கண் பார்வை வலுப் பெற..!

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைப் பொருட்களை நன்றாகப் பொடித்து, திரிபலா சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூரணத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டு அதற்குப் பிறகு பசும்பால் சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. சுமார் 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 கிராம்) த்ரைபல க்ருதம் எனும் உருக்கிய நெய் மருந்து, அரை ஸ்பூன் சுத்தமான தேன் என்ற விகிதத்தில் சதும்ப குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வந்தால், கண் கோளாறுகள் நீங்குவதோடு பார்வையும் நன்றாகத் தெரியும்.
அதிக நேரம் தரையில் குனிந்து அமர்ந்து ஹோம் ஒர்க் செய்வது, படுத்துக் கொண்டு பாடப் புத்தகங்ளைப் படிப்பது, அதிக வெளிச்சமில்லாத அறையில், தனக்குப் பின்புறம் தலைக்கு மேல் விளக்கு எரியாமல், முன்புறம் எரியும் விளக்கில் படிப்பது, பிள்ளைகளுக்குச் சளி பிடித்துவிடக் கூடாதே என்ற பயத்தில் தலைக்குச் சுடு தண்ணீர் விட்டுக் குளிப்பாட்டுவது, நூடூல்ஸ், பாஸ்தா, பர்க்கர், பேல்பூரி, பானிப்பூரி, மசாலா சுண்டல், சிப்ஸ் போன்றவற்றைப் பிள்ளைகள் ஆசைப்படும்போதெல்லாம் வாங்கித் தருவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை.
உணவாக முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வல்லாரை, மிதிபாகல் பிஞ்சு, வெண்டை, மணத்தக்காளி, வற்றல், கேரட், முட்டை, பசும்பால் அதிகம் சேர்ப்பது நலம். மேலும் பயறு, கடலை, துவரை, உளுந்து, காராமணி, எள்ளு, மொச்சை முதலிய பருப்பு வகையும் மிளகு, சுக்கு, பெருங்காயம் (சிட்டிகை) முதலிய ஜீரண உதவிகளையும் காலை உணவாக ஏற்பது பிள்ளைகளுக்கு மிகவும் நல்லது. தாமதித்துச் செரிக்கும் உணவுப் பொருட்களாகிய கிழங்குகள், பழ வகைகள், எருமைத் தயிர், கீரை போன்றவை மதிய உணவிலும், பகல் பொழுதிலும் சேர்த்தால் ஏற்படும் வயிற்று மந்தம் வெயிலின் சூட்டாலும், விளையாட்டாலும் பாதிக்காது. அவரைப் பிஞ்சு, அத்திக்காய், பசுவின் பால், கடைந்த மோர், முருங்கைப் பிஞ்சு, துவரம் பருப்பு, மணத்தக்காளி வற்றல் போன்றவை இரவில் சாப்பிட உகந்தவை.
"ஆலோசகம்’ என்றொரு பித்தம் கண்ணிலிருந்து செயல்படுகிறது. பார்வை தெளிவாக இருப்பதற்கு இந்த பித்தம் உதவுகிறது. காரம், புளி, உப்பு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்தால் இந்தப் பித்தம் கெட்டுவிடும். கண்பார்வை மங்கும். அதனால் இந்தச் சுவைகளை உணவில் குறைத்து வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற துவர்ப்புச் சுவையும், கசப்பான பாகற்காய், அகத்திக் கீரையும், இனிப்பான பொருட்களையும் பிள்ளைகளுக்குச் சாப்பிடும்படி பழக்கினால் இந்த ஆலோசக பித்தம் நன்றாகச் செயலாற்றும்.
கண்களில் வெளிப்புறம் உளுந்து மாவை வரம்பு கட்டி, கண்களில் உள்ளே மூலிகை நெய் மருந்தை ஊற்றி நிரப்பி, கண்களைத் திறந்து மூடச் செய்யும் நேத்ர தர்ப்பணம் எனும் சிகிச்சை முறை, புடபாகம், பிடாலகம், ஆஸ்சோதனம், அஞ்சனம் போன்ற கண் சிகிச்சை முறைகளால் கண்பார்வைக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைமுறைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
உள்ளங்கால் நடுப்பகுதியில் "தலஹ்ருதயம்’ என்று ஒரு மர்ம ஸ்தானமிருக்கிறது. அந்த இடத்தில் பசு நெய்யை உருக்கித் தொடர்ந்து பூசி வந்தால், கண்பார்வை நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நயனாமிருதம் என்ற கண்சொட்டு மருந்தும் உபயோகிப்பது கண்களுக்கு வலுவைக் கூட்டும். முதலில் விட்டவுடன் எரிச்சலைத் தரும். ஆனால் அதன் பிறகு குளிர்ச்சியைத் தரும். வீட்டில் சாதா உப்புக்குப் பதிலாக இந்துப்பு சமையலுக்கு உபயோகித்து வந்தால் கண்களுக்கு நல்லது. பொதுவாகவே உப்பு கண்களுக்குக் கெடுதல். ஆனால் இந்துப்பு இதற்கு விதிவிலக்காகும்

No comments: