சூரியன்

          பெரிதாக அலட்டிக்கொள்ளாமலே செல்வம் குவிகிறது.. அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது.. இவருக்கு ராஜயோகம் அடிக்கிறது.. என்று பலரும் சொல்லக் கேட்கிறோம். அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள் தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி மற்றும் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகிய ஒன்பதுமே நவக்கிரகங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு. இந்த கிரகங்கள் தரும் பொதுவான பலன்கள் என்ன, அவரவர் ஜாதகப்படி தரும் பலன்கள் என்ன, ஒவ்வொரு கிரகத்துக்கும் என்ன கிழமை, தேதிகள், எண், நிறம் ஏற்றது என்பதை இனி பார்க்கலாம்.

சூரியன்
நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம். ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம். இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை. தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.

சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: ஞாயிறு
தேதிகள்: 1, 10, 19, 28
நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
ராசி: மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி
நிறம்: சிவப்பு
ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
தானியம்: கோதுமை
ஆடை (வஸ்திரம்): சிவப்பு.

ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும். நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம். சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம். லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள். சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது.

பிறந்த லக்னமும் சூரியனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி & பெரிய பதவி
ரிஷப லக்னம்/ராசி & மாபெரும் யோகம்
கடக லக்னம்/ராசி & பேச்சாற்றலால் யோகம்
சிம்ம லக்னம்/ராசி & அதிகார ஆளுமை
விருச்சிக லக்னம்/ராசி & தலைமைப் பதவி
தனுசு லக்னம்/ராசி & நல் பாக்ய யோகம்
மற்ற லக்னம்/ராசிகள் & சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம்.

வழிபாடு, பரிகாரம்
சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’ அல்லது ‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’ என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். சென்னை அருகே கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும்.

No comments: