விஸ்வரூபம்: சில காட்சிகளை நீக்க கமல் முடிவு

சென்னை: விஸ்வரூபம் தொடர்பாக சில காட்சிகளை நீக்க நடிகர் கமல் முன்வந்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய கமல், விஸ்வரூபம் தொடர்பாக சில காட்சிகளையும், வார்த்தைகளையும் நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டை ஒப்படைப்போம்: கமல் ரசிகர்கள்

மதுரை: கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் தங்களது ரேஷன் கார்டை அரசிடம் ஒப்படைப்போம் என கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரையில் கமல் ரசிகர்கள் கூறுகையில், "நடிகர் கமல் விஸ்வரூபம் படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதை முஸ்லிம்கள் சிலர் எதிர்த்து வருகின்றனர். அவர்களும் படம் பார்த்தால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். விஸ்வரூபம் படம் தொடர்பாக இன்று பேட்டியளித்த கமல், தமிழகத்தை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளார். அவர் தமிழகத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாங்கள் எங்கள் ரேஷன் கார்டை அரசிடம் ஒப்படைப்போம்" என்று தெரிவித்தனர்.

கமல் வீடு முன்பாக திரண்ட ரசிகர்கள்

சென்னை: நடிகர் கமல் தமிழகத்தை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்ததையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீடு முன்பாக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும், சிலர் அழுதபடியும் இருந்தது பார்ப்போரை மனம் கலங்க வைத்தது.

மதுரை தியேட்டர் மீது கல்வீச்சு

மதுரை: மதுரையில் விஸ்வரூபம் திரையிடப்படவிருந்த தியேட்டர் மீது கல்வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள தியேட்டர் ஒன்றில், விஸ்வரூபம் திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இன்று அந்த தியேட்டர் மீது கும்பல் ஒன்று கல்வீச்சில் ஈடுபட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலுக்கு விஜயகாந்த் ஆதரவு

சென்னை: கமலை தமிழக அரசு புண்படுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் படப்பிரச்னையில், தமிழக அரசின் அணுகுமுறை சரியில்லை. உலகம் போற்றும் ஒரு கலைஞன், இந்தநாட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன். மத சார்பற்ற நாட்டைக்கண்டு அங்கு சென்று குடியேறுவேன் என அவர் கூறியுள்ள வார்த்தை தமிழகத்திலுள்ள அனைவரின் மனதையும் ரணமாக்கியுள்ளது. கமல்ஹாசனை தமிழக அரசு புண்படுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது . விஸ்வரூபம் படத்தை திரையிடக்கூடாது 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர். அப்படியானால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை முதல்வர் ஒத்துக்கொள்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என கூறியுள்ளார்.