மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்

மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்!!!

எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம். இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவது எப்படி என்பது குறித்த சில முக்கியமான குறிப்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம். நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோ மனச்சோர்வில் இருந்தால், இவற்றை படிக்குமாறு கூறி, வாழ்வை இனிமையாக்குங்கள்.

உடற்பயிற்சி செய்வது 
மன அழுத்தத்தை நீக்க சிறந்த வழி உடற்பயிற்சி. இது நல்ல உடல் அமைப்பை கொடுப்பது மட்டுமின்றி, நேரிடையான சிந்தனைகளையும் அதிகரிக்கின்றது. உணர்வுகளை சீர்படுத்துகின்ற செரோடொனின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகியவற்றை சுரக்க உடற்பயிற்சி உதவுகின்றது. அதோடு மனச்சோர்வு அளிக்கும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிடுகின்றது.

உதவி கேட்பது 
வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை. வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர்பாப்பது இல்லை. ஆகவே தாய், தந்தை, துணைவர், உடன் பணியாளர் அல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும்.

சமச்சீர் உணவு 
பழங்கள், காய்கரிகள், மாமிசம், தானியங்கள் மற்றும் கார்போ ஹைட்ரேடுகள் ஆகிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல், சிந்தனை சிதறாமல் இருக்க உதவுகின்றன. சமச்சீர் உணவு உடல்நலனையும், மனநலனையும் சீர்படுத்துகின்றது.

சுய விழிப்புணர்வு 
வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாமல், தங்களை அளவுக்கு மீறி அழுத்துவதால் மக்கள் பொதுவாக மனச்சோர்வு அடைகிறோம். எனவே சரியாக தம்மை புரிந்து கொண்டு, அதை சந்தோஷமாக விரும்பி செய்தால், மனச்சோர்வானது நீங்கும்.

எடை குறைத்தல் 
மனச்சோர்வுக்கு அதிகமான எடை பிரச்சனையாக இருந்தால், எடையை குறைக்க முயல்வது ஒரு நல்ல தீர்வைத் தரும். மேலும், உடல் வலிமை ஆரோக்கியத்தையும், சுய கருத்துக்கும் நேர்மறையான சிந்தனையை கூட்டுகின்றது.

நண்பர்கள் 
நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும், தேவையுள்ள நேரத்தில், சொல்வதை காதுகொடுத்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர்மறையான சிந்தனைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.

டைரி எழுதுவது 
தினசரி உணர்வுகளை எழுத்து மூலமாக பதிவு செய்வது சுய பரிசோதனை செய்வதற்கும், ஆராய்வதற்கு ஒரு சிறந்த வழி ஆகும். இவ்வாறு வாழ்க்கையை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அனுதினமும் பதிவு செய்தால், மனச்சோர்வில் இருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

எதிர்மறையான மக்களிடம் இருந்து விலகி இருப்பது 

தொடர்ச்சியாக பிறரை குறைத்து பேசுகிறவர்களோடு இருக்க யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதானத்தையும் கொடுக்கும்.

வேலையை விட்டு விடுதல் 
பிரச்சனைகளின் வேர் வேலையில் இருந்தால், அதை விட்டுவிடுவது மன அமைதியை கொடுக்கும். தனிப்பட்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுக் கொடுக்காமல், குறிக்கோளை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு வேலை ஒரு தடையாக இருந்தால், அதை விட்டு விடுங்கள்.

தனிமையாக இருப்பதை தவிர்ப்பது 
மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமே தவிர, அமைதியடையாது. அதற்காக எப்போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால், அவை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச்சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும்.

சுற்றுலா செல்லுதல் 
எதிர்மறையான சிந்தனைகளை அகற்றுவதற்கு, காட்சி அமைப்பை மாற்றுவது எப்போதுமே உதவியாக இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான சிந்தனைகளை கொண்டு வர ஒருநாள் பிரயாணம் மேற்கொள்வதற்கு ஈடாக எதுவுமே இல்லை. எனவே மனச்சோர்வின் போது எங்கேனும் வெளியே சென்றால், எளிதில் மனச்சோர்வானது நீங்கும்

நேர்மறையான எண்ணங்கள் 
வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடுக்கும் சிந்தனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. மனதிலே எதிர்மறை உணர்வுகள் இருக்கின்றன. சிந்தனைகளை நேர்மறையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச்சோர்வின் தாக்கங்களை அகற்றிவிடலாம்.

மனநல வல்லுநரிடம் பேசுவது 
மனச்சோர்வில் இருந்து வெளிவருவதற்கு மிகவும் எளிதான மற்றும் ஆற்றல் வாய்ந்த வழி மனநல வல்லுநரிடம் பேசுவது தான். இதனால் மனச்சோர்வின் வேரை கண்டுபிடித்து அகற்ற முடியும்.

செல்லப்பிராணியை வளர்ப்பது 
செல்லப்பிராணிகள் தங்கள் எஜமான்களிடம் அற்புதமான வழியில் தொடர்பு கொள்கின்றன. தனியாக வாழ்கிறவர்களை காட்டிலும், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மனச்சோர்வின் தாக்கங்களில் இருந்து பிழைத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. ஆகவே செல்லப்பிராணியுடன் உணர்வுபூர்வமாக தொடர்புகொள்வது, எதிர்ம்றையான உணர்வில் இருந்து வெளிவர உதவும்.

நிகழ்காலத்தில் வாழ வேண்டும் 
இறந்தகால தவறுகளிலும், எதிர்காலத்தின் நிலையின்மையிலும் உழல்வதில் அர்த்தமே இல்லை. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அச்சூழ்நிலையில் உங்கள் உணர்வுகளை செலுத்துவது பலன் அளிக்காது. 'எப்போது',‘எங்கே' மற்றும் ‘நாளை' என்பனவற்றுக்கு பதிலாக, 'இப்போது', ‘இங்கே',‘இன்று' என்பனவற்றில் கவனம் செலுத்துங்கள்.

நன்றாக தூங்குவது 
நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப ஒருவருக்கு தேவைப்படுவது எல்லாம் ஒரு நல்ல உறக்கமே. இரவு தோறும் 7-8 மணிநேரம் உறங்குவது குறைவான மனச்சோர்வுக்கான அறிகுறிகளை காட்டுவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

இசையை கேட்பது 
மனச்சோர்வில் இருக்கும் போது, உணர்வை எழுப்பும் இசையை கேட்பது சோர்வடைந்த மனதிற்கு ஊக்கம் அளிக்கும். உணர்வுகளை மாற்றவும், ஆன்மாவை உயர்த்தவும், உணர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் ஆற்றல் இசைக்கு இருக்கின்றது. எனினும், மிகவும் உணர்வுபூர்வமான பாடல்களை கேட்பதால், எதிர்மறையான விளைவு ஏற்படும் என்பதால், அவற்றை தடுக்க வேண்டும்.

நெருக்கமான உடலுறவை தவிர்க்க வேண்டாம் 
மனச்சோர்வின் போது உடலுறவு சோர்வு அளிப்பதாக உணர்வது எளித. ஆனால் உண்மையில் உடலுறவு மனச்சோர்வில் வெளியே வருவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. ஹார்மோன் உட்புகுதல்கள் மனச்சோர்வை சீர்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.

வைட்டமின் சேர்க்கைகள் 
ஊட்டச்சத்து குறைபாடுகளும் மனச்சோர்வு அளிக்கும் சிந்தனையை விளைவிக்கலாம். இதனால் வெளிப்படும் அறிகுறிகளை மருத்துவரிடம் ஆலோசித்து, சமன்பாட்டை சரிசெய்ய வைட்டமின் சேர்க்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாட்டிறைச்சி சாப்பிடுவதால் இளவயது மரணம் ஏற்படும் ஆபத்து

மாட்டிறைச்சி சாப்பிடுவதால் இளவயது மரணம் ஏற்படும் ஆபத்து...

"Red meat" எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது.

மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. "Myoglobin" என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட "Myoglobin" அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல ”ஹாட் டாக்”(சாஸேஜ்) எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

குடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி

குடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி......

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

* தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு, 

* வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல், 

* சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன. 

* அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.

* அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன.

* நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன. 

* இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன. 

* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். 

* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்

குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்

குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்..!

சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை.

பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.

வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.

லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea.

மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.

மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.

மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.

மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.

மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.

மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

1. நன்கு பழுத்த, காய்ந்த கார மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது.

2. மிளகாயின் தோல் நரம்புகளிலும், விதைகளிலும் காப்ஸஸின் என்ற ஆக்கக் கூறுப்பொருள் இருக்கிறது. முழு அளவில் செறிவூட்டப்பட்ட இந்தப் பொருளிலிருந்தே மிளகாய் மூலம் நமக்கு வெப்பம் கிடைக்கிறது.

3. காப்ஸஸின், நரம்பு வலிகளையும், நோய்களையும், இடுப்பிலும், உடம்பிலும் பயத்தம் பருப்பு அளவில் வரும் வேர்க்குரு போன்றவைகலை குணப்படுத்தும் நவீனக் களிம்புகளில் கார மிளகாய் முக்கிய மூலப் பொருளாகும்.

4. மிளகாய் உடலுக்கு வெப்பத்தைத் தருகிறது. இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

5. முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளவர்கள் மிளகாய் அதிகம் சேர்த்தால் முகம் சிவப்பாகிவிடும். மிளகாய் அளவுக்கு அதிகமானால் குடலுறுப்புகள் கெடவும் வாய்ப்புண்டு.

6. ஆந்திரக்காராகள் போல் கார மிளகாய் அதிகம் சேர்ப்பவர்கள், தினமும் பாசிப்பருப்புடன் முள்ளங்கி, செளசெள, பூசணி, வெள்ளரிக்காய் இவற்றில் எதையாவது ஒன்றை பச்சடியாகச் செய்து சாப்பிட்டால் காரமிளகாய் உதவியுடன் காய்ச்சல் இன்றி நலமாக வாழலாம்.

குடைமிளகாய்:

குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதை சமைக்கும் போது ஏற்ப்படும் வாசனை ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் வாங்குவதும் இல்லை.ஆனால் இதில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிரது பாருங்கள்.....

1. தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.

2. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச்சத்து,கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

3. குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.

4. கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

5. குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.

6. குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.

7. ஊசி மிளகாய், குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும்.

8. காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு எலுமிச்சை பிழியவும். அருமையான சாலட் தயார்.

9. குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

10. வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்.

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை நல்லா கவனிங்களேன்!

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை நல்லா கவனிங்களேன்!

ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒரு குறைபாடுதான் பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். 

தற்போது உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் மிக முக்கியமானது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது.. இந்தியாவில் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். உலகளவில் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. 

சிறந்த பயிற்சியும் கவனமும் 
எந்தக் காரணத்தினால் இந்த ஆட்டிசக் குறைபாடு ஏற்படுகிறது என்பதே கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல குறைகளுடன் இருந்தாலும் ஏதோ ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அந்தத் திறனை வெளிக் கொணர்வது சிறந்த பயிற்சியின் மூலமும் பெற்றோர்களின் கவனத்திலுமே உள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

திறமைகளை கண்டறியலாம் 
பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடின்றி காணப்படுவர். அனைவரிடமும் சகஜமாக பழகாமல் ஓரிடத்தில் அமராமல் சத்தமிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த செயல்பாடுகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பயிற்சிகளை கொடுக்கும்போது அவர்களிடம் பெரும் மாற்றங்களை காண முடிகிறது என்கின்றனர் இவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள். அப்படி பயிற்சியளித்தால் அவர்களிடம் ஒளிந்திருக்கும் அதீத திறன்களைக் கண்டறிய முடிகிறது என்கின்றனர் பயிற்சியாளர்கள். 

பெற்றோர்களின் பங்கு 
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலமே அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனைக் கண்டுகொள்ள முடியும் என்கின்றனர் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறனுடன் காணப்படுகிறார்கள். பேசும் பயிற்சி, பழகும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் மூலம் இவர்களின் குறைகளை ஓரளவு களைய முடியும். 

என்ன அறிகுறிகள்? 
பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும் தாயின் முகம் பார்த்து சிரிப்பது, பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்கவேண்டும். இதையும் மீறி சில குழந்தைகள் பேசத் தெரியாமல் இருப்பார்கள். தவிர 

ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல் இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். 

விளையாடுவதில் சிக்கல் 
18 - 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல், கைகளை உதறிக் கொண்டே இருத்தல், ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு, கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல் போன்றவையும் அறிகுறிகளாகும். 
குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம் உண்டா, இல்லையா என்பதை அறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அவர்களுக்கான பயிற்சியை எளிதில் தொடங்கிவிடலாம். 2 வயதுக்குள் அடையாளம் கண்டுகொண்டால் குணப்படுத்துவது எளிது என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள். 
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து, சரி செய்ய முடியும். அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து, சுயதொழில் கற்றுத்தரலாம். ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு வகை மனநிலை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்,'' என்கின்றனர் நிபுணர்கள். 
இந்தியாவில் 33 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு, இக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக்குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். இது மூளை வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர், சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.