எண்ணெய் குளியல்
எண்ணெய் குளியல் என்றாலே, அது தீபாவளித் திருநாளன்று மட்டும் என்று மக்களின் மனதில் பதிந்துவிட்டது. தீபாவளி அன்று தலைக்கு மட்டும் எண்ணெய் வைத்து குளித்துவிட்டு அதை எண்ணெய் குளியல் என் சொல்லுவார்கள், ஆனால் எண்ணெய் குளியல் என்பது உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் குளிப்பதாகவும். வாரத்துக்கு ரெண்டு முறை எண்ணெய் குளியல் செய்தல் பெரும்பாலான நோய்கள் அண்டாது, என்று சொன்னால் இன்றைய தலைமுறைகள் கண்டுகொள்வதில்லை, தீபாவளிக்கு எண்ணெய் தேய்ச்சு குளிப்பதே பெரிது என்று சலித்துக்கொள்வார்கள்.
அவசியமா ?
வேலை பளுவின் காரணமாக குளிப்பதே பிரச்சினையாக உள்ள இன்றைய காலத்தில் எண்ணெய்க் குளியல் எல்லாம் எப்படி முடியும் என்று கேள்வி எழும். வேறு வழியில்லை, நவீன வாழ்க்கை உருவாக்கும் நெருக்கடியும், அலைச்சலும் நம் உடலில் நோயையும், உடல் உஷ்ணத்தையும் ஏற்படுத்துகிறது இவைகளை போக்க எண்ணெய்க் குளியல் அவசியமாகும். நம் முன்னோர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ எண்ணெய் குளியல் ஓர் முக்கிய காரணமாகும்.
வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க யோசிக்கும் நண்பர்கள், ஆத்திச்சூடியில் ஔவையார் சொல்லிய ‘சனி நீராடு’ என்ற முறையில் வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்த பலனை கொடுக்கும். நம் உடல் நலனை மற்றும் உடல் வெப்பத்தைச் சீர்ப்படுத்த இந்த முறையை பயன்படுத்துவது தவறு ஒன்றும் இல்லை என்பது என் கருத்து.
குளியல் முறை
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுக வேண்டும், காய்ச்சிய எண்ணெய் நல்ல பலன் அளிக்கும், அத்துடன் குளிக்க, வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். தேய்த்த எண்ணெயை போக்க சோப்பு ஷாம்பூ போட்டு உடலை சுத்தப்படுத்தக் கூடாது, சுத்தமான சிகைக்காய் தேய்த்து குளித்து தான் எண்ணையை போக்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதின் முழு பயனும் பெற தேய்த்த எண்ணெய் குறைந்தது முக்கால் மணிநேரமாவது உடலில் ஊறவேண்டும்.
தீரும் நோய்கள்
நல்லெண்ணெய்
நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும். உடலின் வெப்பம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் நோய்கள் தொலைந்து போகும், பசி அதிகரிக்கும். உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், இரத்த ஓட்டம் சீரடையும், உடலின் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, பல வாத நோய்கள் குணமடையும், மன அழுத்தம் குறையும்.
காய்ச்சிய நல்லெண்ணெய்
நல்ல குழிவான இரும்புக் கரண்டியில் தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்து அதனை மிதமான தீயில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு, சீரகம் போட்டு பொரிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியாவுடன் அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடவும், எண்ணெயை வெது வெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கவும். இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும், உச்சி முதல் பாதம் வரை மசாஜ் பண்ணலாம் எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்க்க வேண்டும், சிலருக்கு, வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வயிற்றின் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.
சீரக எண்ணெய்
நல்லெண்ணையை ஒரு இரும்பு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து அதனை மிதமான தீயில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்துக் காய்ச்சி அடுப்பில் இருந்து இறக்கி, சூடு லேசாக ஆறியாவுடன் நல்லெண்ணெய் வெது வெதுப்பாக இருக்கும்போதே தேய்த்துக் குளிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு, அதிக உடல் சூடு, தூக்கமின்மை, மன அமைதியின்மை, பித்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம், நோய் இருந்தால் படிப்படியாக குறைத்து குணம் பெறலாம்.
அரக்கு தைலம்
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அரக்குத் தைலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் நாற்றம், தொண்டைக் கம்மல், இரத்தக் குறைவு போன்ற நோய்கள் தீரும்.
விளக்கெண்ணெயின் பயன்
இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, இடுப்பு பகுதியில் மட்டும் தேய்த்துக் குளிக்கலாம். மலச்சிக்கலும் போகும்.
தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால்
தலையில் எண்ணையை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப்பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.
முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் தலையில் எண்ணையை அரக்கித் தேய்க்க கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க போதுமானது.
தலைக்கு மட்டும் தனி எண்ணெய்
தலைக்கு மற்றும் உடலுக்குத் தனித்தனியே எண்ணெயைப் பயன்படுத்தலாம், தலைக்கு மட்டும் தேய்க்க :
- சளி, இருமல், சைனஸ் போன்ற கப நோய்களைப் போக்கச் சுக்குத் தைலத்தை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
- செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசாலை சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெய், முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இளநரையைத் தடுக்க உதவும், மனதை அமைதிப்படுத்தும்.
தவிர்க்க வேண்டியவை
எண்ணெய்க் குளியல் நாளன்று அசைவ உணவு, காரம் அதிகமுள்ள பொருட்கள், மசாலாப் பொருட்கள், எளிதில் செரிக்காத பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து முழுகிய நாளன்று, உடல் சற்றுப் பலமிழந்து காணப்படுவது இயற்கையே. எனவே, கடினமான வேலைகளைச் செய்யாமல் ஓய்வெடுப்பது நல்லது. அன்றைக்குப் பகலில் உறங்குவதையும் உடலுறவையும் தவிர்க்க வேண்டும்.
குறிப்பு
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாத திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டுமென்றால், எண்ணெயோடு நீர் அல்லது பசு நெய் சேர்த்துக் குளிக்கலாம்.
மாதவிடய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது.
தினமும் நீராடும்போது, கழுத்துக்குக் கீழ் மட்டும் குளிப்பது நல்லதல்ல! முழுமையாகக் குளிப்பதே குளியல்.
குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.
ஒரு மணி நேரம் ஒதுக்க நேரம் இல்லாதவர்களுக்கு 2 நிமிடத்தில் உஷ்ணத்தை தணிக்க குறிப்பு அடுத்த பதிவில்