முட்டாளை மணந்த இளவரசி

                   
       ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் மிகுந்த அறிவுடையவளாக விளங்கினாள். யார் பேசினாலும் தன் அறிவு கூர்மையால் அவர்களை மடக்கி விடுவாள் அவள். இளவரசி திருமணப் பருவம் அடைந்தாள். தன் மகளுக்கு யாரைத் திருமணம் செய்து வைப்பது என்று சிந்தித்தான் அரசன். தந்தையே! இளவரசனாக இருந்தாலும் சரி, ஏழைப் பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி. பேச்சாற்றலில் யார் என்னை வெற்றி கொள்கின்றாரோ அவரையே மணப்பேன் என்றாள் அவள். இந்தச் செய்தி பல நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. பல நாட்டு இளவரசர்களும் அறிஞர்களும் போட்டியில் கலந்து கொள்ள அரண்மனைக்கு வந்தனர். வந்த ஒவ்வொருவரையும், சிறிது நேரத்திற்குள் தோற்கடித்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தாள் இளவரசி. நாள் தோறும் ஏராளமான கூட்டம் அரண்மனைக்கு வந்த வண்ணம் இருந்தது. இப்படியே சென்றால் நாட்டில் உள்ள எல்லோருடனும் இளவரசி பேச வேண்டி இருக்கும். வருகின்ற கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது? பொழுது போக்குவதற்காக இங்கு வருபவர்களை எப்படித் தடை செய்வது என்று குழம்பினான் அரசன். போட்டியில் வென்றால் திருமணம், தோற்றால் நூறு கசையடி, என்று நாடெங்கும் முரசறைந்து தெரிவிக்கச் சொன்னான் அவன். இதனால் இளவரசியுடன் போட்டியிட வருகின்றவர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. வந்தவர்களும் தோற்றுக் கசையடி வாங்கிக் கொண்டு சென்றனர். அந்த நாட்டில் பிச்சைக்கார இளைஞன் ஒருவன் இருந்தான். இளவரசியை மணப்பதற்காக நிகழும் போட்டியைப் பற்றி அறிந்தான் அவன். முயற்சி செய்து பார்ப்போம். நல்ல வாய்ப்பு இருந்தால் இளவரசியை மணப்போம். இல்லையேல் கசையடி வாங்கி இறந்து விடுவோம் என்று நினைத்தான் அவன். தன் ஊரில் இருந்து தலைநகரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான் அவன். நீண்ட தூரம் நடந்தான் அவன். இறந்து போன கோழி ஒன்று வழியில் கிடந்தது. இது எதற்காவது பயன்படும் என்று நினைத்தான் அவன், தன் தோளில் கிடந்த சாக்குப் பைக்குள் அந்தக் கோழியைப் போட்டான். இன்னும் சிறிது தூரம் நடந்தான். வழியில் கிடந்த சிறு தொட்டியில் அவன் கால் இடறியது. அந்தத் தொட்டியையும் எடுத்துசூ சாக்குப் பைக்குள் போட்டுக் கொண்டான். வழியில் மாடு ஆடுகளைக் கட்டும் தடி ஒன்று கிடந்தது. குதிரையின் கால் குளம்பு கிடந்தது. பல வளைவுகளை உடைய ஆட்டின் கொம்பு ஒன்று கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்டான். சாக்குப் பையைத் தூக்கிக்கொண்டு மெல்ல நடந்து அரண்மனையை அடைந்தான் அவன். காவலுக்கு இருந்த வீரர்கள் கந்தல் ஆடையுடன் காட்சி அளித்த அவனைக் கண்டு சிரித்தனர். இளவரசியுடன் போட்டியிட வந்துள்ளேன். என்னை உள்ளே விடுங்கள், என்றான் அவன். பிச்சைக்காரனாகிய உனக்கு என்ன தெரியும்? நீயா இளவரசியுடன் போட்டியிடப் போகிறாய் என்று கேலியாகக் கேட்டான் வீரன் ஒருவன். என் மூக்குக்குக் கீழே வாய் உள்ளது. வாய்க்கு உள்ளே நாக்கு உள்ளது. என் திறமையான பேச்சினால் இளவரசியை வெல்வேன், என்றான் அவன். உம்மைப் போன்ற முட்டாளிடம் இளவரசி பேச மாட்டார். நீ திரும்பிச் சென்று நல்ல அறிவு பெற்று மீண்டும் இங்கே வா, என்றான் இன்னொரு வீரன். நான் இங்கிருந்து நகர மாட்டேன், போட்டியிட வந்திருக்கிறேன். இளவரசியிடம் சொல் என்று உறுதியுடன் சொன்னான் அவன். வீரர்கள் இளவரசியிடம் சென்றார்கள். பிச்சைக்கார இளைஞன் ஒருவன் போட்டிக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். விளையாடுவதற்காக அந்த முட்டாள் இங்கு வந்திருக்கிறான். நன்கு அவமானப்படப் போகிறான். அவனை இங்கு அனுப்பி வையுங்கள், என்றாள் கோபத்துடன் அவள். பிச்சைக்காரன் உள்ளே நுழைந்தான். இளவரசியைப் பணிவாக வணங்கினான். பனிக்கட்டியை விட குளிர்ந்த கைகளை உடைய இளவரசியாரே வணக்கம், என்றான் அவன். என் கைகள் குளிர்ச்சியாக இல்லை. சூடாக உள்ளது. இந்தச் சூட்டில் ஒரு கோழியை வறுபட்டு விடும். இது உனக்குத் தெரியுமா? என்று வெடுக்கெனப் பதில் தந்தாள் அவள். அப்படியா? கோழி வறுபடுமா என்று பார்க்கிறேன், என்ற அவன் சாக்குப் பைக்குள் கையை விட்டான். செத்த கோழியை வெளியே எடுத்தான்.  எதிர்பாராதது நடந்ததைக் கண்ட அவள் திகைத்தாள், தன் திகைப்பை மறைத்து கொண்டு சூடு பட்டால் கோழியின் கொழுப்பு ஒழுகுமே, என்றாள். பைக்குள் கைவிட்டுத் தொட்டியை எடுத்தான் அவன் ஒழுகுவதை இதற்குள் பிடித்துக் கொள்ளலாம், என்றான். தொட்டி விரிசல் விட்டிருந்தால் ஒழுகுமே என்றாள் அவள். குதிரைக் குளம்பை எடுத்த அவன், விரிசல் உள்ள பகுதியில் கீழே இதை வைத்து அடைத்து விடலாம், என்றான். எப்படி எதிர்க் கேள்வி கேட்டாலும், பதில் வைத்திருக்கிறானே என்று நினைத்தாள் அவள். தொட்டியை விட குளம்பு பெரிதாக இருக்கிறது. எப்படித் தொட்டியை அதனால் நெருக்க முடியும்? என்று கேட்டாள் அவள். தடியை வெளியே எடுத்தான் அவன். இதைப் பயன்படுத்திக் குளம்பிற்குள் தொட்டியை இறுக்கமாகப் பொருத்த முடியும், என்றான் அவன். ஏறுமாறான கேள்விகளுக்குத் தக்க பதில் தருகிறானே. அவன் கை ஓங்கி வருகிறதே, என்று திகைத்தாள் அவள். அவனை மடக்க நினைத்த அவள், இளைஞனே! நான் என்ன சொன்னாலும் அதை வேறொன்றாகத் திருப்பி விடுகிறாய். நாக்கு பல திருப்பங்கள் இருப்பது போல நீ நடந்து கொள்கிறாய், என்றாள் அவள். தன் பைக்குள் கையை விட்ட அவன் ஆட்டுக் கொம்பை எடுத்தான். அதை அவளிடம் காட்டி, இதைவிட அதிக திருகுகள் உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டான். அவள் என்ன பதில் சொல்வது என்று சிந்தித்தாள். நீண்ட நேரம் ஆயிற்று. அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. பிறகென்ன, இளவரசிக்கும் அவனுக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.  

திறமையான குள்ளன்


ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள்.

ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

மனைவி அவனிடம், "நாம் எவ்வளவு காலம் துன்பப்படுவது? வயிறார உண்டு எத்தனை நாட்கள் ஆகிறது? நம் மகன்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம்" என்றாள்.

"நீ சொன்னபடியே செய்கிறேன். நாளை அவர்களுக்கு உணவு சமைத்து வை" என்றான் அவன்.

கடைசி மகனான குள்ளன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

விடிகாலையில் எல்லோருக்கும் முன் எழுந்தான் அவன். ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருந்த சிறுசிறு கூழாங்கற்களை எடுத்தான். சட்டைப் பை நிறைய அவற்றைப் போட்டுக் கொண்டான். வீடு திரும்பினான் அவன். தாயும் தந்தையும் அண்ணன்களும் அவனுக்காகக் காத்திருந்தனர்.

" ஏன் இவ்வளவு நேரம்? அம்மாவிடம் உன் பங்கு அடையை வாங்கிக் கொள். காட்டில் சாப்பிடலாம். இன்று நாம் எல்லோரும் விறகு வெட்டச் செல்கிறோம்" என்றான் விறகுவெட்டி.

எல்லோரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள். கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் பையிலிருந்த கூழாங்கல்லை வழி எங்கும் போட்டுக் கொண்டே வந்தான்.

நீண்ட தூரம் நடந்து காட்டின் நடுப்பகுதிக்கு வந்தார்கள்.

"இனி என்ன முயன்றாலும் தன் மகன்களால் வீட்டை அடைய முடியாது. அவர்களை ஏமாற்றி விட்டுப் புறப்பட வேண்டும்" என்று நினைத்தான் அவன்.

" நீங்கள் விளையாடிக் கொண்டிருங்கள். நான் சிறிது தூரம் சென்று நல்ல மரமாகப் பார்த்து வெட்டுகிறேன். இருட்டியதும் வீட்டிற்குப் புறப்படலாம்" என்றான் அவன்.

அவர்களும் மகிழ்ச்சியாக விளையாடத் தொடங்கினார்கள்.

அருகில் இருந்த மரத்தில் ஒரு கட்டையைத் தொங்க விட்டான் அவன். காற்று அடிக்கும் போதெல்லாம் மரத்தில் அது மோதியது. விறகு வெட்டுவது போல ஓசை கேட்டது. மகன்களுக்கத் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான் அவன்.

அவர்கள் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் தொடங்கியது.

" தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்வோம்" என்றான் மூத்தவன்.

எல்லோரும் விறகு வெட்டும் ஓசை கேட்ட இடத்திற்கு வந்தனர். " ஐயோ! அப்பாவைக் காணோமே! இந்தக் காட்டிலிருந்து எப்படி வீட்டுக்குச் செல்வது? கொடிய விலங்குகள் நம்மைக் கொன்று விடுமே! என்ன செய்வது?" என்று அலறினான் இரண்டாமவன்.

" கவலைப்படாதீர்கள். இன்னும் சிறிது நேரத்தில் நிலவு வெளிச்சம் தெரியும். அதன் பிறகு நான் வழி காட்டுகிறேன். நாம் அனைவரும் வீட்டை அடையலாம்" என்று ஆறுதல் சொன்னான் குள்ளன்.

நிலவு வெளிச்சம் பட்டப் பகல் போலக் காய்ந்தது. வழி எங்கும் போட்டு வந்த கூழாங்கல்லை அடையாளமாகக் கொண்டு நடந்தான் குள்ளன். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.

" வீட்டில் தன் மனைவியிடம், நம் குழந்தைகள் காட்டில் எப்படித் தவிப்பார்களோ?" என்றான் அவன்.

" எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா? நம் கண் எதிரில் ஏன் அவர்கள் துன்பப்பட வேண்டும்? அதனால் தான் அவர்களைக் காட்டில் விட்டுவிட்டு வரச் சொன்னேன். அவர்கள் எங்காவது நலமாக இருக்கட்டும் நான் உணவு சமைக்கிறேன். இருவரும் சாப்பிடலாம்" என்றாள் அவள்.

நள்ளிரவு நேரம், இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

கதவு தட்டும் ஓசை கேட்டது. " இந்த நேரத்தில் யார்? கதவைத் திற" என்றான் அவன். கதவைத் திறந்தாள் அவள். தன் மகன்களைக் கண்ட அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சமைத்து வைத்திருந்த உணவை அவர்களுக்குப் பரிமாறினாள்.
சாப்பாடு முடிந்தது. நடந்து வந்த களைப்பால் அவர்கள் தூங்கத் தொடங்கினார்கள்.

விறகுவெட்டிக்கும் அவன் மனைவிக்கும் சாப்பிட உணவில்லை.

" நம் மகன்கள் வந்து விட்டார்களே. இப்பொழுது என்ன செய்வது?" என்று கேட்டான் அவன்.
" நிலவு வெளிச்சத்தில் வழி கண்டுபிடித்து வந்து விட்டார்கள். அமாவாசையன்று மீண்டும் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். இன்னும் அதிக தூரம் சென்று விட்டுவிட்டு வாருங்கள். அவர்களால் திரும்ப முடியாது" என்றாள் அவள்.

அமாவாசை வந்தது. விடிகாலையில் தன் மகன்களை எழுப்பினாள் அவள். " காட்டிற்கு விறகு வெட்டச் செல்லும் அப்பாவுடன் நீங்களும் செல்லுங்கள். மதிய உணவிற்காக ஆளுக்கு இரண்டு அடை சுட்டு வைத்து இருக்கிறேன்" என்றாள் அவள்.

குள்ளனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்தது. கூழாங்கல்லைப் பொறுக்கி வர நேரமில்லை. என்ன செய்வது" என்று குழம்பினான் அவன்.

"நேரமாகி விட்டது. புறப்படுங்கள்" என்று அவசரப் படுத்தினான் விறகுவெட்டி.
அவர்களுடன் கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் கையிலிருந்த அடையைச் சிறுசிறு துண்டுகள் ஆக்கினான். வழி எங்கும் அதைப் போட்டுக் கொண்டே வந்தான்.

அவன் போட்டு வந்த அடைகளைக் குருவிகளும் எறும்புகளும் சாப்பிட்டு விட்டன. விறகுவெட்டி அவர்களை வழக்கம் போல விளையாடச் சொன்னான். கட்டையைத் தொங்க விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தான். இருட்டத் தொடங்கியது. எல்லோரும் தந்தையைக் காணாது திகைத்தனர்.

" நான் வழி காட்டுகிறேன். கவலைப்படாதீர்கள்" என்றான் குள்ளன். வழி தெரியாமல் அவன் அங்கும் இங்கும் அலைந்தான்.

பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் மேல் ஏறினான். தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிவதைப் பார்த்தான்.
கீழே இறங்கிய அவன், " அண்ணன்களே! சிறிது தொலைவில் வெளிச்சம் தெரிகிறது. கண்டிப்பாக அங்கே வீடு இருக்க வேண்டும். நாம் அங்கே சென்று இன்றிரவு தங்குவோம்" என்றான்.

எல்லோரும் வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள் கண்களுக்குப் பெரிய வீடு தெரிந்தது. அது ஒரு அரக்கனின் வீடு. அரக்கனும் அவனுடைய ஏழு மகன்களும் வெளியே சென்றிருந்தார்கள். அரக்கனின் தாய் மட்டும் அப்பொழுது வீட்டில் இருந்தாள்.
குள்ளன் கதவைத் தட்டினான். அரக்கி கதவைத் திறந்தாள். ஏழு சிறுவர்களைப் பார்த்ததும் அவள் நாக்கில் எச்சில் ஊறியது. " பாட்டி ! இந்தக் காட்டில் நாங்கள் வழி தவறி விட்டோம்" இன்றிரவு மட்டும் இங்கே தங்கிச் செல்கிறோம்" என்றான் குள்ளன்.

" இங்கே நீங்கள் மகிழ்ச்சியாகக் தங்கலாம், இன்னும் சிறிது நேரத்தில் என் மகனும் ஏழு பேரனும் வந்து விடுவார்கள். உங்களைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். அந்த அறை என் பேரன்கள் தூங்கும் அறை. அங்கே சென்று நிம்மதியாகத் தூங்குங்கள்" என்று இனிமையாகப் பேசினாள் கிழவி. அவர்களும் அந்த அறையில் சென்று படுத்தார்கள்.
சிறிது நேரத்தில் அரக்கனும் ஏழு மகன்களும் அங்கே வந்தனர், ஏழு பேரன்களின் தலையிலும் கிரீடத்தை அணிவித்தாள் அவள்.

" நீங்கள் சென்று அவர்கள் பக்கத்தில் படுத்துத் தூங்குங்கள்" என்றாள். அவர்களும் சென்று சிறுவர் பக்கத்தில் படுத்தனர்.

தன் மகனைப் பார்த்துக் கிழவி, " இன்று நமக்கு நல்ல வேட்டை ஏழு சிறுவர்கள் வழி தவறி இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி நம் பேரன்கள் தங்கும் அறையில் தூங்க வைத்திருக்கிறேன்.
பெரிய அண்டாவில் கறிக் குழம்பு வைக்கிறேன். குழம்பு கொதி வந்ததும் நீ அந்த ஏழு பேரையும் தூக்கி வந்து அதில் போடு. அவர்கள் நன்றாக வெந்ததும் நாம் வயிறார உண்போம். மீதி உள்ளதைப் பொழுது விடிந்ததும் பேரன்கள் சாப்பிடட்டும்" என்றாள்.
" அம்மா! எனக்குப் பசி உயிர் போகிறது. சீக்கிரம் அண்டாவை அடுப்பில் வை. அந்த அறையில் என் மகன்களும் படுத்திருக்கிறார்களே? இருட்டில் எப்படி அந்தச் சிறுவர்களை மட்டும் தூக்கி வருவது? விழித்துக் கொண்டால் தப்பி விடுவார்களே?" என்று கேட்டான் அரக்கன்.
" நீ எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் அதற்காகத்தான் என் பேரன்களின் தலையில் மட்டும் கிரீடம் அணிந்து உள்ளேன்" என்றாள் அவள்.
குள்ளனுக்குத் திடீரென்று விழிப்பு வந்தது.

கிழவியின் ஏழு பேரன்களும் தலையில் கிரீடத்துடன் படுத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. "ஏன் இவர்கள் கிரீடத்துடன் தூங்க வேண்டும். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது" என்பதைப் புரிந்து கொண்டான் அவன். அவர்கள் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்தான், தன் அண்ணன்களின் தலையில் அவற்றை அணிவித்தான். தன் தலையிலும் கிரீடத்தை அணிந்து கொண்டான். என்ன நடக்கிறது என்பதை விழித்திருந்து பார்த்தான்.
சிறிது நேரத்தில் அரக்கன் உள்ளே நுழைந்தான். கிரீடம் அணிந்திராத சிறுவர்களை ஒவ்வொருவராகத் தூக்கிச் சென்றான். கொதிக்கும் குழம்பில் அவர்களைப் போட்டான்.
நடந்ததைப் பார்த்த குள்ளன் திகைத்தான். தன் அண்ணன்களை மெதுவாக எழுப்பிய அவன், " அரக்கனின் வீட்டில் சிக்கிக் கொண்டோம். உடனே தப்பிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நம்மைக் கொன்று விடுவார்கள்" என்றான்.
இதைக் கேட்டு எல்லோரும் பயந்தனர். அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சமைத்த கறியை அரக்கனும் கிழவியும் சுவைத்துச் சாப்பிட்டார்கள். பிறகு இருவரும் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினார்கள்.
பொழுது விடிந்தது. அரக்கனை எழுப்பினாள் கிழவி. " என் பேரன்களை அழைத்துவா. அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிடட்டும்" என்றாள்.

அறைக்குள் நுழைந்த அவன், " அம்மா! இங்கு யாருமே இல்லையே" என்று அலறினான்.
அங்கு வந்த அவளுக்கு உண்மை புரிந்தது. " ஐயோ அந்தச் சிறுவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். நம் குழந்தைகளைக் கொன்று நாமே தின்று இருக்கிறோம்" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். " கொதிக்கும் குழும்பில் என் குழந்தைகளையா போட்டேன்? அவர்களையா சாப்பிட்டேன்? என்ன கொடுமை இது? இனி நான் என்ன செய்வேன்?" என்று சுவரில் மோதிக் கொண்டு அழுதான் அவன்.
இருவரும் நீண்ட நேரம் அழுதார்கள்.
ஒருவாறு மனம் தேறிய அரக்கன், " என் குழந்தைகளைக் கொன்றவர்கள் அந்தச் சிறுவர்கள் தான். என்னிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது. எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பேன். கொன்று தின்று பழி தீர்ப்பேன்" என்று கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான்.
" என் மந்திரச் செருப்பைக் கொண்டு வா" என்று கத்தினான் அவன்.

கிழவியும் செருப்பைக் கொண்டு வந்தாள். அதைப் போட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன்.
" அரக்கன் தேடி வருவான். நம்மைப் பிடித்தால் கொன்று விடுவான். வேகமாக ஓடுவோம்" என்றான் குள்ளன். எல்லோரும் நீண்ட தூரம் வந்தனர்.
" என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை" என்றான் மூத்தவன்.
" அரக்கன் இனி நம்மைத் துரத்த முடியாது. எதற்கும் பாதுகாப்பாக இங்கிருக்கும் குகைக்குள் பதுங்கிக் கொள்வோம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது" என்றான் குள்ளன்.
எல்லோரும் பதுங்கிக் கொண்டனர். அரக்கனின் காலடி ஓசை அவர்களுக்கு கேட்டது. எல்லோரும் நடுங்கினார்கள். அங்கு வந்த அரக்கன் எல்லாத் திசைகளிலும் பார்த்தான். அவர்கள் பதுங்கி இருப்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லை.
" ஏ! மந்திரச் செருப்பே! இங்குதான் அவர்கள் இருப்பார்கள் என்று என்னை அழைத்து வந்தாயே! இங்கு அவர்களைக் காணோமே? நீயும் என்னை ஏமாற்றுகிறாயா?" என்று சொல்லிவிட்டு அங்கேயே படுத்தான். களைப்படைந்த அவன் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.
இதைப் பார்த்த குள்ளன், " அரக்கன் தூங்குகிறான். அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டான். நீங்கள் சத்தம் போடாமல் இங்கேயே இருங்கள். மநதிரச் செருப்பை அணிந்து நான் அரக்கன் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கிருந்து ஏராளமான பொருள் கொண்டு வருகிறேன். பிறகு நாம் அனைவரும் நம் வீட்டிற்குச் செல்வோம்" என்றான்.
எல்லோரும், " எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு நீ என்ன நினைக்கிறாயோ அப்படியே செய்" என்றார்கள்.
வெளியே வந்தான் குள்ளன். அரக்கனின் காலில் இருந்த செருப்பைக் கழற்றினான். அவற்றைத் தன் காலில் அணிந்து கொண்டான்.
"ஏ! மந்திரச் செருப்பே! நான் அரக்கனின் வீட்டை அடைய வேண்டும்" என்று சொல்லிவிட்டு நடந்தான். மந்திரச் செருப்பு அவனை அரக்கனின் வீட்டின் முன் நிறுத்தியது.
" பாட்டி! கதவைத் திற. உன் மகனுக்கு ஆபத்து" என்று கத்தினான் அவன்.
கதவைத் திறந்த கிழவி, " என் மகனுக்கு என்ன?" என்று கேட்டாள்.
" உன் மகன் கொடிய திருடர்களிடம் சிக்கிக் கொண்டான். அவர்கள் அவனைக் கட்டி வைத்துத் துன்புறுத்துகிறார்கள் நிறைய பொருள் கொடுத்தால் உன் மகன் உயிர் பிழைப்பான். இல்லையேல் அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள்.
மந்திரச் செருப்பை அடையாளத்திற்கு என்னிடம் தந்தான். " இதைக் காட்டினால் என் தாய் நிறைய பொருள் தருவார். வாங்கிக் கொண்டு ஓடி வா. அப்பொழுது தான் நான் உயிர் பிழைப்பேன்" என்று என்னை அனுப்பினார்" என்று பரபரப்புடன் சொன்னான் அவன்.
" ஐயோ! மகனே! உனக்கு ஆபத்தா? உன்னைவிட எனக்குப் பொருளா பெரிது?" என்று அலறினாள் அவள். பெரிய சாக்குப் பையில் பொற்காசுகளை நிரப்பி அவனிடம் தந்தாள்.
அந்தப் பையை வாங்கிய அவன், " இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் மகன் கண்டிப்பாக வந்து சேருவார்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
மந்திரச் செருப்பின் உதவியால் அண்ணன்கள் இருந்த இடத்தை அடைந்தான் அவன். அரக்கன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான்.
" இனி இந்த அரக்கனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. மந்திரச் செருப்பை இழந்து விட்டான். அவன் தேடி வைத்த செல்வத்தையும் கொண்டு வந்து விட்டேன்.
எல்லோரும் என்னை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றான் குள்ளன். அண்ணன்கள் எல்லோரும் குள்ளனை நன்றாகப் பிடித்துக் கொண்டார்கள்.
" மந்திரச் செருப்பே! நாங்கள் எங்கள் வீட்டை அடைய வேண்டும்" என்றான் அவன். சிறிது நேரத்தில் எல்லோரும் வீட்டை அடைந்தார்கள்.
அவர்கள் தந்தையும் தாயும், " மகன்களே! காட்டில் என்ன பாடுபடுகிறீர்களோ? வறுமையினால் தான் இந்தக் கொடுமையைச் செய்து விட்டோம்" என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
கதவு தட்டும் ஓசை கேட்டு அவர்கள் கதவைத் திறந்தார்கள். ஏழு மகன்களும் நிற்பதைக் கண்டு அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.
" அம்மா! இனி நமக்கு வறுமையே இல்லை. பல தலைமுறைக்குத் தேவையான பொற்காசுகளுடன் வந்து இருக்கிறோம்" என்றான் குள்ளன்.
சாக்கைப் பிரித்தான் விறகுவெட்டி. அதற்குள் ஏராளமான பொற்காசுகள் மின்னின. எதிர்பாராமல் கிடைத்த இந்த நல்வாழ்வை எண்ணி எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
தூக்கம் கலைந்து எழுந்தான் அரக்கன். தன் காலில் மந்திரச் செருப்பு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். எப்படியோ துன்பப்பட்டு தன் வீட்டை அடைந்தான் அவன்.
வாசலிலேயே காத்திருந்த அவன் தாய், " மகனே! உன்னை விட்டு விட்டார்களா? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகளை அப்படியே கொடுத்து அனுப்பினேன்" என்றாள்.
" என்னம்மா சொல்கிறாய்? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகள் போய்விட்டனவா? என்ன நடந்தது?" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அவன்.
நடந்ததை எல்லாம் சொன்னாள் அவள்.
" அம்மா! அந்தச் சிறுவர்கள் நம்மை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். நாமே நம் அருமைக் குழந்தைகளைக் கொன்று விட்டோம். என் மந்திரச் செருப்பை இழந்து விட்டேன். சேர்த்து வைத்த பொற்காசுகளும் போய்விட்டன. என்ன செய்வது?" என்று அழுதுகொண்டே கேட்டான் அவன்.
"மகனே! ஒரே ஒருநாள் அவர்கள் இங்கே இருந்தார்கள். நமக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டு விட்டது? இனி அவர்கள் வழிக்கே போகாமல் இருப்பது நமக்கு நல்லது" என்று அறிவுரை சொன்னாள் அவள்.
" நீ சொன்னபடியே நடக்கிறேன்" என்றான் அவன்.
பிறகென்ன, விறகுவெட்டி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.

விலங்குகள் பேசுவது புரிந்தால்

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம், காட்டு வழியாகச் சென்றான் அவன். அங்கே புலியிடம் சிக்கிக் கொண்டிருந்த துறவி ஒருவரைக் காப்பாற்றினான்.
மகிழ்ந்த துறவி, பறவைகள், விலங்குகள் என்ன பேசினாலும் இன்றுமுதல் உனக்குக் கேட்கும், இப்படிப்பட்ட ஆற்றல் உனக்குக் கிடைத்திருக்கிறது என்ற உண்மையை யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் தலை வெடித்து நீ இறந்து விடுவாய். போய் வா, என்றான்.
துறவியை வணங்கிவிட்டு அரண்மனைக்குப் புறப்பட்டான் அவன். வழியில் இருந்த விலங்குகள் பறவைகள் பேசிக் கொள்வது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. தற்செயலாகக் கிடைத்த விந்தையான ஆற்றலை எண்ணி மகிழ்ந்தான் அவன்.
இரவு நேரம், அவனும் அரசியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், அப்பொழுது சிறிதளவு தேனும் ஒரு உருண்டை சோறும் தவறித் தரையில் விழுந்தன.
அங்கிருந்த எறும்பு ஒன்று, ஓடி வாருங்கள், கூட்டமாக ஓடி வாருங்கள், நமக்கு இனி உணவுப் பஞ்சமே இல்லை. அரண்மனை மதுக் குடம் உடைந்து தேன் வெள்ளமாகப் பாய்கிறது. பெருஞ்சோற்று மலையே நமக்காகக் கிடக்கிறது, என்று உரத்த குரலில் தன் கூட்டத்தை அழைத்தது.
இதைக் கேட்ட அரசன், இரண்டு சொட்டு தேன், தேன் வெள்ளமா? ஒரு உருண்டை சோறு பெருஞ்சோற்று மலையா? இந்த எறும்பிற்கு அறிவே இல்லையா? இப்படியா வருணிப்பது? என்று நினைத்தான், அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தன்னை மறந்து கலகலவென்று சிரித்தான் அவன்.
அருகிலிருந்த அரசி, ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டாள்.
ஒன்றும் இல்லை, என்று மழுப்பினான் அவன்.
சாப்பிட்டு முடித்த அரசன் பட்டு மெத்தையில் படுத்தான். அரசி வெற்றிலை பாக்கு மடித்துத் தந்து கொண்டிருந்தாள். அறையில் இனிய மணம் பரவியது.
அங்கிருந்த ஆண் ஈ ஒன்று, பெண் ஈயை அழைத்து, எவ்வளவு இனிய சூழல் வா! நாம் இருவரும் அரசனின் முதுகில் இருந்து ஓடியாடி விளையாடுவோம். மகிழ்ச்சியா இருப்போம். இதைப் போன்ற நல்வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? என்றது.
என் முதுகு இந்த ஈக்களுக்கு மெத்தையா? என்று நினைத்தான் அரசன். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மீண்டும் கலகலவென்று சிரித்தான்.
ஏன் சிரிக்கிறீர்கள், என்று கேட்டாள் அரசி.
ஒன்றும் இல்லை, என்று வழக்கம் போல மழுப்பினான் அவன்.
உண்மையைச் சொல்லுங்கள். என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள்? நீங்கள் சொல்லாவிட்டால் நான் இனிமேல் உங்களுடன் பேச மாட்டேன். என் மீது உயிரையே வைத்திருப்பதாக நீங்கள் சொன்னதெல்லாம் நடிப்பு, என்று கோபத்துடன் சொன்னாள் அவள்.
என் உயிருக்கும் மேலாக நான் உன்னிடம் அன்பு வைத்திருக்கிறேன். நான் சிரித்ததற்கான காரணம் மட்டும் கேட்காதே என்றான் அவன்.
நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும், என்று வற்புறுத்தினாள் அவள்.
உண்மையைச் சொன்னால் என் உயிர் போய்விடும், என்றான் அவன்.
அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் சிரித்ததற்கான காரணம் எனக்குத் தெரிய வேண்டும், என்று அடம்பிடித்தாள் அவள்.
என்ன செய்தாலும் தன் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாது என்று உணர்ந்தான் அவன்.
என் உயிரைவிட உனக்கு நான் சிரித்ததற்கான காரணம் தெரிய வேண்டும். நாளை மாலையில் உனக்கு அந்த உண்மையைச் சொல்கிறேன். அப்படியே என் பிண ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்து வை. என்று வருத்தத்துடன் சொன்னான் அவன்.
பொழுது விடிந்தது. வழக்கம் போல அரண்மனைத் தோட்டத்தில் உலாவ வந்தான் அவன். மாலையில் இறக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் சோகமாக இருந்தான். அரண்மனை முழுவதையும் அரசன் இறக்கப் போகும் செய்தி பரவி இருந்தது.
உலாவிக் கொண்டிருந்த அவன் பின்னால் வளர்ப்பு நாய் சோகமாக வந்து கொண்டிருந்தது.
சிறிது தூரத்தில் அரண்மனைச் சேவல் பெட்டைக் கோழிகள் சூழ ஆரவாரமாக உலாவிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த நாயால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏ! சேவலே! உனக்குச் சிறிது கூட நன்றி கிடையாதா? நமக்கு இவ்வளவு காலம் உணவு அளித்துக் காப்பாற்றியவர் இந்த அரசர். இன்று மாலை இவர் இறக்கப் போகிறார். எல்லோரும் சோகமாக இருக்கின்றனர். இந்தச் சூழலில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயே? இது நியாயமா? என்று கேட்டது.
அதற்குச் சேவல், நம் அரசர் பெரிய முட்டாள். அவருக்கு இருப்பது ஒரே ஒரு மனைவி. அவளுக்காக உயிரைவிடத் துணிந்துள்ளார். எனக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் நீயே பார். என் பேச்சைக் கேட்டுத்தான் அவர்கள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குத் தண்டனை தருவேன். மனைவிக்காக இந்த அருமையான உயிரை நான் இழக்க மாட்டேன், என்று பதில் சொன்னது.
இந்தச் சிக்கலிலிருந்து அரசர் உயிர் பிழைக்க வழி இருக்கிறதா? என்று கேட்டது நாய்.
அரசர் மட்டும் அரசியிடம் உன்னைச் சவுக்கால் நூறு அடி அடிப்பேன். அதன் பிறகுதான் உண்மையைச் சொல்வேன் என்று சொல்லட்டும். எல்லாம் நல்லபடியாக நடக்கும், என்றது சேவல்.
நாயும் சேவலும் பேசிக் கொண்டிருந்ததை ஒன்று விடாமல் கேட்டான் அரசன். அரண்மனை திரும்பினான் அவன்.
மாலை நேரம் வந்தது. அவன் அருகே வந்த அரசி, இப்பொழுது உண்மையைச் சொல்கிறீர்களா? என்று கேட்டாள்.
நீ முதலில் சவுக்கால் நூறு அடி பெற வேண்டும். அதன்பிறகு நான் உண்மையைச் சொல்லிவிட்டு இறந்து விடுவேன், என்றான் அரசன்.
நான் சவுக்கடி பெற்றுக் கொள்கிறேன். எப்படியும் உண்மை தெரிந்தாக வேண்டும், என்றாள் அவன்.
அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் அரசன். கையில் சவுக்கை எடுத்த அவன் அவளை ஒங்கி அடித்தான்.
பத்து அடியைக் கூட அவளால் தாங்க முடியவில்லை. மென்மையான அவளுடைய உடலிலிருந்து குருதி கசியத் தொடங்கியது. ஐயோ! போதும் அடிப்பதை நிறுத்துங்கள். உங்கள் உண்மையும் வேண்டாம். சவுக்கடியும் வேண்டாம், என்று அலறினாள் அவள்.
சவுக்கால் அடிப்பதை நிறுத்தினான் அவன்.
அதன்பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

குழந்தைகள் முன்னிலையில் புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி

ஒருவர் புகை பிடிக்கும் போது அதிலிருந்தும், புகைப்பவரின் சுவாச காற்றிலும் இருந்த்து வெளிப்படும் புகை second hand smoke என்று அழைக்க படுகிறது. இதன் விளைவால் வருடத்திற்கு 150,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப் படுவதோடு ஆண்டொன்றுக்கு 3000 குழந்தைகள் இறக்கிறார்கள். உலகளவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களைத்தரலாம்   புகைபிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களியும் மருத்துவ உலகு passive smokers என்றே அழைக்கிறது.
சிகரெட் புகையில் 4000 விதமான புற்று நோய், மற்றும் வெகு துன்பம் தரக் கூடிய உடல் நலனுக்கு பாதகம்விளைவிக்கை கூடிய வேதி பொருட்கள் கலந்திருக்கின்றன.
அடிக்கடி காது வலி, ஆஸ்த்மா எனப்படும் மூச்சிழுப்பு, பொதுவான அலர்ஜி, இருமல், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது.
கருவுற்ற பெண்மணியின் அருகில் புகை பிடிப்பதால், வருடத்திற்கு அமெரிக்காவில் 18,600 குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கின்றன. 300000 குழந்தைகளுக்கு இருமலும், bronchitis உம் வருகின்றது. 1.6 மில்லியன் குழந்தைகள் காதில் கிருமிகள் வளர்வதால், காது வலியும் சீழும் ஏற்படிகிறது. வெளியேபால்கனியில் புகை பிடித்தாலும், கார் கராஜில்பிடித்தாலும் உள்ளே வந்த 5 மணித்துளிகளில் புகைப்பவரின் சுவாசத்திலிருந்து இந்த வேதி பொருட்கள் வெளிப்படுகிண்றன. என்னுடைய மகன் சென்று வந்த காப்பகத்தில் ஒரு பெண் வெளியே சென்று புகைத்து விட்டு வரும் பழக்கம் உடையவர். அவர் வந்து முத்தமிடுகின்ற நாட்களில் என் மகனின் கன்னங்களில் சிவந்திருக்கும். இதை கவனித்து வந்து காப்பகத்தில் புகார் கொடுத்து பிறகு புகைத்த பின் அவர் குழந்தைகளுடன் இருப்பதை நிறுத்தினார்கள். இப்போதெல்லாம் இங்கு குழந்தைகள் காப்பகத்தில் புகைப்பது குற்றம். சட்டப்படி அது தடை செய்யப்பட்டு விட்டது. இதை விட காரில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் புகைக்கும் போது பின் இருக்கையில் உள்ளகுழந்தை அந்த காற்றை சுவாசிக்க நேருகிறது.
இதை எப்படி குறைப்பது என்பதை சென்ற HBM 6 நிலைகளில் கவனிப்போம்.
1. மனதில் தோன்றும் எண்ணம் : புகை பிடிப்பது தவிர எத்தனையோ பழக்கங்கள் இருந்தாலும் இது ஒரு stigma ஆகிவிட்டது. எந்த நோய் வந்தாலும் இதுவே கரணம் என்று சொல்வது ஊடகங்களுக்கும் பழகிப்போய்விட்டது. நான் வீட்டிற்கு வெளியேதான் புகை படிக்கிறேன். குழந்தைக்கு உடம்பிற்கு வந்ததற்கு வேறுகாரணம் இருக்ககூடும் என புகைபிடிப்பவர் மனதில் சமாதானமாக எண்ணங்கள் தோன்றும்.
2. நோயின் தீவிரம் குறித்து எண்ணங்கள் : ஒருவேளை குழந்தையை காரில் அழைத்து செல்லும் போது புகைபிடிப்பது காரணமாக இருக்கலாம். நம்மால் குழந்தைக்கு காதுவலி வந்து ஏன் அவஸ்தைபடவேண்டும்? ஒரு வேளை அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். மருத்துவரிடம் பேச வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் மனதில் ஹோன்றும்.புகைபிடிப்பதன் மீது அதிக தீவிரம் இருந்தால் முந்தைய எண்ணம் வெற்றி பெற்று நிறுத்துவதற்கான முயற்சிகலை தடை செய்யும்.
3. நன்மைகள் : புகைப்பதை நிறுத்திவிட்டால் நமக்குமேஉடலுக்கு நல்லது அதிகமாக களைப்பாகாமல் இருக்கும். இதனால் தினம் செலவாகும்$5ம் மிச்சம். குழந்தைக்காகவாவது புகைப்பதை நிறுத்திவிடவேண்டும்.
இதைப்போல நன்மைகளை எடுத்து சொல்வதும் மீண்டும் அந்த நன்மைகளை வலியுறுத்துவதும்நல்ல மாறுதலை ஏற்படுத்தும்.
4. செயல்படுத்த தோன்றும் தடங்கல்கள் : ஒரு சிகரெட்ட்டுக்காக வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டும். குளிர்காலத்தில் அத்தனை உடைகளையும் பொட்டுகொண்டு வெளியே போய் ஒரு சிகரெட் பிடிப்பது நடக்காத காரியம். வெளியூருக்கு போகும் போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிகொண்டு தவிக்கும் போது ஒரு சிகரெட் இருந்தால்பரவாயில்லை. இந்த குழந்தைக்காக எப்படி வெளியே புகை பிடிக்க முடியும். நாம் நிறுத்தினாலும் வெளியிடத்தில் மற்றவர்கள் புகைக்காமலா போய்விடுவார்கள். இந்த ஒரு சிகரெட்டால் என்ன வந்துவிடப்போகிறது போன்ற நினைப்புகளும் சமாதானங்களும் தோன்றும்.
5. செயல்படுத்த தூண்டுபவை : புகைபடிப்பதை முழுதுமாக நிறுத்தாவிட்டால் என்ன. குறைந்தபட்சம் குழந்தைக்காக காரில், வீட்டினுள் நிறுத்தினால் குழந்தை நலமாவது மிஞ்சும். பாவம் ஒவ்வொருமுறை காது வலியும், இருமலும் வரும் போது என்னமாய் கஷ்டப்படுகிறது. இனிமேல் அடைந்த இடத்துள் புகைபிடிக்க மாட்டேன் என்பன போன்ற எண்ணங்கள் ஏற்படுவதும் அவ்வாறு ஏற்படுமாறு நண்பர்களோ துணைவி துணைவரோ பேசுவதும் ஊக்குவிப்பதும் நலம் பயக்கும். இதுபோல செய்வது பிறகு நாளாவட்டத்தில் புகைப்பதையே முழுதுமாக நிறுத்த வழிவகுக்கும்.
6. இதை தடுக்க காரில், வீட்டில் புகைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் குறைந்த அளவில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளுவது சிறந்தது. புகைப்பவர் அருகில் குழந்தைகளை இருக்க விடாதீர்கள்.
குழந்தைகளின் உடல் நலன் அவர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்...

             
                   இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. "போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது. தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து "அப்படிப்போடு...........அப்படிப்போடு" என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது. முதலில் சிட்டு க்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்துபோனது.