வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்


வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-

பொதுவாக வீட்டில் தரை, பாத்திரங்கள், துணிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டே இருக்கும். ஆனால் இவை எல்லாம் விட கிருமிகள் அதிகம் வாழும் சில விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை பல வீடுகளில் சுத்தப்படுத்துவதே கிடையாது என்பதுதான் அச்சம் தறும் செய்தியாகும்.

முதலில், கால் மிதியடிகள் : ஒரு கால் மிதியடியை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்கிறீர்கள் என்று கேட்டால், பல இல்லத்தரசிகள் யோசித்துத்தான் பதில் சொல்வார்கள். ஆனால், கால் மிதியடிகள்தான் பல கிருமிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டு அதனை நோயாகப் பரப்பி வருகின்றன.

அடுத்ததாக, கதவுகளின் கைப்பிடிகள். அதிலும் கழிவறைக் கதவுகளில் உள்ள கைப்பிடிகள் கிருமிகளின் சொர்காபுரியாக இருக்கும். எனவே, பீரோ, பிரிட்ஜ், அறைக் கதவுகளின் கைப்பிடியை அவ்வப்போது சுத்தப்படுத்துங்கள்.

டிவி ரிமோட் : வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது ரிமோட்தான். எனவே, அதனை உலர்வான துணியைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தால், குழந்தைகளை பல நோய்களில் இருந்து காக்கலாம். ஏன் என்றால், ரிமோட்டை எடுத்து வாயில் வைத்து விளையாடும் குழந்தைகள் பல வீடுகளில் உள்ளன.

வீட்டை சுத்தப்படுத்தும் மாஃப். இதனை பயன்படுத்தியதும் அப்படியே எடுத்து உலர வைத்துவிடாமல், பயன்படுத்திய பிறகு, சோப்பு தண்ணீரில் நன்கு துவைத்து பிறகு சுத்தமான நீரில் அலசி உலர வையுங்கள்.

வீட்டில் குளிக்கப் பயன்படுத்தும் பக்கெட் மற்றும் ஜக்குகளை அடிக்கடி நன்கு தேய்த்து சூரிய வெளிச்சத்தில் காய வைப்பது மிகவும் அவசியமாகும்.

இயற்கையின் அழகு சாதனப்பொருட்கள்


இயற்கையின் அழகு சாதனப்பொருட்கள்

தினசரி புதுப்புது அழகு சாதனங்களின் விளம்பரத்தை நாம் பார்க்கிறோம். எது உங்கள் சருமத்துக்கு தீங்கு விளைவிக்காதது, எதை வாங்கினால் நீங்கள் விரும்பும் பயன் கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு பதில், நீங்கள் அந்தப் பொருட்களை வாங்கி பயன் படுத்திய பிறகுதான் கிடைக்கும்!. ஆனால் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் நம் அழகுக்கு அழகு சேர்க்க, இயற்கை பல அழகு சாதனங்களை நமக்கு வழங்கியுள்ளது. இவற்றை தேடி நாம் வெகு தூரம் செல்ல வேண்டாம். உங்கள் சமையல் அறையிலேயே கிடைக்கும் பொருட்கள்தான் இவை. 

1. வெள்ளரிப் பிஞ்சு: 

இதன் சாற்றை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சற்று சூடான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். 

2. எலுமிச்சம் பழம் : 

எலுமிச்சம் பழச் சாற்றை தேனுடன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தை வெண்மையாக்கும். ப்ளீச் செய்து கொள்வதற்கு பதிலாக இதை உபயோகித்துப் பாருங்கள். 

எலுமிச்சம் பழச் சாற்றுடன் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தடவினால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கவும். 

3. மோர் : 

இது குடிப்பதற்கு மட்டுமல்ல, குளிப்பதற்கு முன்பு முகத்திலும் உடம்பிலும் தடவி பிறகு குளித்தால், உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 

4.வெந்தயம் : 

சீயக்காய் அரைக்கும்போது வெந்தயம் போட்டு அரைப்பது வழக்கம். ஷாம்பு உபயோகிக்கும் இந்த காலத்தில், இதைத் தண்ணீரில் ஊர வைத்து குளிப்பதற்கு முன் முடியில் தடவினால் முடி பளபளப்பாக இருக்கும். 

5.விளக்கெண்ணெய் : 

கை, கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

இதை புருவத்திலும், கண் இமையில் உள்ள முடியிலும் தினமும் படுப்பதற்கு முன் தடவி வந்தால் அது அடர்த்தியாகும். 

6. பருப்பு : 

கடலை மாவையும் பயத்தம் பருப்பு மாவையும் கலந்து சோப்புக்கு பதிலாக உபயோகித்து வந்தால், உங்கள் சருமம் உலர்வதை தவிர்க்கலாம். 

7. தேங்காய் எண்ணெய் : 

இதை முடியில் தடவுவது பல்லாண்டு காலமாக தொடர்ந்து வரும் பழக்கம். இதை வாரம் ஒருமுறை உடலில் நன்றாகத் தேய்த்து, அதன் பின் குளித்தால் பட்டுப் போன்ற மென்மை தரும். 

8. பூசு மஞ்சள் தூள் : 

இதை, தொடர்ந்து முகத்தில் பூசி குளித்தால் முகத்தில் முடி வளர்வதை தடுக்கலாம். ஆனால் மஞ்சள் தேய்த்து குளித்தவுடன் வெய்யிலில் செல்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் இதனால் சருமம் கருமை அடையும்.

வீட்டு வைத்திய குறிப்புகள்

வீட்டு வைத்திய குறிப்புகள்:-


சீரகம்:

சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கேரளத்து மக்கள் எல்லோரது வீட்டிலும் இந்த சீரக வெள்ளம் இருக்கும்.

தொண்டைக்கட்டிற்கு:

அதிமதுரத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி இடித்து சலிக்கவும். ஒரு வேலைக்கு அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

அஜீரணம்:

அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரனக் கோளாறுகள் மறையும்.

கால் ஆணிக்கு:

மருதாணி இலைகள், சிறிது வசம்பு, சிறிய மஞ்சள் துண்டு மூன்றையும் நன்கு அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து கால் ஆணிடில் வைத்து ஒரு துணியால் கட்டி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகி விடும்.

தேமல் மறைய:

புடலங்காயை 6 அங்குலத்திற்கு வெட்டி, குடலை நீக்கி, சீயக்காயை அரைத்து அதனுள்ளே வைத்து, வெய்யிலில் ஒரு நாள் காய வைக்கவும். மறு நாள் அதை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி இ மணி நேரம் ஊறவைத்து வெந்நீரில் குளிக்கவும். தொடர்ந்து இது போல செய்து வந்தால் சில தினங்களில் தேமல் மறைந்து விடும்.

தலைவலி:

ஒரு ஸ்பூன் கிராம்பையும் ஒரு சிட்டிகை கல் உப்பையும் அரைத்து பற்று போட்டால் தலைவலி சரியாகும்.

விக்கலுக்கு:

சீனியை வாயில் போட்டு மெதுவாக உறிஞ்சவும். விக்கல் நின்று விடும். 2 நிமிடம் கழித்து மறுபடியும் இது போல செய்யலாம். குழந்தைகளின் விக்கலுக்கு விரலை நீரில் நனைத்து சீனியில் தொட்டு வாயில் வைக்கவும்.

மலச்சிக்கல்:

வெங்காயத்தையும் முள்ளங்கியையும் அடிக்கடி சமையல் சேர்த்துக்கொள்ளவும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு எடுத்து பவுடர் செய்து ஒரு ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும்.

உயர் இரத்த அழுத்தம் பற்றிய தகவல்கள்

உயர் இரத்த அழுத்தம் பற்றிய தகவல்கள்:-


ஓர் ஆண் அல்லது பெண்ணுக்கு அவருடைய வயதுக் கேற்ப இருக்க வேண்டிய இயல்பான அளவைவிடக் கூடுதலாக இருக்கும் இரத்த அழுத்தமே, உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். தமனிக் குழாயில் (artery) பாய்ந்து செல்லும் இரத்தம், குழாயின் சுவர்ப்புறப் பரப்பின் ஓர் அலகில் ஏற்படுத்தும் அழுத்தமே (pressure in unit area) இரத்த அழுத்தம் எனப்படுகிறது.

இரத்த அழுத்தம் இரண்டு எண்களால் ஒன்றின் கீழ் ஒன்றாக ஒரு வகுத்தல் போல பதிவு செய்யப்படுகிறது. மேலிருக்கும் எண் இரத்த ஓட்டத்தின் போது இதயச் சுருங்கியக்கத்தின் காரணமாக ஏற்படும் இரத்த அழுத்த (systolic pressure) அளவாகும்; கீழே இருக்கும் எண் இதய விரிவியக்கத்தின் காரணமாக (diastolic pressure) உண்டாகும் இரத்த அழுத்த அளவாகும். எடுத்துக்காட்டாக ஒருவரின் இரத்த அழுத்த அளவு 120/80 (மில்லி மீட்டர் பாதரச அளவு - mm Hg) எனக் கொள்வோம். இதயச் சுருங்கியக்கத்தின் போது அவருடைய இரத்த அழுத்தம் உயரளவான 120மி.மீ. பாதரச அளவும், விரிவியக்கத்தின் போது 80 மி.மீ பாதரச அளவும், உள்ளது எனப் பொருள்படும். ஒருவருடைய வயது, நாள்தோறும் அவர் மேற்கொள்ளும் உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி, கடைபிடிக்கும் உணவுப் பழக்கம் ஆகியவையே அவரது இரத்த அழுத்ததில் தாக்கத்தை ஏற்படுத்துவனவாகும்.

இரத்த அழுத்தத்தை அளவிடும் முறை
இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு குருதி அழுத்தமானி (sphygmomanometer) என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. பாதரச அழுத்தமானியுடன் (Mercury Manometer) இணைக்கப்பெற்ற காற்றினால் உப்பும் ஒரு கச்சையை (inflatable cuff) நோயாளியின் தோளுக்குக் கிழே மேற்புறக் கையைச் சுற்றி நன்கு கட்டுவர். இதனால் கையிலுள்ள தமனிக் குழாய் அழுத்தப் பெற்று இரத்த ஓட்டம் தற்காலிமாகத் தடைபடுகிறது. அடுத்து உப்பிய கச்சையிலுள்ள காற்று வெளியேற்றப்படும். இதே வேளையில் இரத்த அழுத்தத்தை அளவிடுபவர், ஸ்டெதெஸ்கோப் எனப்படும் மார்பாய்வியை முழங்கையிலுள்ள மேற்கைத் தமனியில் வைத்து, அத்தமனி வழியே இரத்தம் செல்லத் துவங்கும் போது ஏற்படும் நாடித் துடிப்பு ஒலிகளைக் கூர்ந்து கவனிப்பார். தமனியில் ஏற்படும் அழுத்தம், கச்சையின் அழுத்ததை விட அதிகமாகும் வரை துடிப்பு ஒலிகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். முதல் ஒலியின் போது ஏற்படும் அழுத்த அளவு, இதயச் சுருங்கியக்க அழுத்தமாகும்; இறுதியாகக் கேட்கும் ஒலியின் போது உண்டாகும் அழுத்த அளவு, இதய விரிவியக்க அழுத்தமாகும். நோயாளியின் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில் இரத்த அழுத்தம் மும்முறை அளவிடப்படுதல் வேண்டும்; கடைசி அளவைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு குறைந்தது அரை மணி முன்பு வரை, புகை பிடித்தல், காஃபி அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு காரணத்திற்காக இரத்த அழுத்த அளவீடு மருத்துவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும்; எனவே இதைப்பற்றி நாம் அனைவரும் அறிந்துள்ளோம் என்பதில் ஐயமில்லை.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன ?
இரத்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உயரளவிலேயே நிலையாக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது. இதனை ஹைப்பர்டென்ஷன் என ஆங்கிலத்தில் கூறுவர். இதயச் சுருங்கியக்க அழுத்தம் 160 மி.மீ பாதரச அளவுக்கும், இதய விரிவியக்க அழுத்தம் 95 மி.மீ. பாதரச அளவுக்கும் சமமாகவோ அல்லது கூடவோ இருந்தால் அந்நிலையை உயர் இரத்த அழுத்த நிலை எனக் கூறலாம் என்று உலக நல்வாழ்வு நிறுவனத்தின் (World Health Organization - WHO) நிபுணர் குழு கருதுகிறது. ஆனால் மருத்துவ அறிஞர்களிடையே, உயர் இரத்த அழுத்தத்தின் துவக்க நிலையை அறுதியிடுவதில் பலவகைக் கருத்துகள் நிலவுகின்றன என்றே கூற வேண்டும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோரிடையே உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்தல், தடுத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் சிகிச்சை அளித்தலுக்கான அமெரிக்கத் தேசிய இணைப்புக் குழுவினரின் ஆறாவது பொது அறிக்கை, இரத்த அழுத்தத்தைக் கீழ்க்கண்டவறு வகைப் படுத்துகிறது:
இரத்த அழுத்த வகைப்பாடு இதயச் சுருங்கியக்க அழுத்தம் (மி.மீ. பாதரச அளவு) இதய விரிவியக்க அழுத்தம் (மி.மீ. பாதரச அளவு) 

உகந்த நிலை <120 <80

இயல்பு நிலை <130 <85

இயல்புக்கு மேற்பட்ட நிலை: 130 - 139 85 - 89

உயர் இரத்தஅழுத்தம் நிலை 1: 140 - 159 90 - 99 

உயர் இரத்தஅழுத்தம் நிலை 2: 160 - 179 100 - 109 

உயர் இரத்தஅழுத்தம் நிலை 3: 180 - 209 110 - 119 



உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்தல்

உயர் இரத்த அழுத்தத்துக்கு ஆட்பட்ட ஒருவர், வாழ்நாள் முழுதும் அதனோடு வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். மேலும் உயர் இரத்த அழுத்தம் எவ்வித அறிகுறியும் இன்றி, உள்ளுறை நோயாகவே பெரும்பாலோரிடம் இருந்து வருகிறது; மிகச் சிலரிடம் மட்டுமே அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே ஒவ்வொருவருக்கும் உயர் இரத்த அழுத்தச் சோதனை நடத்துவது இன்றியமையாததாகும்.

இதயத்துக்குக் கடுமையான கூடுதல் பணிச் சுமையை அளிப்பதால் உயர் இரத்த அழுத்தம் மிகவும் அபாயமானதாகக் கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் தொடர்ந்து இருக்குமானால், உடலின் பல பகுதிகள் செயற்பாட்டை இழந்து, இறுதியில் இறப்பு தவிர்க்க முடியாததாகி விடும். எனவே துவக்க நிலயிலேயே இந்நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.

முன்பு இதய விரிவியக்க அழுத்தமே, உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய காரணியாகக் கருதப்பட்டது; ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி இதய சுருங்கியக்க அழுத்தமே, இதயக் குருதி நாளம் சார்ந்த நோய்களுக்கு (cardiovascular morbidity) முக்கிய காரணமாகக் கருதப் படுகிறது. தகுதியான மருத்துவரிடம் முறையான சிகிச்சையைப் பெறுவதன் வாயிலாக இந்நோயின் இன்னல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலும். 

உலக நல்வாழ்வுக் கழகப் புள்ளிவிவரப்படி நகரத்தில் வாழும் ஆண்களில் 1000 க்கு 60 பேரும், பெண்களில் 70 பேரும் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது; கிராமப் புறங்களில் இதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளில் தமனி உயர் இரத்த அழுத்த நோய் (arterial hypertension) பொது மக்களின் நல்வாழ்வில் பெரும் பிரச்சினைகளை உருவாக்குவதாக உள்ளது எனலாம்.

இந்த நோயானது, புவியியல் சார்ந்தும், மரபு வழிப்பட்ட பண்புகளைச் சார்ந்தும் இருப்பதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. மேலும் குடும்பத்தில் வழிவழியாக இந்நோய் தாக்கும் என்றும் கருதப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்

அடிப்படை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension): சாதாரணமாக 95% மக்களுக்கு இந்த வகையான உயர் இரத்த அழுத்தமே காணப்படுகிறது. இது வருவதற்கான அடிப்படைக் காரணமாக எதையும் கூறுவதற்கில்லை.

துணைநிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension): ஏறக்குறைய 5% உயர் இரத்த நோயாளிகள் இவ்வகையில் அடங்குவர். இதற்கான சில அடிப்படைக் காரணங்கள் இருப்பதுண்டு. சிறுநீரகம் தொடர்பான நோய்கள், நாளமில் சுரப்பிக் குறைபாடுகள், சில கருத்தடை மாத்திரைகள் ஆகியன உடலில் குருதிச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடும்; கருவுற்ற நிலையில், பெண்களுக்கு இரத்த அழுத்தம் உயர்வதும் உண்டு.

வெள்ளாடை உயர் இரத்த அழுத்தம் (White coat hypertension): மருத்துவரை வெள்ளை ஆடையில் கண்டவுடனே, தற்காலிகமாகத் திடாரென்று சிலருக்குத் தோன்றும் இரத்த அழுத்தம் இது. மருத்துவ மனையை அடைந்தவுடனே, அச்சம் காரணமாக உண்டாவது இவ்வகை இரத்த அழுத்தம். சுமார் 20% நோயாளிகளுக்கு இவ்வகை இரத்த அழுத்தம் உண்டாவதாகக் கண்டறிந்துள்ளனர்.

தீவிர உயர் இரத்த அழுத்தம் (Accelerated hypertension): அண்மையில் இருந்த உயர் இரத்த அழுத்தத்தைவிட, கூடுதலாகத் தற்போது ஏற்பட்டிருக்கும் உயர் இரத்த அழுத்த அளவாகும் இது. கண்களுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஒளி நரம்பின் இரத்த நாளம் சிதைவுற்று அதனால் உண்டாகும் கண்குமிழ் அழற்சியினோடு (papilledema) தொடர்புடையது இவ்வகைத் தீவிர உயர் இரத்த அழுத்தமாகும்.

அபாயநிலை உயர் இரத்த அழுத்தம் (Malignant hypertension): கட்டுப்படுத்த முடியாத, கடுமையான சிக்கல் நிறைந்த உயர் இரத்த அழுத்த வகையாகும் இது. இந்நிலையில் இரத்த அழுத்தம் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிடும் (இதயச் சுருங்கியக்க அழுத்தம் 200 மி.மீ. பாதரச அளவுக்கும், 

இதய விரிவியக்க அழுத்தம் 130 மி.மீ. பாதரச அளவுக்கும் கூடுதலான நிலையை அடைவதுண்டு.) அபாயநிலை உயர் இரத்த அழுத்தமானது, உடலுறுப்புகள் சிதைந்து சேதமடைதல், விழித்திரைக் குருதிப்போக்கு ஆகியவற்றிற்கு வழி வகுக்கும். எனவே இவ்வகை உயர் இரத்த அழுத்தத்திற்கு, நெருக்கடி நிலை மருத்துவச் சிகிச்சை அளிப்பது இன்றியமையாதது. 

இடர்க் காரணிகள் (Risk factors)
உயர் இரத்த அழுத்தமே பல்வேறு நோய்களுக்கான இடர்க்காரணியாக அமைகிறது. இருப்பினும் உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான இடர்க் காரணிகளை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று தடுக்கக் கூடிய அல்லது மாற்றக் கூடிய இடர்க் காரணிகள்; மற்றொன்று தடுக்க இயலா இடர்க் காரணிகள்.

தடுக்க இயலா இடர்க் காரணிகள் (Non-modifiable Risk Factors)

அ) வயது: ஆண், பெண் இரு பாலருக்கும் வயது கூடக் கூட, இரத்தம் அழுத்தம் கூடுவதும் தவிர்க்க இயலாததாகிறது. 

ஆ) மரபு வழிக் காரணங்கள்: ஆய்வு முடிவுகளின்படி, இயல்பான இரத்தம் அழுத்தம் உள்ள பெற்றோருக்குப் பிறப்பவர்களில், 3% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது என்றால், உயர் இரத்தம் உள்ள பெற்றோருக்குப் பிறப்பவர்களில் 45% பேருக்கு அது உண்டாகிறது. 

தடுக்கக் கூடிய இடர்க் காரணிகள் (Modifiable Risk Factors):

அ) உடற் பருமன்: உடலின் எடை கூடக் கூட, உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளாவதும் தவிர்க்க இயலாததாகிறது.

ஆ) உணவில் உப்பின் அளவு: உணவில் உப்பை மிகுதியாகச் சேர்த்துக் கொள்ளுவதாலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆட்பட வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 7 - 8 கிராம் உப்பு என்பது உயர்ந்த அளவாகும். மிகப் பழங்காலத்தில் குறைந்த அளவு உப்பினை உட்கொண்ட நமது சமூகத்தில் உயர் இரத்த அழுத்தம் என்பது கேள்விப்படாத நோயாக இருந்தது. 

இ) அன்றாட உணவுப் பழக்கம்: கொழுப்புப் பொருட்கள், குடிப்பழக்கம் ஆகியன உயர் இரத்த அழுத்தை ஊக்குவிக்கும் உணவுப் பழக்கங்களாகும்.

ஈ) உடலுழைப்பு: தொடர்ந்த உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சியினால் உடலின் எடை குறைவதோடு, இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். 

உ) பதற்ற நிலை: உளவியல் காரணங்களும், மன உளைச்சலும், மூளைக்குத் தரும் கடுமையான உழைப்பும் கூட உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணங்களாக அமைகின்றன; எனவே அமைதி, மனக் கட்டுப்பாடு, ஆகியன மிகவும் இன்றியமையாதவை.

உயர் இரத்த அழுத்தத்தினால் விளையும் சிக்கல்கள்:
மூளை வாத நோய் (Stroke): உயர் இரத்த அழுத்தத்தால், குருதிக் குழாயில் சேதமேற்பட்டு, மூளையில் குருதிப் போக்கு ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. இது உயிருக்கே உலை வைக்கக்கூடிய நோயாகும்.
உயர் இரத்த அழுத்த மூளை நலிவு நோய் (Hypertensive Encephalopathy): பேச்சுக் கோளாறு, பார்வைக் கோளாறு, அசாதாரணப் புலனுணர்வு, வலிப்பு நோய், மனநிலை மாற்றம் ஆகிய நோய்களும், நரம்புத் தொடர்பான நோய்களும் இதன் காரணமாக உண்டாகும்.

உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் (Hypertensive Retinopathy): விழித்திரை அருகிலுள்ள இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் குறைவதோடு, இரத்தக் கசிவும் ஏற்படும் வாய்ப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உண்டாகிறது.

இதயக் கோளாறுகள் (Cardiac Complications): உயர் இரத்த அழுத்தம் என்பதே, இதயத்திற்குச் செல்லும் குருதி குறைபாட்டுக்கு வழிவகுக்கும் நோயாகும். உயர் இரத்த அழுத்தம் இதயத்திற்கு மிகுந்த அழுத்தத்தைத் தருகிறது. இதனால் இடது வென்ட்ரிகல் விரிவடைந்து, இறுதியாக அது தன் பணியைச் செய்ய இயலாமல் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் நின்றுவிடும். 

சிறுநீரகப் பிரச்சினைகள் (Kidney Problems): நீண்ட கால உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் தனது பணியைச் செய்ய இயலாமல் பழுதடைந்து போவதற்கு வழி வகுக்கும். 

உயர் இரத்த அழுத்தத்திற்குச் சிகிச்சை அளித்தல்:
உயர் இரத்த அழுத்த நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதன் முக்கிய நோக்கம், நோய்க்கு உரிய இடர்க் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றிற்கு உரிய மருத்துவ முறைகளை மேற்கொண்டு, நோயாளி நீண்ட நாள் வாழ வழி வகுத்தலே ஆகும். துணைநிலை உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு, உரிய மருந்துகளைத் தருவதோடு, நோய்க்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றிற்கும் உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். உயர் இரத்த அழுத்த நோய் வராமலே தடுப்பதற்கான வருமுன் காக்கும் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றுதல் நலம்.

உணவு முறை: குடிப் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல், சரியான உணவை உட்கொள்ளுதல் ஆகிய இரண்டும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உகந்த உணவுப் பழக்கமாகும். கொழுப்புப் பொருட்களை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச் சத்து நிறைந்த உணவு மிகவும் நல்லது. குறைந்த அளவு உப்பையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த, உப்பு மிகுந்த, தின்பண்டங்களையும் தவிர்க்க வேண்டும்.

புகை பிடித்தல்: புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்த்தல் இன்றியமையாதது.
உடற்பயிற்சியும், ஓய்வும்: (குறைந்தது வாரத்திற்கு மூன்று நாட்கள், சுமார் 20 நிமிட நேரம்) தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் தேவையான ஒன்று; விரைந்து நடத்தல், நீச்சல் போன்றவை உடலைத் தகுதியாக வைத்துக்கொள்வதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்க வழி வகுக்கும்.

ஆழ்நிலைத் தியானம், மூச்சுப் பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவையும் இரத்த அழுத்ததைக் குறைக்கப் பயன்படுகின்றன. இவற்றால் உடலுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும். ஆனால் இப்பயிற்சிகளின் வாயிலாக மருந்து எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க இயலாது; ஓரளவு மருந்தின் அளவையும், வீரியத்தையும் குறைக்கலாம். 

உயர் இரத்த அழுத்தத்திற்கான மருத்துவமனைச் சோதனைகள்:
உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மருத்துவரால் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தொடர்ந்து சில மருத்துவ நோயியல் ஆய்வுகளை அவ்வபோது நடத்துவது இன்றியமையாதது. அவை பின்வருமாறு:
குளுகோஸ், புரோட்டின், சிறுநீர்க் குருதி ஆகியவற்றிற்கான சிறுநீர் பகுப்பாய்வு
பிளாஸ்மா யூரியா மற்றும் கிரியேட்டினைன் ஆகியவற்றைத் தீர்மானித்தல்
பிளாஸ்மா கொழுவியம்/டிரைகிளிசரைட் ஆகியவற்றைத் தீர்மானித்தல்
மார்பின் எக்ஸ் ரே படம்
இதய மின்னியக்கப் பதிவு (Electrocardiograph - ECG)
பிளாஸ்மா எலெக்ட்ரோலைட்கள்

உயர் இரத்த அழுத்தம் துவக்க காலத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் அமைதியாக இருப்பதால், அதனைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். மிகுந்த சினம் கொள்வதும், அடிக்கடி தலைவலி வருவதும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் என்பது உறுதி செய்யப்படாத நம்பிக்கை. ஆனால் சிகிச்சை பெறாத நிலையில், உயர் இரத்த அழுத்தம் பல்வேறு சிக்கல்களுக்கு வழியுண்டாக்கி, உடனிருந்து உயிரையே வாங்கிவிடும் என்பது மட்டும் உறுதி.

தேவையான மருத்துவச் சிகிச்சை, முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை, தகுந்த உடற்பயிற்சி ஆகியவை வாயிலாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இயல்பாக நீண்ட காலம் வாழ இயலும் என்பதில் ஐயமேதுமில்லை.

இரத்த அழுத்தம்
வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, ரத்த அழுத்த நோய் முக்கியமான காரணமாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்க மருத்துவத்துறையால் வெளியிடப்படும் ஹைப்பர் டென்சன் என்ற மருத்துவ இதழ் இரத்த அழுத்தம் குறித்த கடந்த 1976ம் ஆண்டு முதல் அவ்வப்போது விரிவான அறிக்கையினை வெளியிட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு கடைசியாக இந்த இதழில் வெளியிட்டுள்ள உயர் ரத்த அழுத்த நோய் தடுப்பு, ஆய்வு, பரிணாமம் மற்றும் சிகிச்சை குறித்து வெளியிடப்பட்ட 7 வது அறிக்கையில் (The seventh report of the joint national committee on prevention, detection, evaluation and treatment of high blood pressure – JNC) மருந்தை விட, அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

உடல் எடையைக் குறைப்பது, உணவுக் கட்டுப்பாடு, தேவையான கலோரிகளை உட் கொள்வது போன்ற நடைமுறைகளையே, ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழி முறைகளாக இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.

இவற்றுடன் சீரான உடல் இயக்கத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. அதாவது ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் உடலுக்கு அவ்வப்போது அசைவும், வேலையும் கொடுத்து வந்தால், ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதேபோன்று பிரிட்டிஷ் உயர்ரத்த அழுத்த கழகமும், சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கைகள் தெரிவிக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே பார்ப்போம். ரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டவர்களும், தங்களது முன்னோர்களுக்கு ரத்த அழுத்த நோய் உள்வர்களும் இந்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.

அவ்வப்போது குறித்த கால இடைவெளியில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்து கொள்வது மிக முக்கியம். இதன் மூலம் உடலில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்துகொள்ள இயலும்.

உடல் எடைக்கும், ரத்த அழுத்த நோய்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான உடல் எடையைக் குறைப்பதில் கவனம் தேவை. தேவையான எடையைக் குறைத்துவிடக் கூடாது.

சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கிய உப்புக்கும், உடல் பருமனடைவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உடல் பருமனடைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 6 கிராம் அளவுக்கும் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.

ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுக்கட்டுப்பாடு ஆய்வில் (Dietary approach to stop hypertension study – DASH) கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக உட் கொள்ளும் கொழுப்புச் சத்தைவிட 35 சதவீதம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வேகவைக்கப்படாத காய்கறிகளும், பழங்களும் உணவில் அதிகம் இடம்பெற வேண்டும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பால், நெய், தயிர், மோரைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல் நல்லது. முன்பே தயாரித்து, குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து பின்னர் எடுத்துச் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான, தொடர்ச்சியான உடற் பயிற்சியை செய்துவர வேண்டியது அவசியம். பிராணயாமம் என்று சொல்லப்படுகின்ற மூச்சுப்பயிற்சி, ரத்த அழுத்த நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் சிறப்பு வாய்ந்தது. இந்த எளிய பயிற்சியைச் செய்து வந்தாலே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் நம்மை அணுகாது.

மது, புகையிலை, கோகெய்ன் போன்ற புகையிலைப் பொருட்களை அறவே ஒதுக்க வேண்டும். ரத்த அழுத்த நோய்க்கான முழு முதல் காரணிகள் மது உள்ளிட்ட போதைப் பொருட்கள்தான். எனவே போதைப் பழக்கத்தை வைத்துக்கொண்டு, ரத்த அழுத்த நோயை நிச்சயமாக குணப்படுத்த முடியாது.

பெண்களைப் பொறுத்தவரையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உணவில் அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டாலே ரத்த அழுத்த நோயைத் தவிர்க்க முடியும் என்று பெல்ஜியத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினர் மக்னீசியம், மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், மற்ற பிரிவினர் அது இல்லாத உணவினையும் இரண்டு வாரங்கள் உண்ணவைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் கழித்து பரிசோதனை செய்து பார்க்கும்போது கால்சியம், மக்னீசியம் சத்துள்ள உணவை உட்கொண்ட பெண்களின் ரத்தழுத்த அளவு மிகவும் சீராக இருந்தது கண்டறியப் பட்டுள்ளது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மற்றவற்றை விட ஆலிவ் எண்ணெயே சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக மீன் எண்ணெயையும் சமையலில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ரத்த அழுத்த நோய் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. இவை இரண்டும் அறவே கொழுப்புச் சத்து இல்லாதவை என்பதே இதற்குக் காரணம்.

சி வைட்டமின் சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏ மற்றும் ஈ வைட்டமின்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தும் குணம் இல்லை.

ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைகளை விட, மனதை இலகுவாக்க உதவும் தியானப் பயிற்சியே சிறந்த மருந்து என்பதை சர்வதேச மருத்துவ ஆய்வுகள் உறுதியாகக் கூறுகின்றன.

ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த மருந்துகளைவிட அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் உணவுக் கட்டுப்பாடும், உடல் மன பயிற்சியும் அவசியம் என்பதை, மேலே உள்ள பரிந்துரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

நம் உடல் நலத்துக்கு ஏற்ப இயற்கை மருத்துவ குறிப்புகள்

நம் உடல் நலத்துக்கு ஏற்ப இயற்கை மருத்துவ குறிப்புகள்:-


* உடலில் எந்த உறுப்பில் சுளுக்கு ஏற்பட்டாலும் உடனே நிவாரணம் பெற, சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் சிறிது மிளகுத்தூளையும், கற்பூரத்தையும் போட்டுக் கலக்கி, சுளுக்குள்ள இடத்தில் பூசினால் சுளுக்கு போய்விடும்.

* வயிற்றில் சங்கடமா? அரை தம்ளர் மோரில் சிறிது தண்ணீர் விட்டு துளி உப்பும் கொஞ்சம் பெருங்காயப்பொடியும், அரை தேக்கரண்டி சர்க்கரையும் போட்டுக் கலக்கிக் குடித்தால் போதும். அடுத்த அரை மணியில் முகம் பிரசன்ன வதனமாகிவிடும்.

* பெண்களுக்கு 40 வயதில் மாதவிடாய் பிரச்னை இருப்பது சகஜம். ராகியை மாவாக அரைத்து வைத்துக்கொண்டு காலையில் கஞ்சி வைத்து மோர், உப்பு சேர்த்து அல்லது பால் சர்க்கரை விட்டுக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உதிரப்போக்கு கட்டுப்படும்.

* 40 வயதுப் பெண்களுக்கு லேசான தலை சுற்றல் வரும். இதைத் தடுக்க சந்தனம், கொத்துமல்லி விதை, நெல்லி வற்றல் மூன்றையும் சம அளவில் சேர்த்து இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடித்தால் தலை சுற்றல் நிற்கும்.

* மாதவிலக்கின்போது ஏற்படும் வலியைக் குறைக்க கட்டிப் பெருங்காயத்தை நீரில் கெட்டியாகக் கரைத்து மடக் மடக் என்று குடித்துவிட வேண்டும்.

* வயிற்றுப் புண்ணினால் வரும் வயிற்று வலியாக இருந்தால் மிதமான சூடான வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் உடனே வலி குறையும்.

* அதிகமான மது குடித்ததினால் உண்டான தலைவலி அல்லது அஜீரணத்தால் உண்டான தலைவலி எல்லாம் வெந்நீர் சாப்பிடுவதால் குணமடையும்.

* இஞ்சியைப் பல் வலிக்கும் இடத்தில் வைத்துக்கொண்டு இஞ்சிச்சாறு அதில் வரும்படி பல்லினால் அழுத்தமாக கடித்துக் கொண்டால் பல்வலி நிமிஷத்தில் மறைந்துவிடும்.

* "கேஸ்டிக் அல்சர்' தொந்தரவு உள்ளவர்கள் வயிறு சம்பந்தமான எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அதற்குத் தினம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலைக் கொழுந்தை சாப்பிட வேண்டும்.

* வாய்ப் புண்ணிற்கு பச்சரிசி, பயத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், நிறைய பூண்டு உரித்துப் போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட வேண்டும்.

* பேதியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் வெந்தயத்தை நன்றாக கறுப்பாக வறுத்து, நைஸôக பொடி செய்து ஒரு தேக்கரண்டி பொடியில் சிறிது தேன் விட்டுக் கலந்து உட்கொள்ள சரியாகிவிடும்.

* திராட்சைப்பழமும், உலர்ந்த திராட்சையும் ஜீரண சக்தியை வலுப்படுத்தி குடல்புண், சிறுநீரகம் முதலியவற்றைச் சுத்தப்படுத்துகிறது.

* மலச்சிக்கல் உடையவர்கள் இரவில் பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது உகந்தது