வலுத்தவனுக்கு வாழை... இளைச்சவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது, 'வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய முடியும். ஆனால், எள்ளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்’ என்பதுதான் இதன் பொருள். ஆனால், இக்கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, ''இளைத்தவனுக்கும் ஏற்றதாக இருக்கிறது... கற்பூரவல்லி வாழை!’' என்று குஷியோடு சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.
உள்ளே வருபவர்களை தலை வணங்கி வரவேற்பு கொடுப்பதுபோல் வாழைத்தார்கள் தொங்கிக் கொண்டிருக்க... பசுமையான அந்த வாழைத் தோட்டத்தில் சுப்ரமணியனைச் சந்தித்தோம்.
கை விட்ட விவசாயம்!
''எங்க குடும்பத்தொழில் விவசாயம்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை நான். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுமே, அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 35 வருஷமா விவசாயம் செஞ்சுட்டிருக்கேன். நெல், கேழ்வரகு, கத்திரி, வெண்டை, கரும்பு, வாழைனு பலவிதமான பயிர்களை சாகுபடி செய்வேன். சமயங்கள்ல விவசாயத்துல செலவு கட்டுபடியாகாமப் போய்... நகை, நட்டையெல்லாம் அடகு வைக்க வேண்டியதாயிடும். இப்படி கஷ்டப்பட்டு செய்தாலும், வர்ற வருமானம், அடகுல இருக்கற நகையை மீட்கறதுக்குகூட உதவாதுங்கறதுதான் நெஜம். அடுத்தடுத்து இப்படியே இருந்ததால... நிரந்தர வருமானத்துக்காக 'பால் உற்பத்தி பண்ணலாம்'கற யோசனையோட... வீட்டுல இருந்த நாட்டு மாடுகளை எல்லாம் வித்துட்டு, கலப்பின மாடுகளை வாங்கினேன். ஆனா... பால்ல கிடைச்ச வருமானம்... மாடுகளுக்கு தீவனம் வாங்கறதுக்கே போதல.
வழிகாட்டிய பசுமை விகடன்!
பிறகு, விவசாயத்துல நல்ல லாபம் தர்ற பயிர்களா தேட ஆரம்பிச்சேன். இதுக்காக நிறைய புத்தகங்கள வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த தகவலை வெச்சு, நம்மாழ்வார் நடத்தின இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அதுக்கப்பறம், பக்கத்து வீட்டுக்காரர் மூலமா 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களை சோதனை செஞ்சு பார்த்தப்போ... நல்ல பலன் கிடைச்சுது. அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்துல சின்ன நம்பிக்கை வந்துச்சு'' என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.
நம்பிக்கை கொடுத்த ஜீரோ பட்ஜெட்!
''பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன். பாலேக்கர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தான் எனக்கு விவசாயத்து மேல இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துச்சு. உடனே, ரசாயன உரங்களை நிறுத்திட்டு, முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். முதல் போகத்துல ஒரு ஏக்கர்ல பொன்னி நெல் சாகுபடி செஞ்சேன். 12 மூட்டைதான் (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. தரமில்லாத விதைநெல்லை ஏமாந்து வாங்கிட்டதால, அறுவடை செஞ்ச நெல்லோட நிறம் மங்கலா இருந்துச்சு. அதனால, மார்க்கெட் கமிட்டியில நெல்லை கொள்முதல் செய்யமாட்டேணுட்டாங்க. அப்படியே அரிசியாக்கி விலைக்குக் கொடுத்துட்டேன். நல்ல சுவையாவும், மணமாவும் இருந்ததால... சீக்கிரமே வித்துப்போச்சு.
அப்பறம், தரமான விதைகளை தேடினப்போ... மாப்பிள்ளை சம்பா, பூங்கார் மாதிரியான பாரம்பரிய ரக விதைநெல் கிடைச்சுது. பல தானிய விதைப்பு செய்து, ஜீவாமிர்தம், பழக்கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி... இந்த ரகங்களை சாகுபடி செஞ்சப்போ, ஏக்கருக்கு 25 மூட்டைக்குக் குறையாம கிடைச்சுது.
புயலுக்குப் பிறகும் மகசூல்!
கிட்டத்தட்ட இதேசமயத்துல... ஜீரோ பட்ஜெட் முறையில ஒரு ஏக்கர்ல கற்பூரவல்லி வாழை போட்டேன். அதுல போட்ட ஊடுபயிர் மூலமா கிடைச்ச வருமானத் துலேயே சாகுபடி செலவை முடிச்சுட்டேன். ஜீரோ பட்ஜெட்ங்கறதால... செலவும் குறைவுதான். வாழை நட்டு நாலு வருஷமாச்சு... மறுதழைவு மூலமாவே பலன் எடுத்துட்டு இருக்கேன். மரங்கள் நல்ல திடமாவே வர்றதால... முட்டு கொடுக்குறதுக்குக்கூட மரம் வெக்கிறதில்லை. 'தானே புயல்’ல எல்லா மரமும் பாதியில முறிஞ்சு போச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். வழக்கமா வாழைத் தோப்புல ஒரே சமயத்துலதான் தார் கிடைக்கும். ஆனா, மரங்களை வெட்டிவிட்டதால... ஒரே மாதிரி இல்லாம வேற வேற சமயங்கள்ல தார் விடுது. அதனால, 15 நாளைக்கு ஒரு முறை பத்து, பதினைஞ்சு தார், அளவுக்குக் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. இதன் மூலமா... வருஷம் முழுக்க வருமானம் கிடைக்குது.
என்கிட்ட மொத்தம் நாலு ஏக்கர் நிலமிருக்கு. ஒரு ஏக்கர் வாழை போக...
70 சென்ட்ல மாப்பிள்ளை சம்பா, 70 சென்ட்ல இலுப்பைப் பூ சம்பா, 70 சென்ட்ல சீரகச் சம்பா, 20 சென்ட்ல பசுந்தீவனம்னு இருக்கு. 70 சென்ட்ல சிறுதானியம் விதைக்கலாம்னு இருக்கேன்'' என்ற சுப்ரமணியன், கற்பூரவல்லி வாழை சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
அது அப்படியே பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 வாழை!
'கற்பூரவல்லி வாழையின் ஆயுள் காலம் 12 மாதங்கள். நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடவு செய்யலாம். ஏக்கருக்கு 8 மாட்டு வண்டி என்ற கணக்கில், எருவைக் கொட்டி களைத்து, மண் பொலபொலப்பாக மாறும் வரை நன்கு உழுது நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு ஏர் மூலமாக, இரண்டு அடி இடைவெளியில் பார் ஓட்டவேண்டும். 8 அடி இடைவெளியில், செடிக்குச் செடி 5 அடி இடைவெளி என்ற அளவில் பார்களில் அரையடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும் (இடையில் உள்ள பார்களில் ஊடுபயிர் செய்யலாம்). குழியை நான்கு நாட்கள் ஆறப்போட்டு, ஒரு மாத வயதுடைய வாழைக் கன்றை பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நட வேண்டும். ஏக்கருக்கு சுமார் 1,000 வாழைக் கன்றுகள் வரை நடவு செய்யலாம். வாழைக்கு இடையில் உளுந்து, கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு பாரிலும் ஒவ்வொரு வகை ஊடுபயிரை நடவு செய்வது நல்லது.
பூச்சி, நோய் தாக்காது!
தாராளமாக தண்ணீர் விட்டு நடவு செய்ய வேண்டும். அடுத்து, நடவு செய்த 3-ம் நாளில் உயிர்தண்ணீர்விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். ஊடுபயிர்கள் வளர்ந்த பிறகு, களை எடுக்க வேண்டியிருக்காது. அறுவடை வரை 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை, பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். இதேபோல... நடவு செய்த 25-ம் நாளில் இருந்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என்று மாற்றி மாற்றி தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு,
100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஜீவாமிர்தம்; 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா என்று கலந்து தெளிக்க வேண்டும்). 3, 6 மற்றும் 9-ம் மாதங்களில் ஒவ்வொரு மரத்துக்கும் அரை கிலோ அளவுக்கு மண்புழு உரம் வைத்து, மண்ணை அணைத்துவிட வேண்டும். இயற்கை முறையில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவுதான். அப்படியே இருந்தாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பக்கக் கன்றுகள் ஜாக்கிரதை!
2-ம் மாதத்தில் இருந்து 3-ம் மாதத்துக்குள் ஊடுபயிர்களை அறுவடை செய்து விடலாம். அறுவடை முடிந்த செடிகளை அப்படியே, உழவு ஓட்டி மடித்து விட்டால், அவை உரமாகி விடும். 6-ம் மாதத்தில் வாழையில் பக்கக் கன்றுகள் தோன்றும். அவற்றில் வாளிப்பான ஒரு கன்றை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றைத் தோண்டி எடுத்து, நிலத்தில் ஆங்காங்கே மூடாக்காகப் போட்டுவிட வேண்டும். ஒன்பதாம் மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை... தேவையில்லாத பக்கக்கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவற்றை மூடாக்காகப் போட்டுவர வேண்டும்.
குலை தள்ளிய மூன்று மாதத்தில்... அதாவது, 12-ம் மாதத்துக்குப் பிறகு தார்கள், அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிகபட்சம் ஒரு மாதத்தில் அறுவடை செய்து விடலாம். தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு, பக்கக்கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து, இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம்.
ஏக்கருக்கு 90 ஆயிரம்!
சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ''ஒரு தார்ல ஏழுல இருந்து பதிமூணு சீப்பு வரை இருக்குது. ஒரு சீப்புல பதினஞ்சுல இருந்து இருபத்திரண்டு காய் வரை இருக்குது. ஒரு ஏக்கர்ல 1,000 வாழை மரம் நட்டா... சேதாரம் போக, குறைஞ்சது 900 தார் வரை கிடைக்கும். ஒரு கற்பூரவல்லி தார், குறைந்தபட்சமா 80 ரூபாய்க்கும், அதிகபட்சமா
150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே...
900 வாழை தாருக்கும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் செலவு போக, 70 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சி பொங்க செலவு-வரவு கணக்கைச் சொன்னார்!
No comments:
Post a Comment