வீட்டு வைத்திய குறிப்புகள்:-
சீரகம்:
சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கேரளத்து மக்கள் எல்லோரது வீட்டிலும் இந்த சீரக வெள்ளம் இருக்கும்.
தொண்டைக்கட்டிற்கு:
அதிமதுரத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி இடித்து சலிக்கவும். ஒரு வேலைக்கு அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
அஜீரணம்:
அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரனக் கோளாறுகள் மறையும்.
கால் ஆணிக்கு:
மருதாணி இலைகள், சிறிது வசம்பு, சிறிய மஞ்சள் துண்டு மூன்றையும் நன்கு அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து கால் ஆணிடில் வைத்து ஒரு துணியால் கட்டி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகி விடும்.
தேமல் மறைய:
புடலங்காயை 6 அங்குலத்திற்கு வெட்டி, குடலை நீக்கி, சீயக்காயை அரைத்து அதனுள்ளே வைத்து, வெய்யிலில் ஒரு நாள் காய வைக்கவும். மறு நாள் அதை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி இ மணி நேரம் ஊறவைத்து வெந்நீரில் குளிக்கவும். தொடர்ந்து இது போல செய்து வந்தால் சில தினங்களில் தேமல் மறைந்து விடும்.
தலைவலி:
ஒரு ஸ்பூன் கிராம்பையும் ஒரு சிட்டிகை கல் உப்பையும் அரைத்து பற்று போட்டால் தலைவலி சரியாகும்.
விக்கலுக்கு:
சீனியை வாயில் போட்டு மெதுவாக உறிஞ்சவும். விக்கல் நின்று விடும். 2 நிமிடம் கழித்து மறுபடியும் இது போல செய்யலாம். குழந்தைகளின் விக்கலுக்கு விரலை நீரில் நனைத்து சீனியில் தொட்டு வாயில் வைக்கவும்.
மலச்சிக்கல்:
வெங்காயத்தையும் முள்ளங்கியையும் அடிக்கடி சமையல் சேர்த்துக்கொள்ளவும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு எடுத்து பவுடர் செய்து ஒரு ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும்.
No comments:
Post a Comment