உடல் சுத்தத்திற்கு வழிகள்

பெண்கள் பேண்ட், கோட், டை, சாக்ஸ் போன்றவைகள் அணிவதை கோடை காலம் முடியும் வரை தவிர்க்கலாம். இளம் நிறத்திலான, இறுக்கிப் பிடிக்காத ஆடைகளை அணியவேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் தலையிலும், உடலிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும். 

குளிக்கும்போது சோப் பயன்படுத்துவதற்கு பதில், பச்சை பயறு மாவை பயன்படுத்த வேண்டும். குளிக்க பயன்படுத்தும் நீரில் சிறிதளவு கல்உப்பு கலந்து குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. 

சிறிதளவு பசுவின் பால் கலந்த நீரில் உடலை கழுவினால், சருமத்திற்கு மிருதுதன்மை கிடைக்கும். வியர்வை அதிகமாக வெளியேறுவதால், உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் அடைபடும். உடலை அவ்வப்போது நன்றாக கழுவி சுத்தம் செய்யாவிட்டால் வியர்க்குரு தோன்றிவிடும். 

வெயிலில் வெளியே போய்விட்டு வந்து குளிர்ந்த நீர் பருகுவது, ஏ.சி. அறைக்குள் புகுந்துகொள்வது போன்றவை நல்லதல்ல. வெயிலால் ஏற்படும் உடல் சீதோஷ்ண நிலை சமச்சீரான பின்பே ஏ.சி.யை பயன்படுத்தவேண்டும். 

கருமை நிறத்தை போக்கும் கடலை மாவு ஃபேஷியல்

கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களே போதுமானது. 

• இந்தியாவில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருட்கள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும். சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் கடலைமாவு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து முகத்தில் பூசி உலர வைக்கவும். அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சருமம் மென்மையாகும். 

• இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். அதனை முகத்தில் நன்றாக பேக் போட்டு ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளிச் என்று ஆகும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம். 

• இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை நன்றாக முகத்தில் பூசவும், சருமம் கருப்பாக உள்ள இடங்களிலும் இந்த கலவையை பூசி ஊறவைக்கவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும். 

• சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் தேவையற்ற எண்ணெய் பசை காணாமல் போவதோடு முகம் புத்துணர்ச்சியாகும். 

• தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

முகப்பரு உள்ளவர்களுக்கான உணவுக்கட்டுப்பாடு

பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை,​ ஹார்மோன் பிரச்சனை,​ நகத்தினை வளர்த்தல்,​ முறையற்ற உணவுப் பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். 

தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். 

தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ​ பப்பாளிச் சாற்றினை முகத்தில் பூசி வர பருவுக்கு இயற்கையான சிகிச்சை கிடைக்கும். 

ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீஸ் பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர பரு மறையும். வாரம் இருமுறை முகத்தில் அப்ளை செய்யவேண்டும். இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வரலாம்.

முகப்பருவை போக்கும் துளசி பவுடர்

துளசி, சந்தனம், வெட்டிவேர்... இன்னும் பல மூலிகைகள் அடங்கியது என்று பல விளம்பரங்கள் சொல்லக் கேட்டிருப்போம். அழகுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே சுவீகரித்துக் கொள்ளும் அளவுக்கு அழகு பலன்கள் நிரம்பியது துளசி! 

* பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது. இப்படி வரும் பருக்களை விரட்டியடிக்கிறது துளசி பேக் சந்தனத்தூள், எலுமிச்சைச்சாறு, துளசிச்சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, கலந்து பருக்கள் மீது தடவி, ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள். ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

* பனிக்காலத்தில் மேக்கப் போடும்போது முகத்தில் நீர் கோத்துக் கொண்டு பொத பொதவென்று ஆகிவிடும். இதற்கும் தீர்வு இருக்கிறது. 10 துளசி இலையுடன், சுக்குப் பவுடர் 2 சிட்டிகை லவங்கம் 1 இவை மூன்றையும் நன்றாக அரைத்து, முகத்தில் தடவி கழுவுங் கள். பிறகு மேக்கப் போடுங்கள். தோல் இறுக்கமாகும். 

* பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும்பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி பவுடர், சர்க்கரை - தலா கால் கப், பொடித்த பச்சைக் கற்பூரம் - 10 கிராம். இவற்றை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்தப் பவுடரால் தினமும் பல் தேய்த்து வர, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்றவை நீங்கி, பற்கள் பளபளக்கும்.

தினமும் தலைக்கு குளிப்பது கூந்தலுக்கு நல்லதா?

குளிக்கிற நோக்கில் தினமும் தலைமுடியைக் நீரில் அலசுவது நல்லதா, எப்படியெல்லாம் தலைமுடியைப் பராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்... 

ஷாம்புக்களில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால் அவை தலைமுடிகளிலும் மயிர்க் கால்களிலும் உள்ள தேவையான எண்ணெய்களை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்துவிடும். இது கூந்தலுக்கு நல்லதல்ல. எனவே வாரத்திற்கு 3 முறை தலைமுடியைக் கழுவினால் போதும். அதிலும் சாதாரண நீரில் கழுவுதல் போதுமானது.

• எண்ணெய்த் தன்மையுள்ள பொடுகுகளை நீக்க, ஆலிவ் எண்ணெயில் தலைமுடியை 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து, அதற்குப் பின் சூடான டவல் கொண்டு சுற்றிக் கொண்டு, பின்னர் முடியைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், இஞ்சிச் சாற்றை உச்சந்தலையில் தேய்த்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் முடியைக் அலசுவதும் நல்லது. மேலும் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு தேய்த்து 2 நாட்களுக்கு ஒருமுறை தலைமுடியைக் கழுவுதல் நலம். 

• தலைமுடிக்கு ஹென்னாவை உபயோகிப்பதால், அது வறண்டு தான் அதற்குப் பதில் தரமான கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது சிறந்தது. 

• தலைமுடிகளை மிருதுவாக்க ஹேர் சீரம்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது. ஓரிரண்டு துளிகளை மட்டுமே எடுத்து முடிகளில் சீராகத் தடவினாலே போதும். 

• ஹேர் ஸ்பா செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், இயற்கை வழிகளையே நாடுங்கள். செம்பருத்திப் பூவை நன்றாக அரைத்து முடிகளில் தடவுவது நல்லது. அது முடியை நன்கு கருமையாகவும், வலுவாகவும் வளரச் செய்யும். 

மேலும் இரும்புச்சத்து அதிகமுள்ள மருதாணி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த வேம்பு ஆகியவையும் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதே போல் முடி அலர்ஜிக்கு கற்றாழை மிகவும் நல்லது. முடிகளில் கலர் செய்திருப்பவர்கள், வெண்ணெயை உபயோகிக்கலாம்.