Time Management of Human Body

24 மணி நேரம் உழைக்கும் மனித உடல்  
நமது  உட‌ல் ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம் வகையில் இருக்கும்.  தினம் நாம் உழைக்கும் நேரத்தை கணக்கிட்டால் அதிகபட்சம் 1௦ மணி நேரம் உழைப்போம், 6 மணி நேரம் மற்ற வேலைகளை செய்வோம், 8 மணி நேர ஓய்வு நமக்கு தேவை, இது நம் 24 மணி நேரத்தை உபயோகிக்கும் முறை.   ஆனால் நமது உடல் மட்டும் ஓய்வு இல்லாமல் 24 மணி நேரமும் தினம் வேலை செய்து கொண்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான தகவல் இல்லையா?
நமது உடல் உள் உறுப்புக்களை 12 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியே 2 மணி நேரம்  ஒதுக்கி அழகாக  திட்டமிட்டு  வேலை செய்கிறது, அதாவது ஒரு உறுப்புக்கான இரண்டு மணி நேர வேலை முடிந்ததும் அடுத்த உறுப்புக்கு மாறி விடுகிறது.  நம் உடல் பிரித்து வைத்த 12  உடல் உறுப்புகளையும் வேலை நேரத்தையும் வரிசையாக பார்த்தல் எளிதில் புரியும்.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்
இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.  தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.  உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். இந்த நேரத்தில் சாப்பிடும் உணவு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்
காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.  நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்
இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம் 
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்
பகல் நேரப் பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber.  இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் ஹீட்டர் நேரம்
டிரிப்பிள் ஹீட்டர்  என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள பகுதிகளை மூன்றாக பிரிக்கும் பாதை. அதாவது சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், கழிவு மண்டலம் ஆகும்.   இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்
இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்
இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

Seated Cammanam – சம்மணங்கால் போட்டு அமர்வோம்

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் (சுக ஆசனம்)

ஒரு நாள் பொழுதில் நாம் அதிகமாக காலை தொங்க வைத்து அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில், பேரூந்தில், இரயில் வண்டிகளில் பயணிக்கும் பொழுது, சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், நாற்காலியில் அமரும்போது என்று நாம் அதிக நேரம் காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம்.
எப்படி அமர்வது 
காலைத் தொங்க வைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். ஏனென்றால், இரத்த ஓட்டமானது இடுப்புக்கு கீழே  செல்லாமல் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறும். சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
சம்மணம் போட்டு அமர்வதால் ஏற்படும் நன்மைகள் 
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம். மேற்கத்திய கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட மேற்கத்திய கழிவறையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ம்மணமிட்டு அமருவோம் 

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் டைனிங் நாற்காலி மேல் காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்…
மேற்கத்திய வகை கழிவறைகளை தவிருங்கள்…
கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்…
சம்மணமிட்டு அமருவோம் உடல் நலம் காப்போம் !!

God is life – உயிரே கடவுள்

உயிர் என்றால் என்ன?
உடலை இயங்க வைக்கும் எதோ ஒன்று,  இறப்பின் பின் அது இல்லை,  நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம் இல்லையேல் நாம் சவம்,  உடலும் உயிரும் சேர்ந்திருந்தால தான் பிரயோஜனம், பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை, உடலை விட உயிரே முக்கியமானது. உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.
பிறப்பு என்றால் என்ன?
ஒருவன் எப்படி பிறக்கிறான்? ஏன் பிறக்கிறான்? பிறப்பு என்றால் என்ன?   அதுதான் “தேவ ரகசியம்”.   ஆணும் பெண்ணும் சேர்ந்தால் உடனே  குழந்தை பிறந்து விடுமா? நடக்காது, அதற்கான காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.   இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.  விஞ்ஞான வளர்ச்சியால், டெஸ்ட் ட்யூப் குழந்தை உருவானது. அதுவும் பல முயற்சிக்கு பின் குழந்தை உருவாகிறது.  விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே.  இன்றைய உலக வளர்ச்சிக்கு விஞ்ஞானத்தின் பரிணாமமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
இறப்பு என்றால் என்ன?
பூமியில் மனிதர்கள் எப்படி  எங்கிருந்து வந்தார்கள் எங்கே போனார்கள்,  பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள், பின் இறந்துபோயினர்.  இறந்து அவர்கள் போனது எங்கே? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே, அப்படியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையா?  உயிர் உள்ள  உடல் இருந்தால் பிரயோஜனம், உயிர் இன்றி உடல் இருந்தால் ஜடம்.  மனிதனுக்கு  உயிர்தான் பிரதானம்,  உயிர் தான் பிறக்கிறது உடலைக் கொண்டு,  உடலை விட்டு உயிர் பிரிவதே மரணம்.
நம் உடல் எப்படி வந்தது?
நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே. அன்னையின் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரம், அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் கருவாகி பிண்டம் உருவாகிறது.  மாதந்தோறும் வெளியாரும் உதிரத்தை தீட்டு என்கிறோமே, அப்படியானால்  நம் தாயின் தீட்டு தான் நாம்.  மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே. ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர்சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால் தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம். ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே இணைந்தாலே சக்தி பிறக்கும், இயக்கம் ஆரம்பமாகும்.
உயிர் எப்படி வந்தது
தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல் தான் உருவாகிறது, உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் மூன்று மாதத்திற்கு பிறகு வந்து சேர்க்கிறது,  இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் இறைவன் வகுத்து வைத்தது,   இதுவே தேவரகசியம்.  உயிர் இந்த காலத்தில் வருகிறது – வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிந்தவர் யாவரும் இல்லை.  உயிர் எங்கிருந்தது? எப்படி? உடலினுள் பிரவேசித்தது,  உடலில் எங்கு எந்த வடிவில் இருக்கின்றது? இதை அறிந்தவன் ஞானி, அவனே சித்தன்!!
இறைவன் செய்யும் அதிசயம்
ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே கணக்கு (27 நட்சத்திரங்களே 1 மாதம்). 10 மாதம் என்றால் 270 நாட்களே. பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி. கன்னிக்குடத்திலே  குளத்திலே மிதந்து கொண்டு,  தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சி வளரும் சிசுவை படைத்தவன் பரமன், தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன்.  நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இது போன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டுவிடுகிறான். எல்லாம் அவனின் திருவிளையாடல்.
இறைவன் ஒருவனே
பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டுகின்றான்.  ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே.  எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன். எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான், எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே, மனிதனை படைக்கும் போது அவர் பிரம்மா, காக்கும்போது அவர் விஷ்ணு, அருள்புரியும் போது அவர் சதாசிவன்,  அவரே அழிக்கிறார் அப்போது அவர் ருத்திரன்.  ஆக இறைவனே எல்லாம் புரிகிறார்! எல்லாமே அவன் செயலே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது! அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையாடல்களே.
உயிரே கடவுள் 
இறைவன்  அண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவன்,  அணுவுக்குள் அணுவாக ஒளிர்பவன், மனித உடலினுள் பலகோடி அணுத் துகள்களில் இல்லாமலா  போவான், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”.  இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்.  “அகம்பிரம்மாஸ்மி”. இறைவன் தன்னை சிறுஜோதியாக குறுக்கிக் கொண்டு உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார். கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்,  கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் கடவுளை காண்பது அரிது.  கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் எளிதில்,   வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம் இறைவன் கூப்பிடு தூரத்தில் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள். நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்.
நம்மை நேசிப்போம் கடவுளை காண்போம்

Spatikamalai – ஸ்படிகமாலை

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது?
பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.
ஸ்படிகமாலை கோர்க்கும்முறை 
ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது). தனித்தனியாக அணிந்து கொள்ளலாம்.  தரமற்ற ஸ்படிகமணியை  மாலையாக கோர்க்கக் கூடாது. ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் கோர்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். 
ஸ்படிகமணி மாலை அணிவதால் என்ன பயன்?
மனிதர்களாகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை  சராசரியாக 21,600 மூச்சாகும். ஆனால், இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள்.  ஸ்படிக மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள். அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும். முழுமையான கவசமாக ஸ்படிக மணி விளங்குகிறது. இதனால், தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.
ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்
  • ஸ்படிக மாலை உடல் சூட்டை சீரான  சரியான அளவில் இருக்க வைக்கும்.  
  • நமது மனதை அலைபாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும். ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.
  • உள்ளச்  சூட்டை தணிக்கும் ஆற்றல் ஸ்படிகத்திற்க்கு உள்ளது. 
ஸ்படிக மாலை அணிய  விதிமுறைகள் ஏதாவது கடைப்பிடிக்க வேண்டுமா?
ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள், நாஸ்திகர்கள் எல்லோரும் அணியலாம்.  இறைவனின் படைப்புகள்  அனைவருக்கும் பொதுவானது, அதனால்,  நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகமாலை எல்லோரும் அணிய உகந்தது.   ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மற்ற அனைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். குளிக்கும் பொழுது, கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது. ஸ்படிக மாலை அணிவோர்கள் அசைவம் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழும் சாப்பிடலாம், ஸ்படிகமாலையை தொடர்ந்து அணியும் போது உங்களுக்கு அசைவம் சாப்பிடும் ஆசையை நிறுத்த வைக்கும்.  
ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது?
ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து விதமான தரம் இருக்கிறது. ஸ்படிக மாலையில் நீங்க கை வெத்தவுடன் ஒரு வித குளிர்ச்சியை உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது. உயர்ந்த வகை ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் ஸ்படிகம் கண்ணுக்கு தெரியாது, நீரோடு நீராக ஒன்றி இருக்கும். முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன. முதல் தர ஸ்படிகமணி மாலைதான் நல்ல பலனைத் தரும்.  பார்த்துக் கொண்டே இருக்கச் செய்யும் வசீகர தன்மை ஸ்படிகத்திற்கு  உண்டு. முக்கியமாக துல்லியமற்ற, ஊடுருவும் தன்மையற்ற, வெள்ளையாக இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும்.
ஜெபம் செய்ய பயன்படுத்தலாம் 
தெய்வ பக்தி உள்ளவர்கள். 108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வைத்து உங்களுக்கு பிடித்த இறைவனின் பெயரை, கிடைக்கும் நேரத்திற்க்கு தகுந்தார் போல் ஜெபம் செய்யலாம்.  உங்கள் லட்சியம் மற்றும் ஆசை  என்னவோ அதை நிறைவேற்ற விரும்பினால், அதிகாலையில் எழுந்து மொட்டை மாடி போன்ற திறந்த வெளியில், உங்கள் லட்சியம் மற்றும் ஆசை  என்னவோ, அதையே திரும்ப, திரும்ப ஜெபம் போல் ஸ்படிக மாலையை வைத்து செல்லுங்கள்.  உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தால் நிறைவேறும்,   இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் (Positive Thoughts) அதிகரிக்கும். 
நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் நம் மனம் ஒருநிலைப்பட வேண்டும். அமைதியான அதிகாலை வேளை தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.  இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்க. 
அணிபவர்கள் கவனிக்கவேண்டிய விதிமுறைகள் 
ஸ்படிகமாலையை வாங்கி உபயோகப்படுத்தும் முன் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது சுத்தமான நீரில் ஊறவிட வேண்டும் அதேபோல்  ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் அடுத்தவர் மாற்றி அணியும் போது நீரில் 3 1/2 மணி நேரம் ஊறவிட வேண்டும்.  ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது தான் பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். 
காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருக்கும்.  இதை அணிந்த  தருணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறைவதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.
ஆன்மிகத்தில் ஸ்படிகத்தின் முக்கியத்துவம்
ஆன்மிகத்தில் ஸ்படிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது அபரிதமான ஈர்ப்பு சக்தி ஏற்படும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்வது நல்ல பலனைத் தரும். முக்தி லிங்கம்- கேதார்நாத், வரலிங்கம்-நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம்-சிருங்கேரி, யோகலிங்கமாக சந்திரமௌலீஸ்வரராக-காஞ்சியில் ஈசன் அருள்பாலிக்கிறார். இவையெல்லாமுமே ஸ்படிக லிங்கங்கள்தான். தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.
ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மேரு. இந்த மேரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மேருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்கள்:
இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். 

Tuesday – செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை செய்யக்கூடாதது 

செவ்வாய்க்கிழமை முடி வெட்டவோ, ஷேவிங்கோ, நகம் வெட்டவோ செய்தல் வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா,  இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் நாம்  அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் அந்த காரியங்களை செய்வோம். இருப்பினும், பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணத்தை பார்ப்போம்.  
செவ்வாய்க்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமி தினம்
இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய்க்கிழமையானது துர்க்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.
செலவு மற்றும் வீட்டை சுத்தம் செய்தல் கூடாது
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை, இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதால், இந்நாளில் நம்மிடம் உள்ள பணத்தை மற்றவருக்கு கொடுத்தால், லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு சென்றுவிடும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.
இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
உடல் சுத்தம் கூடாது 
உடல் சுத்தம் என்றால் குளிக்கக்கூடாது என்று அர்த்தம் இல்லை, முடி வெட்டுதல்,   ஷேவிங் செய்தல்.  நகம் வெட்டுதல் போன்ற செயல்களைக் குறிக்கும்.  
ஜோதிடத்தின் படி
ஜோதிட சாஸ்திரம் இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் 8 மாதங்கள் குறைவதாக சொல்கிறது.  செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் பகவான் நம்மை ஆட்கொள்கிறாராம், மேலும் மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்
முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் நம்மை ஆளுகிறது, ஆனால் சனி பகவான் தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதனால் செவ்வாய்க்கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து,  செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் மேற்கூறிய செயல்களை செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
இதுப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், நம் முன்னோர்கள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி,  இதை நம்பி பின்பற்றி வந்தார்கள். நாமும் அறிவியல் பூர்வமாக சிந்தித்து இரத்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் இருக்க பின்பற்றலாம் .
வாழ்க வளமுடன்