உலகப் பழமொழிகள்.

  • நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்; வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;  நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்; துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்; உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-இந்தியா.
  • உன்னைப் புண்படுத்துவது எது என்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.
-ஆப்பிரிக்கா.
  • மணவாழ்க்கை என்பது முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.
-அரேபியா.
  • பயத்தைக் குறை-நம்பிக்கையைப் பெருக்கு! உணவைக்குறை-உழைப்பைப் பெருக்கு! குடியைக் குறை-மூச்சைப் பெருக்கு! பேச்சைக் குறை-செயலைப் பெருக்கு! வெறுப்பைக் குறை-அன்பைப் பெருக்கு! அனைத்து நன்மைகளும் உனக்கே.
-ஸ்வீடன்.
  • துறவிகள் மெலிந்தால் அழகு. நான்கு கால் விலங்கினங்கள் கொழுத்தால் அழகு. மனிதர்கள் படித்தால் அழகு. பெண்கள் மணந்தால் அழகு.
-மியான்மர்.
  • தெரிந்தவையெல்லாம் சொல்ல வெண்டுமென்பதில்லை! கேட்டதையெல்லாம் நம்ப வேண்டுமென்பதில்லை! முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டுமென்பதில்லை.
-போர்ச்சுக்கல்.
  • பூமியில் பயனற்ற காரியங்கள் நான்கு: பலனற்ற மண்ணில் பெய்த மழை; சூரிய வெளிச்சத்தில் வைத்த விளக்கு; குருடனை மணந்த அழகி; நன்றி கெட்டவனுக்குச் செய்த நற்காரியம்.
 -அரேபியா.
  •  மூன்று உயிரினங்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காலத்தைக் கழிப்பவை. அவை; பூனைகள், ஈக்கள்; காதலிகள்.
- பிரான்ஸ்.
  •  தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்துவிட்டால் அழகே தேவையில்லை.
- ஆப்கானிஸ்தான்.
வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு தேர்வு. ஆனால், அதன் முடிவுகளை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

No comments: