சிறுமியின் பொறுமையும் நற்பண்பும்



ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.

நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.

இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்.”


மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார்.”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும்.கூடவும் கூடாது.குறையவும் கூடாது” என்று கட்டளையிட்டார்.

வேலைக்காரனும் அப்ப்டியே ஆகட்டும் ஐயா என்று கூறினான்.
வேலைக்காரன் அனைவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்து மாளிகை வாசலில் குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் வேலைக்காரனை சூழ்ந்து கொண்டு பெரிய ரொட்டியை எடுப்பதில் குழந்தைகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.எல்லோரும் எடுத்து சென்றது போக மிஞ்சி இருந்த ஒரு சிறிய துண்டை எடுத்தாள்.அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.

இப்படியே நான்கு நாட்கள் நிகழ்ந்தது.எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.ஐந்தாம் நாளும் அப்படியே நிகழ்ந்தது.எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

தன் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி.அந்த ரொட்டியை தன் தாய்க்கு கொடுத்தாள்.ரொட்டியை பிய்த்தாள் தாய் அதில் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்த தங்கக்காசை எடுத்துக்கொண்டு சிறுமி பெரியவரின் வீட்டிற்கு ஓடி வந்தாள்.”ஐயா இது உங்கள் தங்கக்காசு ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாள் அந்த சிறுமி.

‘சிறுமியே உன் பொறுமைக்கும் நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்த தங்கக்காசு,மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்!’ என்றார் பெரியவர்.

துள்ளிக்குதித்தபடி ஓடிவந்த அவள் நடந்ததை அப்படியே தன் தாயிடம் சொல்லி குதூகலித்தாள்!!!

முள்ளம் பன்றியும் ஓநாய்யும்



தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்

ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

நீதி: "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".

யோசிக்காத விவசாயி

விவசாயத்திற்க்கு நரி மேல் கோபம். அவன் கோழிகளை அடிக்கடி பிடித்து எலும்பைக்கூட விட்டு வைக்காமல் தின்றுவிடுகிறது என்று கோபம். இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று ஒருமுறை அதற்காக இரவில் பதுங்கிக் காத்திருந்தான். நரி வந்தபோது அதன்மேல் சாக்கு போர்த்தி லபக்கென்று பிடித்துவிட்டான். பிடித்து என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்தான். அதன் வாலில் மண்ணெண்ணையில் நனைத்த துணியைச் சுற்றிப் பற்ற வைத்துவிட்டான்.

“என் கோழிகளைத் தினறாய் அல்லவா? ஒழிந்து போ!” என்று அதைத் துரத்திவிட்டான்.

நரி தன்னையறியாமல் விவசாயிகளின் வயலுக்குள்ளேயே நுழைந்தது. பயிர் முதிர்ந்து ஒரு பக்கம் நெற்குவியல், மறு பக்கம் வைக்கோல் போட்டு முதிர்ந்த கதிர்கலைக் களையறுக்க காத்திருந்த நேரம் அது. நரியின் வரவால் ஏக்கர் முழுக்க தீ பரவி தானியமெல்லாம் கருகிச் சாம்பலானது.

விவசாயிக்கு நரியைப் பழிவாங்கியதில் நஷ்டம்தான் பன்மடங்கு.

நீதி : பிறரைப் பழிவாங்கும்போது முதலில் தனக்குத் துன்பம் வராமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.

உயிர் காக்கும் தந்திரம்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம்

பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”
அப்பா ஒருகணம் யோசித்தார்.

“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.
மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.
“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’
“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.
“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”
போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”
போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.
“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.
“டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!”
மகன் அப்பாவிடம் சொன்னான்.

“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...
... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”.