சுக்கில் இருக்கு சூட்சுமம் !!!
மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு’’ முதலிடம் பெறுகிறது.
சுக்கிலிருக்குது சூட்சுமம்’’ என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில் சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ‘‘சுக்கு நீர்’’ தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்.
சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:
இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக்கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப்
பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.
சுக்கு மொழிகள் பத்து:
1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.
2. சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.
3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.
4. மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.
5. சுக்கு அறியாத கஷாயம் உண்டா?
6. இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.
7. பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.
8. சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.
9. சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.
10. சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.
பொதுப்பயன்கள்:
பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.
மருத்துவப் பயன்கள்:
1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்l
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.
புவியில் உற்பத்தியாகும் அளவில் 50 விழுக்காடு இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. அதில் கேரளாவில் 70 விழுக்காடு விளைகிறது. அதிலும் கொச்சியில் விளையும் வகைதான் புவியிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஐம்பது நாடுகளிக்கு சராசரியாக 7 ஆயிரம் டன் அளவுவரை சுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.
தொன்மைக்கால கிரேக்கர்களும், ரோமாபுரி மக்களும் இதை விரும்பி செங்கடல் வழியாக அரேபிய வணிகர்களிடமிருந்து வரப்பெற்றார்கள். செம்மண் சேர்ந்த வண்டல்மண் அல்லது இரும்பகக் களிமண் சேர்ந்த வண்டல் மண்ணில் இது செழிப்பாக வளரும். இதில் அடங்கியுள்ள சத்துக்க்கள் பின்வருமாறு,
புரதம் 8.6
கொழுப்பு 6.4
கால்சியம் 0.1
பாஸ்பரஸ் 0.15
இரும்பு 0.011
சோடியம் 0.03
பொட்டாசியம் 1.4
கலோரி மதிப்பு 100 கிராம் அளவில் 300 கலோரி அளவு
உயிர்ச்சத்துக்கள் (Vitamins) A 1175U, B1 0.05 மி.கி., B2 0.13 மி.கி., நியாசின் 0.9 மிகி, C 12 மி.கி.
சித்தர்கள் இதற்கு விடமுடியாத அமுதம் என்று காரணப் பெயரிட்டுள்ளார்கள். சுக்குக்கு புறணி ஆதாவது மேல் தோல் நச்சு. அதை நீக்கினால் உள்ளிருப்பது அமுதம். இது ஏகநிவாரணி என்றும் அழைக்கப்படும். இதன் முக்கியப்பணி வெப்பமுண்டாக்கி, பசித்தீயைத் தூண்டி வாயுவை அகற்றுதல். ஒரு துண்டு சுக்கு வாயிலிட்டு மெல்ல பல்வலி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல் தீரும். சுக்குப்பொடியை சிறு முடிச்சாகக் கட்டி காதில் சொருகிவைக்கக் காதடைப்பு, வலி, சீதளம் நீங்கும். தாய்ப்பால் அல்லது பால்விட்டரைத்து பற்றுப்போட தலைவலி தீரும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து பால்விட்டரைத்து மூட்டுவலி, இடுப்பு வலிக்குப் பற்றுப்போட நலமடையும்.
சுண்டைக்காயளவு சுக்குப்பொடி எடுத்து தூய்மையான வெள்ளைத்துணியில் முடிந்து, 5 மில்லி லிட்டர் அளவு பாலில் ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து முடிச்சை எடுத்துவிட்டு அந்தப்பாலை இரண்டு கண்களிலும் சில சொட்டுக்கள் விட்டால் அதிகக்கோபம், மன அழுத்தம், மன நோயாளிகளின் வெறியாட்டம் ஆகியவை தீர்ந்து மன அமைதி ஏற்படும். (இவ்வாறு செய்யும்போது முதலில் எரிச்சலுண்டாகும் பின் குளிர்ச்சியாக மாறும்). தலைவலி, சீதளம் நீங்கி மன அகங்காரத்தை ஒடுக்கும்.
ஒரு குவளை பாலில் 2 கிராம் அளவு சுக்குப்பொடியும் சர்க்கரையும் சேர்த்து காலை மாலை பருகினால் மூட்டுவலி, வாயு, அசதி நீங்கி உடற்சுமை குறையும்.
உப்பைத்தண்ணீர் விட்டரைத்து சுக்கின்மேல் கவசம் போல்தடவிக் காயவைத்து, கரிநெருப்பில் சிறிது சுட்டு எடுத்து நன்கு சுரண்டிவிட்டு பொடித்து கண்ணாடிக்கலனில் மூடிவைக்கவும். இதனைச் சுண்டைக்காயளவு காலை, மாலை உணவுக்கு முன் புளித்த மோரில் கலந்துதர பசிக்குறைவு, வயிற்றுப்பொருமல், இரைச்சல், சூட்டுப் பேதி நீங்கும்.
இந்தப்பொடி 50 கிராம் அளவு, மிளகுப்பொடி 10 கிராம் அளவு எடுத்து அதனுடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை சிறிது நெய் விட்டு இடித்து சுக்குருண்டை செய்துவைத்துக்கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை மாலை உட்கொண்டு வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வாயு, இருமல், வாந்திபேதி, பேதி, குமட்டல், சுவையின்மை, அடிக்கடி வரும் காய்ச்சல், இதய நோய்கள், நரம்பியல் பிணிகள் நீங்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் பொரியும் சுக்குப்பொடி உருண்டையும் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவருவதால் சீதளம் நீங்கிக் கருப்பை தூய்மையாகி குழந்தைக்கு நல்ல பாலும் உடலில் உற்பத்தியாகும். சர்க்கரைக்கு மாற்றாக பனை வெல்லம் சேர்ப்பது இன்னும் சிறப்பானதாகும்.
சுக்குப்பொடி 200 கிராம், வறுத்த மிளகு, திப்பிலி, வகைக்கு 25 கிராம் அளவு அதிமதுரப்பொடி, சிறியாநங்கைப் பொடி வகைக்கு 25 கிராம், இந்துப்பு 5 கிராம் அளவு கலந்து வைத்துக்கொண்டு, காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து உண்டு பின் வெந்நீர் குடிப்பதால் கொழுப்பும் உடல் பருமனும் குறையும். பித்தம், வாயு, கபம் குறையும்.
இது உலர்த்தப்படாமல் இஞ்சியாக இருக்கும்போது, தோல் சீவி சாறு எடுத்து 10 நிமிடங்கள் தெளியவைத்து சம அளவு எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்து காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 5 மணிக்கும் 1 தேக்கரண்டி அளவு சாப்பிடுவதால் வாய்க்கசப்பு, பித்தம், தலைச்சுற்றல், உதிரக் கொதிப்பு, செரியாமை, பசியின்மை நீங்கி குழந்தைகளும் பெரியவர்களும் முறையாகப் பசித்து சாப்பிடுவார்கள்.
சாப்பிடாத குழந்தைகளை அடித்து விரட்டுவதைவிட்டு இதைச் செயலபடுத்திப் பயனடையுங்கள். இது ஜம்பீர மணப்பாகு என்ற பெயரில் நமது மையத்தில் கிடைக்கிறது.
இஞ்சியைத் தோல் சீவி சிறுவில்லைகளாக அறுத்து தேனில் போட்டு சிலநாட்கள் வெய்யிலில் வைத்தெடுத்துக் கண்ணாடிக்கலன்களில் அடைத்து வைத்துக்கொள்ளவும். இந்த இஞ்சித்தேனூறலை காலை வெறும் வயிற்றில் 5 துண்டு சாப்பிடுவதால் மேற்கண்ட நன்மைகளைப் பெறலாம். இது ஒரு கற்பமுறை. செரியாமைக் கோளாறுகளை விரட்டிவிட்டால் வேறெந்த நோயும் நம்மை அணுகாது. எனவே இஞ்சியையும் சுக்கையும் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.
இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.
ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுகள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புகள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நாள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநாள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்கள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.
இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்காய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநாள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.
அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செய்யுறது. சாயங்கால நேரத்துல செய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்காய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைகள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.
இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.
மாலையில் கடுக்காய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்காய் சாப்பிடணுமானு நீங்க ‘ஙே’னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்காய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்காய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.
ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்காய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும்.
மூலிகை குடிநீர் (சுக்கு காபி)
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே. ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது. அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது. இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.
காலை மாலை இனிய பானம்:
பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையில் தவிப்போருக்கு உதவுவது சுக்கு காபி. சூடாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை நிறைவு செய்கிறது. காரமும் இனிப்பும் இருப்பதால் ஒரு நிறைவு ஏற்படுகிறது. காலை மாலை பானங்களுக்கு பொருத்தமானது இந்த சுக்கு காபி.
பவுடர் தயாரிப்பு:
சுக்கு, கொத்தமல்லி, சீரகம் மூன்றும் முக்கிய பொருட்கள். சுக்கு, சீரகம் ஒரு மடங்கு எடை. அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம். பூக்கள், வேர்கள், பட்டைகள், வாசனைப் பொருள்கள், என விரும்பிய எதுவும் சேர்க்கலாம்.
அவையாவன:
கருங்காலி, செஞ்சந்தனம், ரோஜா இதழ், தாமரை இதழ், செம்பருத்தி, ஆவாரம் பூ, ஏனம், ஜாதிக்காய், மிளகு, குங்குமப்பூ, ஜாதிப் பத்திரி, வெட்டிவேர், நன்னாரி வேர், வாய் விளங்கம், பதிமுகம், இருவேலி, துளசி, வெள்ளருகு, ஆரஞ்சுத் தோல் முதலியன. இவற்றைக் காய வைத்து அளவு பார்த்து சேர்க்க வேண்டும்.
ஒரு டம்ளர் தயாரிக்க
ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் தூளும், இரு ஸ்பூன் கரும்புச் சர்க்கரையும், (நாட்டுச் சர்க்கரை/ பழுப்பு சர்க்கரை/ கருப்பட்டி/ வெல்லம்) போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி மூடி வைத்து நன்கு ஆறின பின்பு வடிக்கட்டி சாப்பிடலாம். சிறிது பால் அல்லது தேங்காய் பால் கலந்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் சாப்பிடலாம். டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.
செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்.