனி சன்னதிகளிலும் , சுவாமிக்கு இடப்புறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி எதிரே நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.
இத்தல விநாயகர் பாலகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
பிரார்த்தனை : இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
சுவாமிக்கு இடதுபுறத்தில் எட்டு கரங்களுடன் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்கைக்கு செவ்வாய்கிழமை தோறும் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி செவ்வரளி பூவால் அர்ச்சனை செய்தால் திருமணத் தடை மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை நிர்வத்தியாகும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன் : சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : வில்வ தீபம்: இங்குள்ள முருகப்பெருமான் மிகவும் விசேஷமானவர். கந்த சஷ்டியின்போது, ஆறு நாட்களும் சிறப்பு பூஜை நடக்கும். சஷ்டிக்கு மறுநாள் (ஏழாம் நாள்) 40 படி அரிசியில் தயிர் சாதம் செய்து "திருப்பாவாடை தரிசனம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்குள்ள பைரவரும் விசேஷமானவர்.
இவருக்கு இத்தலத்து விருட்சமான வில்வத்தின் காயை உடைத்து, அதன் ஓடுகளில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர். இதன் மூலம் நம் பக்கம் நியாயமிருக்கும் வழக்குகளில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையும், பாதுகாப்பான வாழ்வைப் பெறலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கியுள்ள ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி, மறுநாள் அந்த வெண்ணெயை பிரசாதமாக வாங்கி அருந்தினால் தீராத வியாதியும் குணமடையும் என்பது நம்பிக்கை.
முகவரி : அருள்மிகு பிரளயநாதசுவாமி திருக்கோயில், சோழவந்தான்- 625215. மதுரை மாவட்டம்.